வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில் தமிழர்களுக்கென்றே தமிழர் ஆட்சி!

ராஜிவ் ஆட்சிக்கு வந்த புதிதில் கொஞ்சம் வேடிக்கையாகவும் கொஞ்சம் அதிர்ச்சியாகவும்தான் இருந்தது. இடதுசாரிகளை ஒரு சிறுபிள்ளை மனோபாவத்தில் அவர் விமரிசித்ததும் – கூடவே கைகோர்த்து அலையும் நண்பர்கள்தாம் அவரையும் ஆட்சியையும் இயக்குகிறார்கள் என்ற செய்திகளும்….
‘என்ன நடக்கிறது இங்கே!?’
அருண் நேரு, அருண் சிங், இன்னும் நான் பெயர் மறந்துபோன சிலரும்…ராஜீவுடனேயே வலம் வந்தார்கள்.
காங்கிரஸ் கட்சியில் குறிப்பாக மூத்தத் தலைவர்களிடம் இது விசனத்தை உண்டுபண்ணியது.
ஆனால் நிகழ்ந்ததென்னவோ, ஓராண்டுக்குள் ராஜிவிடம் மாறுதல்கள்….!

நண்பர்கள் சேர்க்கை குறைந்தது. ஆட்சிப்பணிகளில் அவர்களது தலையீடு அகற்றப்பட்டதாக ஊடகங்கள் சேதி சொல்லின.
இடதுசாரிகள் குறித்த கருத்துக்கு பகிரங்க வருத்தம் வெளியிட்டார் ராஜிவ். ஜோதிபாசு,சோம்நாத் சாட்டர்ஜி முதலிய இடதுசாரித் தலைவர்களை மிகுந்த மதிப்புடன் குறிப்பிட்டார். தன் குடும்ப உறவினர்கள் போன்றவர்கள் என்றார்.
இதைத் தொடர்ந்தே-
பாரதத்தை இருபதாம் நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்வேன் என்கிற நம்பிக்கை முழக்கமும் வெளிவந்தது….
தகவல் தொழில்நுட்பம் – கணிப்பொறி மயம் என்று விஞ்ஞானப் பாய்ச்சலுக்கு நாட்டை ஆயத்தப்படுத்துகிற பணிகளில் முனைப்புடன் இறங்கினார்.
மக்களுக்கு அதிகாரம் என்கிற ‘பஞ்சாயத்துராஜ்’ நடவடிக்கைகளை அவரது பெரும் சமூகப் புரட்சியாகவே என்னால் கண்ணுற முடிந்தது. ‘அதிகார வர்க்கத்தை ‘க் கடந்து அந்தத் திட்டம் மக்களுக்குப் போய்ச் சேர முக்கியது – முனகியது.
சிகப்புநாடா’ தன் இறுக்கத்தை தளர்த்தவிடாது என்பதை ராஜிவ் உணர்ந்தே இருந்தார். ஆயினும் வண்மையுடன் முயன்றார்.
அவரது இவ்விரு முயற்சிகளுக்கும் இடதுசாரிகள் ‘போதிய’ ஆதரவைக் காட்டவில்லை. இந்திராகாந்தியின் இருபது அம்சத் திட்டத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி காட்டிய ஆதரவின் கால் சதவீதத்தையாகிலும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த ‘தேசப் பாய்ச்சலுக்கு’ நல்கியிருக்கவேண்டும்.
இந்திய இலங்கைப் பிரச்சனையில் ராஜீவின் செயல்பாடுகள் எத்துணை வலிவுடையவையாகவும், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வுக்கான பெரும் நகர்வாகவும் அமைந்திருந்தது என்பதை – அன்றைய சூழலைவிட – இன்றைக்கு வெகு நிதானமாக உணரமுடிகிறது.
இலங்கைத் தமிழர்களும் இங்குள்ள தமிழர்களும் –
‘இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 13ஆவது சட்டத் திருத்தத்தையாவது இலங்கை அரசு நிறைவேற்றவேண்டும்’ / ‘வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிக்கக்கூடாது’
என்றெல்லாம் கொஞ்சநாள்கள் முன் மன்றாடியபோது –
‘தமிழர்க்கு அதிகார பரவல்’ – ’13ஆவது சட்டத் திருத்த ஒப்புதல்’ – என்கிற ஷரத்துகளையெல்லாம் கடந்து –
வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில் தமிழர்களுக்கென்றே தமிழர் ஆட்சி!
எத்துணை பெரிய சாதனை இது?
எல்லாம் ஒரு வடிவம் எடுக்கிற நிலையில்…
ராஜீவையும்-
இந்தியாவின் நிலைத்தன்மையையும்-
இலங்கைத் தமிழர் வாழ்வுக்கான நம்பிக்கை ஒளியையும் –
ஒன்றுசேர இரத்தக்குளத்தில் அழுத்தி முடித்துவிட்டார்கள்!
அனைத்தையும் இழந்து நிற்கிற வேதனையிலாவது –
உண்மைகள் உறைக்கட்டும்
இந்தியாவிலும்! இலங்கையிலும்!!