பெண்களின் வாழ்க்கை விடுகதையாகவே தொடருமா?

(Niroshini)
பெண்கள் மீதான வன்முறை, ஒடுக்குமுறைக்கு எதிராக கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக மேற்கொண்ட போராட்டங்களின் விளைவால், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் ஓரளவுக்குக் குறைந்ததாகத் தென்பட்டாலும், அது தொடர்கதையாகவே இருக்கின்றது. பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளினதும் அதனால் பெண்கள் முகங்கொடுக்கக்கூடிய சவால்களினதும் வடிவங்களில் மாற்றம் பெற்றதே ஒழிய, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலையாக மாற்றம் பெற்றுள்ளது.

உலகளாவிய ரீதியில் மூன்றில் ஒரு பெண், மன ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் கணவர் மற்றும் மற்றைய சிலரால் ஒடுக்குமறைக்கு ஆளாக்கப்படுவதோடு, இது உலகளாவிய ரீதியில், 35 சதவீதத்தை வகிக்கிறது என்று, உலக சுகாதார ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உலகளவில் 2016ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பெண்களில் 38 சதவீதமானவர்கள், அவர்களது கணவன், காதலன், அல்லது துணைவராலேயே கொல்லப்பட்டனர்.

மேலும், பெண்கள் வன்புணர்வுக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்படுவதால், அவர்களது குடும்பம், கல்வி, அவர்களது பிள்ளைகள் போன்ற அனைவரும் பாதிக்கப்படுவதோடு, சில சமயங்களில் மன அழுத்தத்தில் இருந்து வெளியேறுவதற்காக, மது பாவனை உள்ளிட்ட தீய பழக்கங்களுக்குப் பெண்கள் அடிமையாவதோடு, சிலர், தமதுயிரை முடித்தும் கொள்கின்றனர்.

உலகில் தற்போதுள்ள பெண்களில் சுமார் 700 மில்லியன் பெண்கள், தமது 18 வயதுக்கு முன்னரேயே திருமணம் முடித்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 250 மில்லியன் பேர், தமது 15 வயதுக்கு முன்னர் திருமணம் முடித்துவைக்கப்பட்டனர் என்று, தரவுகள் குறிப்பிடுகின்றன.

இதனால், அவர்களுக்கு பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுவதற்கும் பிரசவத்தின்போது சரியான உடல் நிலையை பேணுவதற்கும் முடியாமல் போகின்றது. மேலும், திருமணமான பெண்களில் 150 மில்லியன் பெண்கள், பலாத்காரமாக உடலுறவில் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

பெண்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அறிக்கையில், இலங்கையில் 30 – 40 சதவீதமான பெண்கள், ஏதாவது ஒருவகையில் பாலியல்ரீதியலான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இவர்களுள் 60 சதவீதமான பெண்கள், வன்முறைகளால் பாதிக்கப்பட்டு, தற்போதும் அதனால் மன அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பஸ்களிலும் ரயில்களிலும் நடைபாதையிலும், பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது, வாடிக்கையாக அமைந்துள்ளது என, அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 21ஆம் நூற்றாண்டில், பெண்கள் அறிவு ரீதியிலும் தொழில் ரீதியிலும், ஆண்களுக்கு நிகராக சம அந்தஸ்த்தில் உள்ளனர். பெண்களின் கல்வியால் இலங்கை, பல விதத்திலும் ஏனைய தெற்காசிய நாடுகளை விட முன்னேறியிருக்கின்றது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், வடக்கிலும் பெண்கள் தமது அறிவு, திறன்களை விருத்தி செய்துள்ள நிலைமைளைக் காணக்கூடியதாக உள்ளது. என்னதான் பெண்கள் பல துறைகளில் வளர்ச்சி அடைந்து வந்தாலும், கலாசாரம், சமூகம், பொருளாதாரம், அரசியல் என்ற அத்தனை அம்சங்களிலும், பெண்கள் ஒடுக்குமுறையையும் வன்முறையையும் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக இதில் அதிகம் பாதிக்கப்படுவது, சிறுபான்மையினப் பெண்களே ஆவர்.

கலாசாரம், சமூகம், பொருளாதாரம், அரசியல் என்ற அம்சங்கள் மூலமாக, கிராமப்புற பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக, சிலர் கருதுகின்றனர். அது தவறான கருத்தாகும். கிராமப்புற பெண்களைப் போலவே, நகரப் புற பெண்களும் இந்தப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். அதிலும் ஆண்களின் அதிகாரம் காரணமாக, நகரப்புற பெண்கள், அவசியமற்ற அழுத்தங்களுக்கு உள்ளாகுகின்றனர். இது சகல பதவிகளிலும் இடம்பெறக்கூடும்.

குடும்பச் சுமையைப் பொறுப்பெற்றுக்கொண்டு நகர்ப்புறங்களுக்கு வேலைத்தேடி வரும் பெண்கள், முதலில் சமூகத்தைக் காரணமாக கொண்டு ஒதுக்கப்படுவர். பின்னர் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாவர். வேலைத்தளங்களில், ஆண்களின் அதிகாரம் காரணமாக ஏற்படும் அழுத்தங்களால், வேலையை விட்டு விலக வேண்டிய நிலைமை ஏற்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது.

ஆண்கள், தங்கள் தொழிலில் உயர்நிலை அடைவதை உயர்வாக மதிப்பிடுவதையும் பெண்கள் தங்கள் திறமைகளினால் உயர்நிலையை அடையும் போது அதனை கொச்சைப்படுத்துவதையும் சாதாரணமாகவே அவதானிக்க முடியும். மேலும் பெண்கள், ஆண்களைக் கொண்டு பணிகளை மேற்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வதும், பொதுவான அம்சமாகும்.

இன்றும் எத்தனையோ குடும்பங்களில், திருமணத்தின் பின்னர் குடி போதையில் வருகின்ற கணவனுக்கு முகங்கொடுக்க வேண்டிய சவாலுக்கு, பெண்கள் முகங்கொடுத்து வருகின்றனர். இதனால், பயங்கரமான சூழல், வீட்டிலேயே உருவாவதற்கு இடமுண்டு. இவ்வாறான சந்தர்ப்பத்தில், பெண்களுக்கு உயிர் ஆபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் பலவும் உள்ளன. இது மட்டுமன்றி தாயகத்திலும் சரி வெளிநாடுகளிலும் சரி, பெண்கள் மீதான வன்முறை, குடும்பங்களில் மிகப் பொதுவான ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சமாகவே உள்ளது. மனைவியை அடிப்பது, துன்புறுத்துவது போன்றன எல்லாம், சாதாரண குடும்ப நிகழ்வுகளாக உள்ளன.

அடுத்தது, பெண்கள் எதிர்நோக்கும் இன்னுமொரு சவாலாக, தனியாகப் பயணம் செய்தலிலுள்ள பாதுகாப்பின்மையைக் குறிப்பிடலாம். இரவு நேரங்களில் தனியாக நிற்கும் பெண்களிடம் சீண்டல், அவர்களை பின்தொடர்தல், கடத்தல், வன்புணர்வுக்கு உட்படுத்துதல் என்பன, இன்றும் அரங்கேறி வருகின்றன. வீதியில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையில், சில ஆண்களின் செயற்பாடு, தரம் குன்றி காணப்படுகின்றது.

பட்டப்பகலிலும் தனியாகவோ கூட்டமாகவோ செல்லும் பெண்கள், ஆண்களின் தேவையற்ற சீண்டல்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகிறது. எனவே, பெண்களுக்குக் கெளரவம் வழங்குதல் என்னும் சிந்தனை, சிறுபராயத்தில் இருந்து ஆண்களின் மனதில் உருவாக்கப்பட வேண்டும். பெண்களை, விளையாட்டுப் பொருட்களாக ஆண்கள் நினைக்கக்கூடாது.

கலாசாரம் என்ற போர்வையில், இன்றும் சீதனம் என்ற சமூகக் கொடுமைக்கு, பெண்கள் முகங்கொடுத்து வருகின்றனர். இலங்கையில் மட்டுமல்ல இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியிலும், இது மிக மோசமாகப் பின்பற்றப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து ஊருக்குச் சென்று திருமணம் செய்துகொள்ள முற்படுகின்ற ஆண்கள் கூட, இலங்கையில் இருந்து சீதனத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். அவ்வாறு சீதனத்தைக் கொடுக்காது திருமணத்தை செய்யும் பெண்களின் மண வாழ்க்கை, கேள்விக்குறியாகி விடுகிறது.

இதேவேளை பாலியல் ஒழுக்கம், பெண்களுக்கு மாத்திரம் உரியதாக்கப்பட்டு, அதனைக் காக்கும் பொறுப்பு, பெண்ணுக்கு உரியதாக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில், பெண்கள் மறுமணம் செய்துகொள்வது, இன்றும் கடினமான ஒரு விடயமாகவே உள்ளது. கடந்த கால யுத்தம், வடக்கு – கிழக்கில் பல இளம்பெண்களை விதவைகளாக்கி உள்ளது.

அவர்களது எதிர்காலம், இன்னும் இருண்டதாகவே உள்ளது. அவர்களது உளவியல், உடலியல் தேவைகளை, சமூகம் மதிப்பீடு செய்யத் தவறுகிறது.

பாலியல் ஒழுக்கத்தை மீறுபவர்கள், பெரும்பாலும் ஆண்களாக இருந்த போதும், பழியும் பாவமும், பெண் மீதே சுமத்தப்படுகிறது. ஆண் எப்படியும் வாழலாம், பெண் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கட்டுப்பாடுகள், இன்றும் இருக்கின்றன. இதனால், பெண்களின் வாழ்க்கை, தொடர்ந்தும் சீரழிந்தே வருகின்றது.

தமது திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பெண்கள், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் விவாகரத்தைப் பெற்று விட்டாலும் கூட, விவாகரத்துப் பெற்ற பெண்கள், தமது முன்னாள் கணவன் முதல் பிற ஆண்களிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துகொள்வதில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இதேவேளை, ஒரு சமூகம் முன்னேறுவதற்கு, அச்சமூகத்தில் பெண்களின் கல்விநிலை உயர்வாக இருப்பது மிக முக்கியமானது. ஆனால் கல்வி என்பது, ஆணுக்கே அத்தியாவசியமானது என்ற சிந்தனை, தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் இன்னமும் உள்ளது. பெண் என்பவள், ஆணுக்குச் சேவகம் செய்பவளாகவே இன்றும் பரவலாகப் பார்க்கப்படுகிறாள்.

இவற்றையும் கடந்து பல்கலைக்கழகம் சென்றவர்களும் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதில், நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர். கிராமப்புறங்களை எடுத்து கொண்டால், திருமணத்தின் பின் இவர்கள் தொழில் செய்ய அனுமதிக்கப்படாத நிலை காணப்படுகிறது. அதற்கு, தாய்மை மட்டும் காரணம் அல்ல; ஆண்களின் சிந்தனைமுறையுமே காரணமாக உள்ளது.

அவ்வாறு தொழிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டாலும் தையல், கற்பித்தல், கணக்கியல், மருத்துவம் போன்ற குறிப்பிட்ட துறைசார்ந்த தொழில்களுக்கே பெண்கள் பயிற்றப்படுகின்றனர். பெண்களுடைய தொழில் வாய்ப்பு, அதற்கான சௌகரியங்களை ஏற்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு, இன்றும் போதாமையாகவே உள்ளது.

இலங்கையின் அரசியலை எடுத்துக்கொண்டால் பெண்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டே உள்ளனர். உலகின் முதலாவது பெண் பிரதமரை உருவாக்கிய இலங்கை நாடாளுமன்றத்தில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைவாகவே உள்ளனர்.

தமிழ் அரசியல் கட்சிகளில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரிதாகவே காணப்படுகின்றனர். அவ்வாறு இருப்பவர்கள், முக்கிய பொறுப்புகளிலும் இல்லை. சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளில் அனேகமானவற்றில், பெண்கள் பிரதிநிதித்துவம் பற்றிய எவ்வித அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை.

நடந்து முடிந்த இரண்டு உலக யுத்தங்களும், பெண்களுக்குரிய சம உரிமையை வென்றெடுப்பதில் முக்கிய நிகழ்வாக இருந்தன. ஆண்கள், யுத்த முனைக்கு அனுப்பப்பட்ட போது, பெண்கள், ஏனைய அனைத்து தொழிற்றுறைசார் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது, பெண்களுடைய வாழ்நிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. யுத்தம் பெரும் அழிவை ஏற்படுத்திய போதும் அதன் ஒரு பக்க விளைவாக பெண்கள் சுயாதீனமான நிலைக்கு முன்தள்ளப்பட்டனர். ஆனால், தமிழ் மக்கள் மத்தியில், கடந்த 30 ஆண்டு கால யுத்தம், இவ்வாறான ஒரு விளைவை ஏற்படுத்தவில்லை. மாறாக பெண்களை மேலும் கீழ்நிலைக்கே இட்டுச்சென்றுள்ளது.

அரபு உலகில் ஏற்பட்ட புரட்சியில், அரபுலகப் பெண்கள் தங்களையும் இணைத்துக்கொண்டனர். அங்கு இடம்பெறுகின்ற அரசியல் விவாதங்களில் பெண்கள் முக்கிய பங்கேற்றனர். பெண்கள் மீதான ஒடுக்குமுறை மோசமாக உள்ள ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் கூட, பெண்கள் புரட்சிகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், இலங்கையைப் பொறுத்த மட்டில், யுத்தத்துக்குப் பின்னர் பெண்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இவர்கள் யுத்தத்தின் போதும் யுத்தத்தின் பின்னருமான பாதிப்புகள் என வேறுபடுத்திபார்க்க முடியும். யுத்தத்தின் பின்னர் அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் என்று பார்க்கும் போது விசேடமாக, கணவனை இழந்து குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்களின் நிலை, மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை, கணிசமாக வரை அதிகரித்துள்ளது.

மேலும், யுத்ததினால் தமது கணவனை இழந்த பெண்கள், ஏனைய பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விட, மாறுபட்ட நிலையில் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். வடக்கு, கிழக்கில் யுத்தத்தின் பின்னர் பெண்கள் முகம் கொடுக்கும் சமூக, பொருளாதார, கலாசாரப் பிரச்சினைத் தாக்கங்கள், இரண்டு நிலைகளில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அதில் முதலாவது, கணவனை இழந்து தனித்து, தனது குடும்பத்தைக் கொண்டு நடாத்தும் போது ஏற்படும் பிரச்சினைகளும், அதன் மூலம் அவர்களின் நேரடியான பாதிப்புகளும் ஆகும். இரண்டாவதாக, இதன் விளைவால் அவர்கள் சார்ந்த சமூகம் எதிர்நோக்கும் சவால்கள் ஆகும்.

இவர்கள் மீது, குடும்பத்தில் வருமானம் ஈட்டவேண்டிய பாரிய பொறுப்புச் சுமத்தப்படுவதால், தங்களின் இயலுமைக்கேற்ற தொழிலைத் தேடிக்கொள்கின்றனர்.

குறிப்பாக வீட்டு வேலை , கூலித்தொழில் போன்ற முதலீடுகள் இல்லாத தொழில்களை மேற்கொள்கின்றனர். இதனால், போதிய வருமானம் ஈட்ட முடியாத நிலையால், அவர்களது குடும்பம், மேலும் வறுமைநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இது மட்டுமின்றி இவர்கள் பல்வேறு பட்ட பாலியல் தொந்தரவுகள், பாலியல் சுரண்டல்களுக்கும் முகம்கொடுக்கின்றார்கள்.

இவ்வாறானதொரு நிலையில், தற்போது வடக்கில் இவ்வாறான குடும்பங்களை இலக்கு வைத்து, நுண்கடன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, அவர்களை மேலும் கடனுக்குள் தள்ளுவதோடு, கடனைச் செலுத்தாத பெண்களுக்கு, பல்வேறு விதங்களில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, யுத்த சூழ்நிலையின் போது கணிசமான பெண்களின் கணவன்மார், கடத்தப்பட்டும் காணாமல்போயும் உள்ளதால், இவர்களின் நிலை பற்றி உறுதியாகத் தெரியாதும் உள்ளதால், இவர்களுக்கான இறப்புச் சான்றிதழ் அல்லது காணாமல் போனமைக்கான சான்றிதழைப் பெறுவதில் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளார்கள்.

இதனால், தமது கணவன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது தெரியாத நிலையில், சமூகத்தில் பல்வேறு மட்டத்திலான அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர்.

எனவே சமூகமானது, தான் கொண்டுள்ள கலாசார விழுமியங்களை, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரானஆயுதமாகப் பயன்படுத்தாது, அவர்களின் உடல், உள நலன்களையும் அவர்களின் எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டு, கலாசார விழுமியங்களில் மாற்றங்களை கொண்டு வருவதே, தற்போது தமிழ் சமூகம் செய்யவேண்டிய நடவடிக்கையாகும். அதேபோல், பெண்ணென்ற வகையில் தாய்மார், தமது பிள்ளைகளுக்குச் சரியான மனப்பாங்குகளை வழங்கி, தமது பிள்ளைகள், ஏனைய பெண்களுக்கும் கெளரவம் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குதல் வேண்டும். தமது ஆண் பிள்ளைகளைச் சரியான மனப்பாங்குடன் கூடியவாறு, சிறுபராயத்திலிருந்து ஆயத்தம் செய்தல், பிரதானமான பொறுப்பாகும். அவ்வாறு செய்யப்படுமானால், பெண்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளையும் ஒடுக்குமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவரமுடியும் என்பது திண்ணம்.