நாமே பிரிந்தோமா? அல்லது எம்மை பிரித்தார்களா?

அண்மையில் எனக்கு பிரியமான ஒரு பத்தி எழுத்தாளர் கருணை உள்ளம் கொண்ட கரம் தனது பதிவில் வெள்ளையர் போலவே எம்மை சிங்கள தலைமைகள் பிரித்தாள்வதாக எழுதிய கட்டுரை என்னை யதார்த்த சிந்தனைக்கு பின் நோக்கி அனுப்பியது. ஹன்டி பேரின்பநாயகம் – பொன்னம்பலம், செல்வா – பொன்னம்பலம், தமிழரசு கட்சி – சுயாட்சி கழகம். இளைஞர் பேரவை – ஈழவிடுதலை இயக்கம். அமிர்தலிங்கம் – ராஜதுரை. உமாமகேஸ்வரன் – பிரபாகரன், ரத்னசபாபதி – பத்மநாபா. டெலோ – ஒபரோய் தேவன். நாபா – தேவா, உமா – பரந்தன் ராஜன். சங்கர்ராஜி – பாலகுமார் என நீண்டு இன்று சுரேஷ் – சுகு என சுக்கு நூறாக போனபின்…

அப்பத்தை குரங்கிடம் கொடுத்து பிரிக்க சொன்னால் கூட பரவாயில்லை. தங்கள் இருப்பை தக்க வைக்க நரிக்கு நாட்டாமை கொடுத்து கிடைக்கு இரண்டு ஆடு கொடுக்கும் செயலை செய்தது யார்?. பிரிந்து போனது தமிழர்களே. அதை பயன் படுத்தியது சிங்களவர். எய்தவர் நாம் அம்பும் எமதே. வில்லும் எம்கையில். விழுந்ததை எடுத்தவர் மட்டுமே சிங்களவர். குளத்தை கலக்கி கொக்கிடம் கொடுத்தபின் குளறிப் பயனில்லை. முதலில் அவரவர் சுயநலம் விடுத்து பதவி சுகம் துறந்து ஒரு குடையில் வர முடியுமானால் வாருங்கள். இல்லையேல் பிரிவினை ஒப்பாரி தொடர் கதையாகும்.

சாதியம் பிரதேசவாதம் சாகாத வரை சாத்தியம் இல்லை உங்கள் கற்பனை விருப்பம். இருப்பை தக்க வைக்க ஈனப் பிழைப்பை தொடருங்கள் உங்கள் வயிறாவது நிரம்பட்டும். வாக்களிக்கும் மக்களுக்கு அரோகரா போடுங்கள் கூடவே பட்டை நாமம் சாத்துங்கள். சாதிய கொடுமைதான் சி சுப்பிரமணியம் போன்றவர்களை பௌத்த பாடசாலைகள் தேவைக்கு தள்ளியது. இந்திய சாதிய கொடுமைகளை எதிர்த்து அம்பேத்கர் புத்தமதத்தை தழுவினால் அதை சீனாவின் சதி என்று கொள்ளலாமா? அடிமை விலங்கை ஒடிக்க அறிவு பசி தருகிறேன் என அமெரிக்கமிசனரி இலவச கல்வியை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்தது.

கூடவே தங்கள் மதத்துக்கும் மாற்றியது. ஒரே ஊரில் பிறந்தவனுக்கு உட்பிரவேச அனுமதி இல்லை என்று கோவில்கள் கதவை மூடினால் கிறிஸ்த்தவ தேவாலயங்கள் உள்ளே விட்டு அமர ஆசனமும் கொடுத்தது. ஊரவனை விரட்டி அடித்தால் வந்தான் வரத்தான் அரவணைப்பான். அது அவனது தேவையின் பாற்ப்பட்டது. நீங்கள் பிரிந்து நின்றால் நாங்கள் எங்கள் தேவைகளை நிறைவேற்ற உங்களுக்கு சலுகைகள் தருவோம் என்பது சந்தர்ப்பவாதம் என்றாலும் அதற்க்கான வாசலை திறந்து விட்டது நாம் தான் என்பதை மறுக்க முடியுமா?

டொனமூர் அரசியல் அமைப்பை ஏற்காது தேர்தலை இளைஞர் காங்கிரஸ் பகிஸ்கரித்தால் அடுத்த தேர்தலில் பொன்னம்பலம் வென்றபின் சிங்களத்துடன் கரம் கோர்ப்பார். இங்கு சிங்களமா எம்மை பிரித்தது?. காங்கிரஸ் கூட்டில் ஒரு அரசும் தமிழரசு கட்சி கூட்டில் ஒரு அரசும் அமைந்தால் அது சிங்களத்தின் சூழ்ச்சியா? திருமலையில் தமிழ் பல்கலைக்கழகம் கேட்டால் ஏட்டிக்கு போட்டியாக இந்து பல்கலைக்கழகம் கேட்டு இரண்டும் இல்லாமல் நமக்கு நாம் தானே நாமம் போட்டோம். கூட்டணி கண்டபின்பும் மட்டக்களப்பில் எப்படி தமிழரசு கட்சி தேர்தலில் போட்டியிட்டது.

மூத்த உறப்பினரை முடிந்தவரை ஒதுக்கியதால் தானே இராஜதுரை ஜே ஆர் கொடுத்த மந்திரி பதவியை ஏற்றார். இதில் சிங்களத்தின் கைங்கரியம் எங்கே இருக்கிறது?. எடுத்ததற்கு எல்லாம் றோ உளவு அமைப்பு இயக்கங்களை பிரித்தது என்று புலம்புபவர் உமா மகேஸ்வரன் பிரபாகரன் பிரிவில் இருந்து லண்டனில் உருவான ஈரோஸ் அமைப்பின் பிரிவு வரை றோ பின்னணி என்பார்களா? அல்லது ஒபரோய் தேவன் பிரிவு, தேவானந்தா பிரிவு, பரந்தன் ராஜன் பிரிவு, சங்கர்ராஜி பிரிவு எல்லாம் அந்த உளவு அமைப்பின் சாதனை என்பார்களா?

அவரவர் எண்ணம் நோக்கம் செயல் இலக்கு என்ற அடிப்படையில் நடந்த பிரிவுகளை அடுத்தவர் தலையில் போடுவது சரியா? பேரினவாத சிங்களத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தியவர் தம்முள் மோதிய போதுதான் அடைக்கலம் தருகிறேன் அருகில் உள்ள இராணுவ முகாங்களுக்கு வாருங்கள் என அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத்முதலி அழைப்பு விடுத்தார். அதன்படி சரணடைந்தவர் தம் உயிர் காத்த அரசுக்கு நன்றி மட்டுமா கூறினார்கள்? எந்த எதிரியை தாக்க ஆயுதம் ஏந்தினாரோ அந்த எதிரியின் அனுசரணையில் தம் சகோதரர்களையே போட்டுத்தள்ளினார்கள்.

இது சகல இயக்கங்களுக்கும் பொருந்தும். இங்கு விதி விலக்கு என்று எந்த அமைப்பும் இல்லை. அரசியல்வாதிகள் தம்முள் பிளவுபட்டு பதவிகளுக்காக சிங்களத்துடன் தேன்நிலவு கொண்டாடியது போலவே ஆயுதப்போராளிகளும் அவ்வப்போது தங்கள் இருப்பு நிலையை தக்கவைக்க இணைந்து செயல்ப்பட்டார்கள். இவர்கள் பிரிந்து சென்றதால் தான் சிங்களம் இவர்களை தன் பக்கம் இழுத்து தன்னை நிலை நிறுத்தியது. குளத்தை கலக்கி விட்டு கொக்கு வந்தால் கொக்கரிக்க கூடாது.

சிங்களத்தின் உடைவுகளை பாடமாக கொள்ளுங்கள். அங்கு எத்தனை கட்சிகள் வந்தாலும் தங்கள் இன நலனை மட்டும் முன்னிலைபடுத்தாத எந்த தலைமையையும் அவர்கள் வெல்லவைத்ததில்லை. அதற்க்கான வாழும் உதாரணம் விக்ரமபாகு கருணாரத்னா. தம்மை விலை பேசமுடியாத அளவுக்கு அவர்களின் பாதை அநகாரிக தர்மபாலா போன்றவர்களால் அமைக்கப்பட்டு அவர்களின் பயணம் தொடர்கிறது. இந்தியாவையும் சீனாவையும் வைத்து சர்வதேசத்துக்கும் சாமரம் வீசும் சாமர்த்தியம்.

ஆனால் எம்மவர் இந்தியாவை விலத்திவிட்டு சர்வதேசத்திடம் ஓடுவதும், அமெரிக்கா வரும் என காத்திருந்ததும், ஜெனீவாவில் தீர்வு கிடைக்கும் என ஓடித்திரிவதும் தவிர உள்வீட்டு பிரச்சனையை பேசி தீர்க்க போதிய விருப்பமில்லை. முயல்வதும் இல்லை. தேர்தல்களில் சொல்லும் வெற்று வாக்குறுதிகள் மட்டுமே அவர்களின் வேதாந்தம். சித்தாந்த தெளிவில்லாத தேர்தல் கால கூட்டுகள். பின்பு பதவி பிரிப்பில் தனிநபர் நாட்டங்கள் விருப்பு வெறுப்புகள்.

ஒரு நடைமுறை உதாரணம் வட மாகாண சபை. ஓடிச்சென்று முதல்வரை மாற்று என்று ஆளுநரிடம் கேட்டது யார்? அதுவும் சிங்களத்தின் பிரித்தாளும் தந்திரமா? ஊழல் அதிகார துஸ்பிரயோகம் செய்தது யார்? அதுவும் சிங்களத்தின் பிரித்தாளும் தந்திரமா? இன்று புதிய மந்திரிசபை வந்தும் நான் இன்னமும் அமைச்சர் தான் என ஆளுநருக்கு கடிதம் அனுப்பி இது பற்றி நீதிமன்றம் செல்வேன் என கூறுவது யார்? இதுவும் சிங்களத்தின் பிரித்தாளும் தந்திரமா?

அல்லது நாங்கள் சிபாரிசு செய்தவரை அமைச்சராக நீங்கள் நியமிக்கவில்லை என முதல்வரிடம் முரண்படுவது யார்? இதுவும் சிங்களத்தின் பிரித்தாளும் தந்திரமா? அந்த அமைச்சு பதவியை பெற்றதற்கு கட்சி நடவடிக்கை எடுப்பதாக கூறுவது மட்டுமல்ல அவர் மகிந்தவிடம் கோடிகள் வாங்கினார் என குற்றம் சாட்டுபவர்கள் கடந்த காலங்களில் அரசுகளின் அரவணைப்பில் இருந்த போது எதனையும் பெறாது இலவச சேவைகளா செய்தார்கள்?

களநிலைமை தமக்கு சாதகமில்லாத போது எதிரியுடன் சல்லாபிப்பதும் தேர்தல் காலங்களில் மட்டும் வெட்டி வீழ்த்துவோம் என்ற வீர வசனங்கள் பேசி பின் பதவிகளுக்காக தம்முள் முட்டி மோதி இரண்டாய் பலவாய் பிரிந்தபின் இது சிங்களத்தின் பிரித்தாளும் தந்திரம் என்று பேசுவது என்ன நியாயம்?. நல்ல மேய்ப்பனை விட்டு விலகும் ஆடுகள் ஒநாய்க்கு இரையாகும். தாயை விலத்திய குஞ்சுகளை பருந்து தூக்கி செல்லும். நீங்கள் பிரிந்து நின்றால் சிங்களம் சிலம்பம் ஆடும்.

உங்கள் தலையில் நீங்களே மண்வாரி கொட்டிவிட்டு புழுதி காற்றை புறம்பேசாதீர்கள். அவர்கள் வகுத்த பாதையில் பௌத்த மத பின்னணியில் சிங்களம் தன்னை நிலை நிறுத்தி கொள்ளும். விலத்தி வரும் ஆடுகளும் குஞ்சுகளும் வளர்ப்பு பிராணிகளாகும். அல்லது பிரியாணி ஆகும். உங்களுக்கான இலக்கு தெரிந்தாலும் பாதை தெரியாத பயணிகளாக நீங்கள் இருக்கும்வரை உங்கள் விடியல் வெகு தூரத்தில். பிரிந்து நிற்க்கும் நீங்கள் கூத்தாடி மேல் குறை கூறி பயன் இல்லை.

(ராம்)