“இனப்பிரச்சினை தீர்வுக்கு நீண்ட தாமதம் ஏற்படுவதற்கு தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் ஒற்றுமையின்மை என்பதுதான் பிரதான காரணமாகும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“தற்போதைய அரசியல் நிலைமையின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் இனப்பிரச்சினை தீர்வுக்கு, திடகாத்திரமான முடிவை மேற்கொள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானித்துள்ளது.
“கடந்த 60 ஆண்டுகால அரசியலில் இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கு நெருங்கி வந்த பல சந்தர்ப்பங்கள் தீர்வு ஏற்படாமல் நழுவி போயுள்ளதை நான் பார்த்திருக்கிறேன்.
“தமிழர் விடுதலைக் கூட்டணி, எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் ஏனைய கட்சிகளுக்கு மாறாக துணிந்து எவரோடும் தனித்து கூட்டுச்சேராமல், குறிப்பிட்ட காரணங்களுக்காக, தேர்தலில் போட்டியிட விரும்பும் அத்தனை கட்சிகளுடனும் இணைந்து ஒரே அமைப்பின் கீழ் ஒரே கொள்கை, ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிட முடிவு செய்துள்ளது.
“ஒவ்வொரு கட்சியும் பொருத்தமான வேட்பாளர்களை முன்னிறுத்தி தேர்தல் முடிந்ததன் பின் தெரிவு செய்யப்படுகின்ற அத்தனை பேரும் ஒரே குடையின் கீழ் இயங்க வேண்டும்.
“வட-கிழக்கில் இவ்வாறு ஆதரவு தேடும் குழுக்கள், தமிழ் கட்சிகள், அமைப்புகள் ஆகியன தங்களுக்கிடையே காணப்படும் ஆழமான வேறுபாடுகளை மறந்து, நீண்டகாலம் இராணுவத்துடன் தொடர்புகள் கொண்டிருந்ததையும், உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளையும், பொருட்படுத்தாது ஒரே குடையின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனும் நோக்கிலேயே இவ்வாறு செயற்படவுள்ளோம். இந்தத் திட்டத்தை அமுல்படுத்துவதால், ஒரே குடையின் கீழ் இணைந்து செயற்பட விரும்பும் அமைப்புகளை புறந்தள்ளி வைக்கவேண்டிய அவசியமில்லை.
“இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மிக மோசமான நிலைமைக்கு யார் பொறுப்பாளிகள் என்பதை அறியவேண்டிய அவசியமில்லை. ஒவ்வொருவரும் தவறு விடுவது இயற்கையே. ஆனால், பொதுமக்களுடைய உயிருடன் எவரும் விளையாடக்கூடாது. இலங்கையிலுள்ள சகல அரசியல் கட்சிகளும் தவறு விட்டுள்ளனர். சிலர் விடுகின்ற தவறுகள் மிக மோசமானவையாகும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.