தமிழ்த் தேசிய அரசியல் வழி நின்று செயற்படுகின்றவர்களான, சமஷ்டிக் கோரிக்கையினை வலியுறுத்தி நிற்கின்றவர்களான சி.வி. விக்கினேஸ்வரனும் தர்மலிங்கம் சித்தார்த்தனும், சமஷ்டித் தீர்வின் சாத்தியங்கள் குறித்து நேரெதிர் கருத்துக்களை / நேரெதிர் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது ஆச்சரியத்தைத் தருவதொன்றாக அமையவில்லை.
அண்மையில் (25.09.2017) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில், தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற, அரசியலமைப்புத் தொடர்பான தெளிவு படுத்தல் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சமஷ்டித் தீர்வின் சாத்தியங்கள் குறித்து நேரெதிர் கருத்துக்களை / நேரெதிர் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இருவரும் சமஷ்டிக் கோரிகை;கையினை தமிழ் மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர், தமிழ் மக்களின் நிலைப்பாடு இதுவே எனக்கூறியிருக்கிறார்கள். எனினும் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், சமஷ்டித் தீர்வை அடைந்து கொள்வதற்கான அவசியத்தினையும் சாத்தியப்பாடுகளையும் வலியுறுத்தியிருக்க, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தான், சமஷ்டித் தீர்வை அடைந்து கொள்ள முடியாத அரசியல் சூழல் இருப்பதனை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இவ்வாறான இருவேறுபட்ட கருத்துக்கள் இரு தனிப்பட்ட நபர்களது கருத்துக்கள் /நிலைப்பாடுகள் மாத்திரமல்ல, தமிழ்த் தேசிய அரசியலில் இருக்கக்கூடிய இருதுருவப்பட்ட கருத்துக்கள்/நிலைப்பாடுகளாகவும் அமைகின்றன.
சி.வி. விக்கினேஸ்வரன் தனதுரையில் முன்வைத்த தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான சமஷ்டி தொடர்பிலான கருத்துக்கள், தமிழ்த் தேசிய அரசியலின் ஒரு பகுதியினரின் கருத்துக்களாகவே அமைந்திருக்கின்றன. அவர் தனதுரையில்,
• பெரும்பான்மையினர் முகம் சுளிப்பார்கள் என்பதால் எமது தனித்துவத்தை விட்டுக் கொடுத்தால் எதுவுமே இல்லாமல் போகும்.
• அரைகுறைத் தீர்வினை ஏற்றுக்கொள்ளாது நீண்டகால அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து உரிய தீர்வு வரும் வரை சளைக்காது முன்னெடுத்துச் செல்வது அவசியம்.
• பாரமபரியத் தமிழ் பேசும் கிழக்கு மாகாண முஸ்லிம்கள், (போதுமான அலகை கொடுத்தால்) வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு ஆட்சேபனை தெரிவிக்க மாட்டார்கள்.
• சர்வதேச உள்ளீடல்களுடனான விசாரணை எமக்கு நீதியைப் பெற்றுத்தரும். ஜெனிவாவில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அரசாங்கம் சர்வதேசத்திற்குப் பதில் தரவேண்டும்.
என்ற விடயங்களை தனதுரையில் குறிப்பிட்டிருக்கிறார். வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், அரசியல் சாமார்த்தியம், ஒற்றுமை என்பவற்றின் மூலம் தமிழர்கள் அரசியல் தீர்வை அடைந்து கொள்ளலாம் என்ற கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தான், தமிழ் மக்களின் நீண்டகலாக் கோரிக்கை சமஸ்டியே, சமஷ்டிக்குக் குறைவான தீர்வு அர்த்தமற்ற தீர்வாகவே அமையும் எனக்கூறியிருக்கின்ற போதிலும், சமஷ்டித்தீர்வினைப் பெற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் சூழ்நிலை இல்லை என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார். அவர் தனதுரையில்,
• தமிழ் மக்கள் நீண்ட காலமாக சமஷ்டியை கோரிக்கைக்கு ஆணை வழங்கி வந்துள்ளார்கள். ஆனால் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் ஒற்றை ஆட்சிக்கே ஆதரவளித்து வந்திருக்கிறார்கள். ஆகவே இவ்விரண்டு தரப்புகளும் எவ்வாறு ஒன்றிணையும்
• வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் தரப்பினருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தைகளில் எந்தவிதமான முடிவுகளும் எட்டப்படவில்லை.
• புதிய அரசியல் அமைப்பின் இடைக்கால வரைபுக்கே இரண்டரை ஆண்டுகள் சென்று விட்டன. தீர்வை எட்டுவதற்கு ஆகக்குறைந்தது மூன்று வருடங்களாவது தேவையாகவுள்ளது. அதற்குள் தற்போதுள்ள தேசிய அரசாங்கம் ஆட்சியிலிருக்குமா?
• சர்வதேச சமூகம், புதிய அரசியல் அமைப்பினை உருவாக்குவதற்கு அழுத்தங்களைக் கொடுக்கும் என்று நாம் நம்பவில்லை. இந்த அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வீழ்வதற்கு விட்டுவிடாதீர்கள் என்றே கூறுகிறார்கள். தங்களுடைய நலனை முன்னிறுத்தியே செயற்படுகிறார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
என்ற கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். அத்துடன், சிங்கள அரசியல்வாதிகள் அதிகாரம் பகிரப்படப்பட வேண்டும் நிலைப்பாட்டில் உள்ளனர், 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் ஆலோசனையை முன்வைக்கிறார்கள் எனக்கூறியிருப்பதுடன், புதிய அரசியலமைப்புத் தொடர்பில் அவர்கள் வேறுவகையில் சிந்திக்கிறார்கள் எனவும் கூறியிருக்கிறார். அதாவது, தொகுதி முறையிலான தேர்தல் முறையை கொண்டுவரவும் அதனூடாக 1977 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்தது போன்று சிங்கள வாக்கு வங்கியை மையப்படுத்தியதான சூழலை உருவாக்க விரும்புகிறார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்.
நாங்கள் மௌனமாக இருந்து விடமுடியாது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் புதிய அரசியலமைப்புத் தொடர்பான கலந்துரையடயாடல் அவசியம், இதுவே தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்ய ஆவன செய்யும் எனவும் கூறியிருக்கிறார்.
இவ்விருவரினதும் உரைகளில் வெளிப்பட்ட கருத்துக்கள், தமிழ்த் தேசிய அரசியலில் காணப்படும் இருதுருவப்பட்ட கருத்துக்களின்/ இருதுருவப்பட்ட நிலைப்பாடுகளின் பிரதிபலிப்பாகவே கொள்ளப்பட வேண்டும். நம்முன்னுள்ள கேள்வி, எவ்வாறு “நியாயமான இவ்விரு நிலைப்பாடுகளில்” இருந்து பொது இணக்கப்பாட்டை எட்டப்போகிறோம் என்பதே.
தமிழ்த் தேசிய அரசியலின் நியாயத்தன்மை எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதேயளவு முக்கியத்தவம் அதன் நடைமுறைச் சாத்தியப்பாடுகள் குறித்தும் வழங்கப்பட வேண்டும்.
– விஜய்