சிரியாவில் இடம்பெற்றுவரும் போரில் வெற்றிபெற்று விட்டதாக, லெபனானைச் சேர்ந்த ஷியா முஸ்லிம் குழுவான ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. அதேவேளை, அரசாங்கத்துக்கு எதிராகப் போரிட்டுவந்த ஆயுததாரிகளை, ஏறத்தாழ நாட்டை விட்டு, அரசாங்கப் படைகள் வெளியேற்றிவிட்டன என, ரஷ்யா தெரிவித்தது. சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டின், இரண்டு முக்கியமான தோழமைப் பிரிவுகளால் வழங்கப்பட்ட இக்கருத்துகள், சிரியாவில், அரசாங்கப் படைகளால் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டுவரும் முன்னேற்றத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர், ஜனாதிபதி அசாட்டின் ஆட்சி, தோற்கடிக்கப்பட்டுவிடும் ஆபத்து நிலவியது. இரண்டு ஆண்டுகளில், சிரியாவின் அரசியல், இராணுவச் சூழலில், பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமையை இது காட்டுகிறது.
ஆனால், இரண்டு தரப்புகளினதும் கருத்துகளுக்கு மத்தியிலும், சிரியாவில் காணப்படும் நிலைமை, இன்னமும் குழப்பகரமானதாகவே இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவின் கருத்துப்படி, சிரியாவின் 85 சதவீதமான பகுதியைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், அந்தக் கருத்தை நிராகரித்த, சுயாதீன கண்காணிப்பு அமைப்பான மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம், சிரியாவின் 48 சதவீதமான பகுதிகளையே, அரசாங்கம் கட்டுப்படுத்துவதாகத் தெரிவித்தது.
ஹிஸ்புல்லா குழுவின் தலைவர் சயட் ஹஸன் நஸ்ருல்லா கருத்துத் தெரிவிக்கும் போது, சிரியாவில் இனிமேலும் மோதலில் ஈடுபடுவதற்காகக் காணப்படுவது, “சிதறிய மோதல்களே” என்று குறிப்பிட்டார். “சிரியாவில் நாங்கள், போரை வென்றுவிட்டோம்” என்று, அவர் இதன்போது தெரிவித்தார்.
சிரியாவின் இராணுவ நிலைமை, பல்வேறு குழப்பங்களைக் கொண்டது. எனினும், இந்த மோதல்களின் பிரதான பிரிவினராக, சிரிய அரசாங்கம், எதிரணிக் குழுக்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு என்பனவே காணப்பட்டன. இதில், 2015ஆம் ஆண்டுவரை, எதிரணிக் குழுக்கள் முன்னேற்றமடைந்து வந்தன. ஆனால், இந்த மோதலில், ரஷ்யாவின் தாக்குதல்கள் ஆரம்பித்த பின்னர், இந்தப் போர், சிரிய அரசாங்கத்தின் பக்கமாகச் சரிந்தது.
இதேவேளை, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர், சிரியத் தலைவர் டமஸ்கஸ்ஸில் வைத்து, சிரிய ஜனாதிபதி அசாட்டை, நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடினார் என்று அறிவிக்கப்படுகிறது. இணைந்த இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவுக்கெதிரான போராட்டம் தொடர்பாகவும், அவர்கள் கலந்துரையாடினர் எனக் கூறப்படுகிறது.