ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு இக்கட்சியின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தின் மகத்தான சேவை என்றென்றைக்குமே தேவையாக உள்ளது என்று ஏறாவூர் நகர பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், கட்சியின் ஏறாவூர் பிரதேச முக்கியஸ்தர்களில் ஒருவருமான எம். சி. ஏ. கபூர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் சம கால அரசியல் நடப்புகள் தொடர்பாக ஏறாவூரில் இவரின் இல்லத்தில் ஊடகவியலாளர்களை நேற்று வியாழக்கிழமை சந்தித்து பேசியபோது இவர் தெரிவித்தவை வருமாறு:-
ஸ்தாபக தலைவர் அஷ்ரப்புடன் கை கோர்த்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இக்கட்டான கால கட்டத்தில் வளர்த்து எடுத்ததில் பஷீர் சேகுதாவூத்தின் பங்கும், பங்களிப்பும் அளப்பரியவை ஆகும். அதே போல ஸ்தாபக தலைவரின் மரணத்தை தொடர்ந்து புதிய தலைவராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டது முதல் கட்சி எதிர் கொண்டு வந்திருக்கின்ற அனைத்து பிரச்சினைகளை முறியடித்து கட்சியை காப்பாற்றி கொடுத்து இருக்கின்றார். இதனால் இவருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடன்பட்டு, கடமைப்பட்டு உள்ளது. ஆயினும் தலைவர் அடங்கலாக இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் நன்றி மறந்து பஷீர் சேகுதாவூத்துக்கு துரோகம் இழைத்து விட்டனர்.
பஷீர் சேகுதாவூத்தின் சேவை இன்று வேண்டுமானால் தலைவருக்கு தேவை அற்றதாக இருக்கலாம். ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு என்றென்றைக்குமே தேவையானதாகத்தான் உள்ளது.
எனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் உரிய பதவியுடன் பஷீர் சேகுதாவூத்தை மீண்டும் உள்வாங்குகின்ற தீர்மானத்தை அவசியமும், அவசரமுமாக கட்சி தலைமை எடுக்க வேண்டும். அவ்வாறு ஒரு நிலைமை வருகின்றபோது பஷீர் சேகுதாவூத்துக்கும் சாதகமாக பரிசீலித்து சரியான முடிவை எடுப்பார் என்று நான் நம்புகின்றேன். நான் தலைவரை சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்கின்றபோது இதை நிச்சயம் வலியுறுத்தவும் செய்வேன். தலைவர் பதவி நிரந்தரமான அல்ல, கட்சியின் நலனே முக்கியமானது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயம் ஆகும்.