“கிழக்கு மாகாணத்தின் ஆட்சி காலம் நீடிக்கப்பட்டால், நீடிக்கப்படும் காலத்துக்கு முதலமைச்சராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்” என்று, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து, கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைத்திருக்கின்றன. இந்நிலையில்தான் முதலமைச்சுப்பதவியை புரிந்துணர்வின் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவருக்கு வழங்குவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருக்கின்றது.
அதேபோல, முஸ்லிம் காங்கிரசும் முதலமைச்சு பதவியை, நீடிக்கப்படும் காலத்துக்கு தமிழர் ஒருவருக்கு வழங்க முன்வர வேண்டும். இவ்விடயத்தில் மு.கா விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும். இவ்வாறு பேசினால் முதலமைச்சர் உட்பட்டோர் நான் இனவாதம் பேசுவதாக குறிப்பிடுகின்றனர்.
நான் இனவாதமாக பேசவில்லை, இனவாதமாக நான் பேசுகின்றேன் என்றால், அவர்கள் இனவாதத்தை செயலில் காட்டுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், தமிழ்தேசிய கூட்டமைப்பு பல வேலைகளை முன்னெடுத்து வருகின்றது. ஆனால், அவை மக்களுக்கு தெரிவதில்லை. எமக்கு ஒதுக்கப்படுகின்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதியைக் கொண்டு, ஒவ்வொரு கிராமங்களையும் அபிவிருத்தி செய்ய முடியாது.
வழங்கப்படுகின்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதியை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பிரிப்பதற்கு எண்ணினால் ஒரு கிராமத்துக்கு ஆயிரம் ரூபாய் அளவிலேதான் கொடுக்க முடியும். இதனால்தான் பலரிடமிருந்தும் உதவிகளை பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். நிறுவனங்களின் உதவியோடு சில எல்லைப்புற கிராமங்களை தத்தெடுத்து, அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றோம்.
மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது அவர்களுக்காக குரல் கொடுக்கின்றோம். ஆனால் விமர்சிப்பவர்களாவும், விசமத்தனம் செய்பவர்களாகவும் சிலர் எம்மிடையே இருக்கின்றனர். எங்களை சாந்தவர்களே, எங்களுக்குள்ளவர்களையே விமர்சிக்கின்றனர். எங்களது கண்ணை எங்களைசாந்தவர்களே குத்துகின்றனர். ஆனால், சகோதர இனத்தவர்களான முஸ்லிம் மக்கள் அவர்களது காணிகளை இழப்பதற்கு தயாரில்லை. அவர்களது, மொழி, மதம், இனம் என்பதில் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால், எம்மவர்கள் சிலர் மற்றவர்களுக்கு விலை போகின்றவர்களாக இருக்கின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளையெல்லாம் தவிர்த்து எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டும்” என்றார்.