முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு, சசிகலாவின் குடும்பமே காரணம் என்று, தமிழக அமைச்சர் திண்டுக்கல் சி. ஸ்ரீனிவாசன் கூறியமை, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலவிதாவின் மரணம் தொடர்பில், இன்னும் ஆய்வு செய்யப்படாமைக்கு, சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாகவுள்ள சசிகலாவும் அவருடைய மருமகன் டி.டி.வி தினகரனுமே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட பின்னர் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, தேசிய காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் போன்ற, இந்தியாவிலுள்ள மிகப்பெரிய தலைவர்கள் அனைவரையும் , தொற்று ஏற்படும் என்ற காரணத்துக்காக, ஜெயலலிதாவைப் பார்க்கவிடாது செய்தமைக்கு முழுக்காரணமும் சசிகலாவே” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“அம்மாவைக் கொலை செய்தவர்களுக்கு எதுவும் செய்யமுடியாது என்று, தமிழ் நாட்டு மக்கள், ஏற்கெனவே அறிவித்துவிட்டனர். எனவே, ஜெயலலிதாவின் உயிரிழப்புக்கு, முழுப்பொறுப்பையும் சசிகலாவே ஏற்றுக்கொள்ளவேண்டும். அதனாலேயே, பொதுக்குழுவைக் கூட்டி, அவரைக் கட்சியிலிருந்து தூக்கி எறிந்துள்ளோம்” என்றும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
“டி.டி.வி தினகரன், அவரது பணத்தைத் தவறாகப் பயன்படுத்தி, முதலமைச்சர் பதவியில், எடப்பாடி பழனிசாமி அமர்வதைத் தடுக்கத் திட்டமிட்டார். ஆர்.கே நகர் தேர்தலைக் கொண்டு, அந்தப் பதவியை, தான் கைப்பற்றவேண்டும் என்று எண்ணினார். இத்திட்டம் குறித்து, நாம் அனைவரும் அறிந்து வைத்திருந்தோம். ஆனால், அதை, வெளியில் சொல்லும் நிலைமையில் நாம் இருக்கவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
கடவுளைப் போன்று வந்த, பிரதமர் நரேந்திர மோடியே, தேர்தலை தடுத்தி நிறுத்தினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சசிகலாவுக்கு ஏற்கெனவே தாங்கள் ஆதரவு வழங்கியமைக்கு வருத்தம் தெரிவித்த அவர், அந்த ஒரு விடயத்துக்காக, மக்கள் தங்களை மன்னிக்கவேண்டும் என்றும் கோரினார்.