(புருஜோத்தமன் தங்கமயில்)
தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை, அண்மைய நாட்களில் இரண்டு விடயங்கள் மிகுந்த கவனத்தைப் பெற்றிருக்கின்றன. அதில், முதலாவது, ‘சந்திரசோம எதிர் மாவை சேனாதிராஜா மற்றும் கே.துரைராஜசிங்கம்’ வழக்கில் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. இரண்டாவது, அந்தத் தீர்ப்பின் அடிப்படைகளை முன்வைத்து, பௌத்த பீடங்களுடன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த வாரம் நடத்திய சந்திப்புகள்.
‘தமிழரசுக் கட்சி, தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைக்கின்றது. ஆகவே, அரசமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், தமிழரசுக் கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.’ என்று கோரியே, 2014ஆம் ஆண்டு சந்திரசோம என்பவரால் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கில் பிரதிவாதியாக, தமிழரசுக் கட்சியின் அப்போதைய செயலாளர் மாவை சேனாதிராஜாவும் பின்னர், தற்போதைய செயலாளர் கே.துரைராஜசிங்கமும் இணைக்கப்பட்டார்கள்.
இந்த வழக்கின் ஆரம்ப கட்டங்களிலேயே (2014ஆம் ஆண்டு) மாவை சேனாதிராஜா, ‘தனி நாட்டுக் கோரிக்கையை தமிழரசுக் கட்சி முன்வைக்கவில்லை’ என்று சத்தியக் கடதாசியை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின், பிரதிவாதங்களின் போது, தமிழரசுக் கட்சி தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கவில்லை என்பதையும் அரசமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளதையும் பிரதிவாதி சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு நீதிமன்றத்தில் முன்வைத்திருக்கின்றது.
அத்தோடு, வடக்கு மாகாண சபைத் தேர்தலின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில், ‘தனித்துவமான மக்களாகவும் தேசிய இனமாகவும் நாம் எமது வரலாற்று ரீதியான வாழ்விடங்கள் தொடர்பிலும் எமக்குரிய எமது ஒருமித்த உரிமைகள் தொடர்பிலும் மேலும் எமது தலைவிதியை அல்லது எதிர்காலத்தை நாமே தீர்மானிப்பதற்கு எமக்கிருக்கும் உரிமை தொடர்பிலும் அதை உறுதிப்படுத்த ஒன்றுபட்டதும் பிளவுபடாததுமான இலங்கைக்குள் தமிழ்பேசும் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கில் தக்க தன்னாட்சி முறைமை ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் திடசங்கற்பம் கொண்டிருக்கின்றோம்.’ என்ற விடயம் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் பிரதிவாதியின் சட்டத்தரணிகள் குழு நீதிமன்றத்தில் முன்வைத்திருக்கின்றது.
ஆக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் (தமிழரசுக் கட்சி) மாத்திரமல்ல, (13ஆவது திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இடம்பெற்ற) தேர்தல்களில் போட்டியிட்டு, அரசமைப்பின் ஆறாம் திருத்தச் சட்டத்தின் கீழ் பதவிப் பிரமாணம் செய்த அனைவரும், தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டவர்கள் என்கிற விடயமும் அடையாளப்படுத்தப்படுகின்றது.
அதாவது, தற்போது தேர்தல் அரசியலுக்குள் வருகின்ற யாரும், தனிநாட்டுக் கோரிக்கையோடு இல்லை என்பதே இதன் அடிப்படை. இது, தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில், ஏற்கெனவே உணரப்பட்டுவிட்டாலும், அதை மீளவும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது.
2002ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட ‘ஒஸ்லோ’ உடன்படிக்கையின் பிரகாரம், ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய உரிமைக் கொள்கையின் பிரகாரம், சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலமைந்த தீர்வொன்றை ஆராய்தல்’ என்கிற விடயம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இந்த விடயத்தை மறைமுகமாக (அல்லது பருமட்டாக) உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்றுக்கொள்வதாக, அரசமைப்புச் சட்ட வல்லுநர் கலாநிதி அசங்க வெலிகல குறிப்பிடுகின்றார்.
அதாவது, “சர்வதேச சட்டத்தில் ‘சர்வதேச மனித உரிமை சமவாயங்களின் பொது உறுப்புரை (1)இல் சுயநிர்ணய உரிமை உள்ளடக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தச் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்களாக, ஒரு மக்கள் குழாமாக தமிழ் மக்கள் இருக்கின்றார்கள்’ என்கிற பிரதிவாதி தரப்பின் வாதத்தை, பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் வழங்கிய தீர்ப்பு, அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது போன்ற தோற்றம் காணப்படுகின்றது” என்று கலாநிதி அசங்க வெலிகல முன்வைக்கின்றார்.
இந்தத் தீர்ப்பின் முக்கியமான அம்சமாக, “சமஷ்டிக் கோரிக்கையைத்தான் தமிழரசுக் கட்சி முன்வைக்கின்றதே ஒழிய, தனிநாட்டுக்கான கோரிக்கையை அல்ல” என்று கூறப்பட்டுள்ளது. அத்தோடு, “சமஷ்டிக் கோரிக்கையை ஆதரிப்பது என்பது தனிநாட்டுக்கான கோரிக்கையை ஆதரிப்பதாக கொள்ளப்பட மாட்டாது” என்றும் உயர்நீதிமன்றம் கூறியிருக்கின்றது.
அத்தோடு, “ஒற்றையாட்சி, சமஷ்டி என்கிற அடையாளப்படுத்தல்களைத் தாண்டி, ஒற்றையாட்சி முறைமையொன்றிலும் பரந்துபட்ட அதிகாரப்பகிர்வு மூலமாக சமஷ்டியை ஒத்த ஓர் ஆட்சிமுறை உருவாகலாம்” என்கிற கருத்தையும் உயர்நீதிமன்றம் முன்வைக்கின்றது.
மறுவழமாக, “சமஷ்டி ஆட்சியொன்றிலும் மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிந்திருந்தால், அது ஒற்றையாட்சி முறையை ஒத்ததாக இருக்கும்” என்றும் உயர்நீதிமன்றம் கூறுகின்றது.
“இறைமையைப் பகிர்தல் மூலமாகவும் அதிகாரப்பகிர்வு மற்றும் அதிகாரப்பரவலாக்கம் மூலமாகவும் ஒற்றையாட்சிக்குள் ஒரு சமஷ்டி ஆட்சி வடிவத்தை உருவாக்கலாம்” என்றும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கின்றது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில், “தமிழ் மக்கள் ஒரு மக்கள் குழாம் என்பதுவும் அவர்கள் சுயநிர்ணய உரிமையைப் பெறுவதற்கு உரித்துடையவர்கள் என்கிற விடயமும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக” இந்த வழக்கில் பிரதிவாதி சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகளில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிடுகின்றார்.
ஆனால், “குறித்த தீர்ப்பில், அந்த விடயம், நீதியரசர்களின் கூற்றாக இல்லை” என்று சட்ட விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் முன்வைக்கின்றார். இந்த இடத்தில்தான், இந்த உரையாடல், இன்னும் எளிய வடிவில், தமிழ் மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டிய தேவை ஏற்படுகின்றது.
ஏனெனில், இலங்கையின் உயர்நீதிமன்றம், தமிழ் மக்களை ஒரு குழாமாக அங்கிகரிப்பது என்பதுவும், அதனூடு சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தப்படுகின்றது என்கிற விடயமும் தமிழ்த் தேசியப் போராட்டத்தின் கட்டங்களில் முக்கியமான விடயமாகும்.
இலங்கையின் பௌத்த அதிகார பீடங்களான அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களுக்கு, நாட்டின் தலைமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் கூறுகளையும் எடுத்துக் கொண்டே முதலமைச்சர் விக்னேஸ்வரன், கடந்த வாரம் சந்திப்புக்காகச் சென்றார்.
தமிழ்த் தலைவர்கள் உள்ளிட்ட நாட்டின் சிறுபான்மையினங்களின் தலைவர்களையோ, பிரதிநிதிகளையோ சந்திக்கின்ற போது, பௌத்த பீடங்கள் சம்பிரதாயபூர்வமான உரையாடல்களுக்கு அப்பால் செல்வது தொடர்பில் என்றைக்கும் அக்கறை காட்டியதில்லை.
அதிக தருணங்களில் அந்த உரையாடல்களில், அதிகமாக ஒவ்வாமையே வெளிப்படுத்தப்பட்டும் வந்திருக்கின்றது. அதையே, பௌத்த பீடங்களின் சந்திப்புகளின் போது, தான் உணர்ந்து கொண்டதாக விக்னேஸ்வரன் கூறியிருக்கின்றார். அத்தோடு, தாம் நடத்தப்பட்ட விதத்தில், ஒரு வகையான அவமதிப்புப் தொனி இருந்ததாகவும் அவர் குறைபட்டிருக்கின்றார்.
‘சமஷ்டிக் கோரிக்கை’ என்பது பிரிவினைக் கோரிக்கை அல்ல என்கிற விடயத்தை தென்னிலங்கையினால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், அவ்வாறு புரிந்து கொள்வதிலிருந்து விலகியிருக்கவே அது விரும்புகின்றது.
ஏனெனில், அப்படிப் புரிந்து கொண்டதாக அடையாளப்படுத்தினால், தமிழ் மக்கள் கோரும் அரசியல் அதிகாரங்களை வழங்க வேண்டிய நிலை ஏற்படும். அந்த நிலையிலேயே, சமஷ்டிக் கோரிக்கையை தனிநாட்டுக் கோரிக்கையாக தொடர்ந்தும் அடையாளப்படுத்தி வருவதில் தென்னிலங்கை குறியாக இருக்கின்றது.
அதையே, பௌத்த அதிகார பீடங்களும் பிரதிபலித்து வருகின்றன. சமஷ்டிக் கோரிக்கையை உயர்நீதிமன்றம் பிரிவினைக் கோரிக்கை அல்ல என்று உறுதிப்படுத்தியிருக்கின்றது என்பதை விக்னேஸ்வரன், பௌத்த பீடங்களிடம் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூற முனைந்த போதும், அவை கணக்கில் எடுக்கப்படவில்லை.
கிட்டத்தட்ட இந்த நாட்டின் அரசியலையும் அதிகாரத்தையும் பௌத்த அதிகார பீடங்களே இறுதி செய்ய முடியும் என்கிற தோரணையை முன்வைப்பதில் பௌத்த பீடங்கள் கவனம் செலுத்தியிருக்கின்றன.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைத் தென்னிலங்கை அரசியல்வாதிகளோடு மாத்திரம் பேசுவதால் பெற்றுக்கொள்ள முடியாது; பௌத்த அதிகார பீடங்களோடும் பேசியே பெற்றுக்கொள்ள முடியும் என்கிற விடயத்தை முன்வைத்தே, முதலமைச்சர் விக்னேஸ்வரன், பௌத்த பீடங்களை நோக்கிச் சென்றார்.
ஆனால், அவரை ஒருவகையில் நிராகரித்து அனுப்பியதனூடு, நாட்டின் அதிகாரங்களின் பீடங்களாக பௌத்த பீடங்களே நீடித்திருக்க முடியும் என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எவ்வாறு நோக்குவது? அதன் அதிகார வலு என்ன? என்பது பற்றியெல்லாம் கேள்விகள் எழுகின்றன.