1985 தமிழ் முஸ்லிம் இனச்சங்காரம் அரங்கேறிய சித்திரை மாதத்தின் ஒரு பகற்பொழுதில் நான் இந்த மாமனிதரை எனது மதிப்புக்குரிய ஆசான் திரு. சண்முகநாதன் (கற்குடா) ஐயா அவர்களின் வீட்டில்தான் சந்திக்கிறேன். அன்றிலிருந்து இன்று வரை இவருடனான நட்பும் நெருக்கமும் தொடர்கின்றன.
1926 ஜூலை 21ல் ஐந்து சகோதரர்களில் இரண்டாவது பிள்ளையாக மட்டக்களப்பில் பிறந்தார். சென்ற 21ம் திகதி 90 வயதை அடைந்திருக்கும் இம்மாமனிதர் எங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பெருமை மிகு பொக்கிஷம் என்பேன்.
இவரின் ஆரம்பப் பள்ளிவாழ்க்கை மட்டக்களப்பின் புகழ்பூத்த வின்சன், சிசிலியா கல்லூரிகளின் தோழிகளுடனேயே தொடர்கிறது. பின்னர் மெதடிஸ் மத்திய கல்லூரியின் மூலமே எஸ்எஸ்சி பரீட்சைக்குத் தோற்றிய பின்னர், 1951, 52 காலப்பகுதியில் மகரகம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று தாம் கல்வி கற்ற மெதடிஸ் மத்திய கல்லூரியில் ஆசிரியராக, பிரதி அதிபராக, அதிபராக 35 வருடங்கள் கல்விப் பணியாற்றினார்.
இவரிடம் கல்வி கற்ற மாணாக்கர்களில் பலரும் இன்று உன்னத நிலையில் இருக்கிறார்கள். இவரின் காலம் மெதடிஸ் மத்திய கல்லூரியின் பொற்காலம் என்பார்கள்.
சிறந்த சமூக சேவையாளரான அதிபர் அவர்கள் 1989ல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக இலங்கை பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தின் கல்வி சம்பந்தமான ஆலோசனைக் குழுவிலும் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.
1988ல் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் மட்டக்களப்பு பிரஜைகள் குழுத் தலைவராகவும் பெரும்பணியாற்றியதுடன் சர்வதேச மன்னிப்புச் சபையினரால் ஜேர்மனியில் நடத்தப்பட்ட அனைத்துலக மாநாடு ஒன்றிலும் கலந்து கொண்டு நாட்டிற்குப் பெருமை சேர்த்தார்.
சீனா, ரஷ்யா, ஜப்பான், நெதர்லாந்து, அமெரிக்கா, பாகிஸ்தான், ஜேர்மன் என்று உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று வந்த அனுபவஸ்தர்.
அவருடனான உரையாடலின் நடுவே, “ஹனிபா! நானொரு சட்டத்தரணியாக வரவேண்டுமென்றே ஆசைப்பட்டேன். ஆனால் விதி என்னை ஆசிரியராக்கியது. அதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். திருகோணமலை தொடக்கம், பொத்துவில் வரையிலும் என்னிடம் கல்வி கற்ற ஏராளம் மாணவர்கள் இன்றும் என் மீது அக்கறையும் அன்பும் காட்டி வருவது ஆசிரியர் தொழில் மூலம் நான் அடைந்த பெரும் பேறாகும்” என்றார்.
ஆங்கிலத்தில் பெரும் புலமை வாய்ந்த ஐயா அவர்கள், பெரும் பெரும் அவைகளில் நகைச்சுவையாகப் பேசி, தமது கருத்துக்களை சாதாரண மக்களிடம் முன்வைப்பதில் வல்லவர்.
நேற்றுப் பேசிக் கொண்டிருக்கும் போது, “ஹனிபா! பிரபாகரனுக்கு முதல் நான்தான் பெரிய பயங்கரவாதி. என்ட கையால அடி வாங்காத மாணவன் எனது கல்லூரியில் எவருமில்லை” என்றார்.
“ஐயா! இப்ப அடிச்சா, பொலிஸில் நீங்கள்” நான் வெளியில் சொல்லவில்லை.
இவரின் இரண்டு பெண் மக்களான சர்மினியும் பிரேமினியும் இங்கிலாந்திலும் ஜேர்மனியிலும் வாழ்ந்து வருகிறார்கள். சுனாமியின் போது தமது மனைவியை இழந்த அதிபர் அவர்கள், பாழடைந்த பென்னம்பெரிய வீட்டில் அட்டைகள் உருக்குலைந்த சில நூறு புத்தகங்களுடனும் அழகிய பழங்காலத்து மரத்தளபாடங்களுடனும் தனிமையில் வாழ்கிறார்.
இத்துணை மகிழ்ச்சியில் வாழும் 90 வயது இளைஞனைக் காண்பதும் உரையாடுவதும் பெறற்கரிய பேறன்றோ!
எங்களின் உரையாடலின் நடுவே மாங்காய் லொறிக்காரர் மாங்காய் கேட்டு வருகிறார். நான் சிங்களத்தை தமிழ்ப்படுத்துகிறேன். அவர், “ஹனிபா! அவனுக்கிட்டச் செல்லு, வீடும் மரமும் எனக்குரியதல்ல, பைபாஸ் பண்ண பணமில்லாமல் வீட்டை விற்று விட்டேன். வீட்டின் சொந்தக்காரரோடு பேசி விட்டு நாளை சொல்கிறேன். வரச்சொல்” என்றார்.
நான் அதிர்ந்து போனேன்.
உரையாடலுக்கான அனைத்து ஜன்னல்களும் அவரின் அந்த வார்த்தைகளில் தானாக மூடிக் கொள்ள, பொழுது வலையிறவுப் பாலத்தில் இறங்கிக் கொண்டிருந்தான்.
அவரிடமிருந்து விடை பெறும் தருணம், திடீரென அவரின் கரங்களைப் பிடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, “எங்கள் மண்ணின் வாசனை! நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்” என்று வாழ்த்தி, விடைபெறும் வேளையில், ஒஸ்லோவில் வாழும் அவரின் மாணவனும் எழுத்தாளருமான சஞ்ஜயன் செல்வ மாணிக்கத்தின் அன்பான விசாரணையை எத்தி வைத்து விட்டு விடைபெற்றேன்.
யாரைச் சந்தித்ததும்
அந்த சந்திப்பிலே
வாயால் வர்ணிக்க முடியாத
பரிவு பொங்கி வழிகிறதோ,
யாருடைய கரங்களைக்
குலுக்கும் போது
அற்புதமான காவியத்தைப்
படிப்பது போன்று
மெய் சிலிர்க்கிறதோ
யாருடைய செழுமை மிக்க இயல்புகள்
அமைதியின்மையும் பொறுமையின்மையுமான
மனத்திற்கு
ஆறுதல் அளிக்கின்றதோ
அத்தகைய மனிதர்களை
சந்தித்த நாட்கள்
மறக்க முடியாத
மகிமை பொருந்திய நாட்களாகும்.