“பல்வேறு பிரதேசங்களில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமல் போய்விட்டன” எனத் தெரிவித்த கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், காலியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, ஒல்லாந்தர்களால் பொறிக்கப்பட்டதல்ல எனவும் அது ஒரு சீன மாலுமியால் பொறிக்கப்பட்டதாகும் எனவும் தெரிவித்தார்.
காலி கல்வெட்டு தொடர்பில் தவறான விடயம் பதியப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் (07) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “காலியில் ஒல்லாந்தர்களால் சீன, பாராசீகம், தமிழ் ஆகிய மொழிகளில் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அது அவ்வாறு அல்ல.
“1404ஆம் ஆண்டு காலப் பகுதியில் சீன மாலுமி ஒருவர், காலி பிரதேசத்தை வந்தடைந்த போது, அவரின் கடற்பயணம் தொடர்பில் ஒரு குறிப்பை கல்வெட்டு மூலம் பதித்துள்ளார். அது இம்மூன்று மொழிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இவ்விடயத்தை நான் ஏன் சொல்லுகின்றேன் என்றால் நாம் மக்களுக்கு தெரிவிக்கும் விடயங்கள் சரியானதாகச் செல்ல வேண்டும். அந்த விடயங்களை ஊடகங்கள் செவ்வனே செய்து வருகின்றன.
“ஆனால், இவ்வாறு வரலாற்று விடயம் தவறாகி விடக் கூடாது என்பதனாலேயே இதனை மீண்டும் தெரியப்படுத்துகின்றேன்.
“இருப்பினும், காலி பிரதேசத்தில் தமிழர்கள் இருந்தமையால் தான் அந்த மாலுமியின் கல்வெட்டில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் அக்கல்வெட்டில் தமிழ் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என்பதும் உண்மையே.
“இவ்வாறு பல்வேறு பிரதேசங்கள் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமல் போய்விட்டன” என்றார்.