எழுபதுகளின் பிற்பகுதி எண்பதுகளின் ஆரம்பம் என் வாழ்வில் மறக்க முடியாத இனிமேலும் கிடைக்க முடியாத தன்னலமற்ற உறவுகளை தந்த காலம். ஒன்றிரண்டு வயசு மட்டுமே வித்தியாசமான அதற்கு முன்பு எந்தவித அறிமுகமும் இல்லாத இளையவர் நாம் ஒன்றாக அணிதிரண்ட காலம். இனம் பற்றிய சிந்தனை மட்டுமே எம் மனதில் இருந்த நாம் வரித்துக்கொண்ட இலட்சியம்.
சாதியம் சமயம் மட்டுமல்ல எம்மில் பலரின் சொந்த பெயர் கூட தெரியாத காலம். ஒற்றை சொல்லே எம்மை உறவாக்கியது. அது தோழர் என்ற மந்திர சொல். குண்சி தோழர், ஜேம்ஸ் தோழர், கணேஷ் தோழர், நிவாஸ் தோழர், மாவின் தோழர், யசீர் தோழர், ஜோர்ஜ் தோழர் என பல நூறு தோழர்கள் கூடப்பிறந்த சகோதரர்களை விடவும் கூடி திரிந்த நண்பர்களை விடவும் உயர்வாக எண்ணி ஒன்று கலந்த நிலையில் அன்று ஒரு கூட்டில் தோழர்களாக நாம் இருந்தோம்.
பெயர்களை கொண்டு அவர் இந்துவா கிறிஸ்த்தவரா இஸ்லாமியரா என்று கூட அடையாளம் காண முடியாது. காரணம் அது அவர்களின் புனை பெயர். நாம் மனிதம் பேணும் தோழர்களாக எம்மை அடையாளம் கண்டோம். மதங்கள் கொண்டல்ல. பிறப்பால் இந்து கிறிஸ்த்தவன் இஸ்லாமியன் என்றாலும் தோழமையால் எம் மார்க்கம் மாக்சிசம் என்ற சமத்துவம்.
படுக்கும் பாய்களை மட்டுமல்ல பசித்த வயிற்றின் குடைச்சலையும் எமக்குள் பகிர்ந்தோம். கிடைத்ததை கொண்டு காலை கடலை மதியம் அளவுசோறு சாம்பாறு இரவு மிச்சம் மீதி. புறுபுறுக்கும் வயிறு பற்றி கவலை இன்றி குவளை நீர் பருகி இரவின் மடியில் மொட்டை மாடியில் கை தலையணையாக நாளை பிறக்கும் ஈழம் பற்றிய கனவில் பல நாட்கள் கண் அயர்ந்தோம்.
பருப்பும் சோறும் மட்டுமே உண்டு கடும் பயற்சி முடித்து வெளியேறும் நாளில் யாரவது தரும் உபயத்தில் அடிமாடு அடுப்பில் கொதிக்கும். அந்த குழம்பின் வாசனை அதுவரை பசியாற்றிய பருப்பின் இடத்தை பிடிக்கும். களமாட செல்பவன் அன்றுதான் வயிறார உண்டிருப்பான். இதுவும் ஒருவகை வேள்விக்கு வளர்த்த ஆடுகள் நிலையோ என்று இன்று எண்ணத்தோன்றுகிறது.
உறவுகளை பிரிந்து வசதியான வாழ்வை ஒறுத்து விரும்பிய கல்வியை இடையில் நிறுத்தி அறுசுவை உணவை வீட்டில் விட்டு இயக்க முகாமில் வெந்ததை தின்று வேகாத வெயிலில் பயிற்சி எடுத்த அந்த காலம் அத்தனை தோழர்களும் சுயநலம் விட்டு மக்கள் நலன் பற்றியே சிந்தித்த காலம். தியாகம் என்பது இத்தனை கடினம் ஆனது என்பதை
ஒரு பிளேன் டீ குடிக்கலாமா தோழர் என மதியம் கேட்கும் போது புரியும் அன்று சமையலுக்கு எதுவும் இல்லை என்று. ஒரு நேர பட்டினி சில வேளைகளில் இரு நேரமும் நீடிக்கும். ஆனாலும் நக்கல் நையாண்டி பேச்சுக்கள் வயிற்றை நிரப்பும். வீட்டில் உண்ட உணவுகள் பற்றி பேச பேச நாவில் நீர் ஊறும். நாளை ஈழத்தில் அது மீண்டும் நிதர்சனமாகும் என்ற நம்பிக்கையில் இரவு கண் மூடும்.
இத்தனை விட்டுக்கொடுப்புகள் இல்லாமை எமக்கு அன்று கற்றுத்தந்த பாடங்கள். அது நீடித்து நிலைத்திருந்தால் இன்று நாம் இருந்திருப்போம் ஈழத்தில். எங்கள் போராட்ட பாதை எது என்பது எங்கள் கரம் விட்டு என்று விலகியதோ அன்று நாம் எடுப்பார் கை பிள்ளை ஆனோம். பிராந்திய நலன்கள் எம்மை தத்தெடுக்க முனைந்த வேளை ஒரு கரம் மட்டுமே நீட்டினோம்.
உறவு சுமுகமாக போன வேளை சகோதர சண்டை மூண்டது. அதுவே எம் இரு கரங்களையும் பிராந்திய நலனிடம் ஒன்று சேர்த்தது. பெரு நிதி என்ற சூத்திரம் எங்கள் கொள்கையில் கைவைக்க தலைமைகள் தங்களை தக்க வைக்க முயன்றன. கேள்வி கேட்டதால் தோழமை கேள்விக் குறியானது. மீண்டும் பழைய குருடி கதவை திறந்த நிகழ்வுகள் நடந்தேறின. நாசமாய் போனது ஈழ கனவு.
பிரதேச வாதம் தனிநபர் போற்றுதல் என எமது தோழமை தெருவுக்கு வந்தது. வசதிகள் வாய்ப்புக்கள் அனைத்தையும் துறந்து கஷ்ட நஷ்டங்களில் பஞ்சம் பிணிகளில் கூட ஒன்றாக பின்னிப்பிணைந்த தோழர்கள் மீண்டும் வசதி வாய்ப்பு சகதிக்குள் சங்கமம் ஆனார்கள். ஒரு தசாப்பத (1978 – 1988) காலத்துள் நடந்த பரிணாம (வளர்ச்சி அல்ல) மாற்றம் அது.
கஷ்டமான காலத்தில் உயிரை துச்சம் என நினைத்து இயக்க வேலை செய்தவர்கள் பணம் வந்ததும் அதை பங்கிட்டவர்களால் துரோகி ஆனார்கள். அவர்கள் சார்ந்த கட்சிப் பணி காட்சி படங்கள் கூட மாயமாய் மறைந்தது. அன்று ஈழ மாணவர் பொதுமன்ற செயலாளர் தோழர் ஈழமணி என்ற முடியப்பு டேவிட்சன் போராட்ட பிரச்சார அரங்கில் ஈழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் மிக பிரபல்யம்.
ஆனால் இன்று அவரே தான் பங்கு கொண்ட நிகழ்வுகளின் காட்சி படத்தை முகநூலில் போடும் நிலை. இது போலவே கபூர் எனும் றோயல் கல்லூரி மாணவன் பாலா செண்பகம் அகிலன் என பல நூற்று கணக்கான இளையவர் சிந்திய வியர்வை மற்றும் இரத்தத்தில் உருவான அமைப்பின் தோழர்கள் இன்று பலவாறாக பிரிந்திருந்தாலும் அவர்களின் கண்ணியமான கடமை ஆரம்ப கால தோழர்களை கனம் பண்ணுதலே.
அதை அவர்கள் செய்யாதவரை அவர்தம் வாய் உரைக்கும் தோழர் என்ற பெயர் அவர்கள் வயிறு புடைக்க உண்டபின் வாய் நிறைத்து சப்பி துப்பும் வெற்றிலை பாக்கு போன்றதே. சகோதர படுகொலைக்கு முதல் புள்ளி இட்டவர் பிரபாகரன் என கூறும் நீங்கள் உங்கள் ஆரம்பகால தோழர்களை தூரவிலக்கி புல்லுருவிகளுக்கு பாதை சமைத்தவர் என்பதை மாகாண சபை காலத்தில் மட்டுமல்ல
அடுத்த வந்த பாராளுமன்ற தேர்தலிலும் அனுபவ பூர்வமாக அறிந்தவன் நான் என்பதால் ஒன்று மட்டும் கூறுவேன். பெரு நிதி வந்ததும் வலியவந்த கணக்கு பிள்ளை முதல் அதை தனிநபர் முதலீடாக மாற்றியவர்கள் உட்ப்பட தானும் தனது குடும்பமும் தப்பினால் போதும் என ஓடியவர்களை விட அன்று அத்தனை வசதி வாய்ப்புக்களையும் விடுத்து உங்களோடு இணைந்தவர் செயல்களையும் அங்கீகரித்து பதிவிடுங்கள்.
நாபாவின் தோப்பில் பதியம் போடப்பட்டு முளைத்து எழுந்த நூற்று கணக்கான தோழர்களில் எவரும் சோரம் போனவர்கள் அல்ல. ஈழ மாணவர் பொது மன்றம் முதல் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வரை உழைத்த தோழர்களை இறுதி வரை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் இன்று வேறு அணிகளில் இருந்தாலும் அன்று உங்கள் தோழர்களாக இருந்தவர்கள் என்பதை நினையுங்கள்.
‘’ நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை ‘’
– ராம் –