“அரசியல் கைதிகள் விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பேன்” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்துள்ளார். அகில இலங்கை தமிழ் மொழி தின விழா, யாழ். இந்துக் கல்லூரியில் இன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு இருந்தார்.
இதன்போது, அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரியும், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனை இன்றி விடுவிக்க கோரியும் ஜனாதிபதி நிகழ்வில் கலந்துகொள்ள இருந்த யாழ். இந்துக்கல்லூரிக்கு முன்பாக கறுப்புக்கொடி ஏந்தி பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் தான் சென்ற வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களின் கோஷத்தை செவிமெடுத்த ஜனாதிபதி, தான் சென்ற வாகனத்தை இடைவழியில் நிறுத்தி இறங்கியுள்ளார். பாதுகாவலர்களையும் மீறி தனது வாகனத்திலிருந்து இறங்கிய மைத்திரிபால சிறிசேன, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்துள்ளார்.
இதன்போது, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதியிடம், “நீங்கள் தமிழ் மக்கள் வாக்களித்தே ஜனாதிபதி ஆகினீர்கள். அன்னப்பறவை பாலினையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் தண்ணீரை தவிர்த்து, பாலை மாத்திரம் பருகும் அதேபோல நீங்களும் நாட்டில் வாழும் சிங்கள தமிழ் மக்களில் தமிழ் மக்களை தவிர்த்து சிங்கள மக்களின் நலனில் அக்கறை செலுத்துகின்றீர்கள்.
“அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும். அதில் முதல் கட்டமாக அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மூன்று அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்” எனத் தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த ஜனாதிபதி, “நான் தமிழ் மக்களின் வாக்குகளில் ஜனாதிபதியானேன், என்பதனை மறக்கவில்லை. தமிழ், சிங்கள மக்கள் என பிரித்து பார்ப்பதில்லை. அனைவரும் ஒரு நாட்டு மக்கள். அரசியல் கைதிகள் விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பேன். அதில் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவேன்” என, உறுதி அளித்தார்.