(எம்.எஸ்.எம். ஐயூப்)
புதிய அரசமைப்பு ஒன்றை வகுப்பதற்காக அரசாங்கம், கடந்த வருடம், முழு நாடாளுமன்றத்தையும் அரசமைப்புச் சபையாக மாற்றியது. அதன் கீழ், பல்வேறு துறைகள் விடயத்தில் அரசமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களைச் சிபாரிசு செய்வதற்காக, ஆறு உப குழுக்களும் அவற்றுக்கு மேல், வழி நடத்தல் குழுவொன்றும் நியமிக்கப்பட்டன. அந்த ஆறு உப குழுக்களிலும் வழிநடத்தல் குழுவிலும் ஒன்றிணைந்த எதிரணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் அங்கம் வகித்தனர்; வகிக்கின்றனர். அந்தக் குழுக்களின் அறிக்கைகள், கடந்த நவம்பர் மாதம், வழிநடத்தல் குழுவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன.
அவற்றை ஆராய்ந்த, வழிநடத்தல் குழு, அரசமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையொன்றைத் தயாரித்து, அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மூலம், கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.
இவ்வளவு காலம் இவற்றையெல்லாம் கண்டும் எதிர்ப்புத் தெரிவிக்காத சிலர், இப்போது புதிய அரசமைப்பொன்று அவசியமில்லை எனக் கூறி வருகின்றனர். இந்த நடவடிக்கைகளில் கலந்து கொண்டவர்களுக்குள், ஒன்றிணைந்த எதிரணியினரும் இருப்பதே விந்தையான விடயமாகும்.
புதிய அரசமைப்பொன்றைத் தயாரிப்பதற்கான செயற்பாடுகள் ஆரம்பித்து, சுமார் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகப் போகின்றன. இவ்வளவு காலம் அந்த நடவடிக்கைகளை எதிர்க்காது, இப்போது புதிதாக அரசமைப்பொன்று வேண்டாம் என்பவர்கள், இவ்வளவு காலம் எங்கே இருந்தார்கள்?
இந்த எதிர்ப்பில் ஈடுபட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவருமான விமல் வீரவன்ச, தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்.
பிரதமர் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையில், ஓர் அரசமைப்புத் தயாரிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், நாடாளுமன்றத்தின் மீது குண்டெறிய வேண்டும் என, அவர் பொதுமேடையில் கூறிய கருத்தொன்றின் காரணமாகவே, இந்தச் சர்ச்சை உருவாகியிருக்கிறது.
விமல் வீரவன்சவுக்கும் நாடாளுமன்றத்தின் மீது குண்டெறிவதற்கும் இடையில், பழைய தொடர்பொன்றும் இருப்பதனால், அவரது இந்தக் கூற்று, மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
நாடாளுமன்றத்தில், இதற்கு முன்னர் குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 1987 ஆம் ஆண்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது, தெற்கில் அதற்கு எதிராகப் பலத்த எதிர்ப்பு தூண்டிவிடப்பட்டது. அது வன்முறையாகவும் மாறியது. இந்த நிலையில்தான், நாடாளுமன்றத்தின் மீதும் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, ஆயுதப் போரில் ஈடுபட்டு, பல அசாதாரணமும் பாரியளவிலானதுமான தாக்குதல்களை நடத்திய தமிழீழ விடுதலை புலிகளாலும் நாடாளுமன்றத்துக்குள் ஒரு தாக்குதலையும் நடத்த முடியவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தத் தாக்குதலில், அப்போது தேசிய பாதுகாப்பு அமைச்சராகவிருந்த லலித் அத்துலத்முதலி உட்படப் பலர் படுகாயமடைந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மற்றும் ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டனர்.
1987 ஆம் ஆண்டு, ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி, அன்றைய ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம், அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் தலைமையில், நாடாளுமன்ற அறையொன்றில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, அந்தத் தாக்குதல் இடம்பெற்றது. தேசிய சுதந்திர முன்னணியை ஆரம்பிக்கும் முன், வீரவன்ச உறுப்பினராக இருந்த, மக்கள் விடுதலை முன்னணியே இந்தத் தாக்குதலை நடத்தியது.
அதன் சார்பில், விமல் வீரவன்சவின் மைத்துனரான அஜித் குமார என்பவரே, குண்டை அந்த அறைக்குள் எறிந்தார். எனவே தான், மற்றவர்கள் அச்சுறுத்தல் விடுப்பதைவிட, வீரவன்சவின் இந்த அச்சுறுத்தல், முக்கியத்துவம் பெறுகிறது என்றோம்.
இதில், மற்றொரு முக்கியமான விடயம் என்னவென்றால், இவ்வாறானதோர் அச்சுறுத்தலை, தமிழ் அல்லது முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் விடுத்திருந்தால், இந்நாட்டுச் சிங்கள அரசியல்வாதிகள், அதை எவ்வாறு பார்த்திருப்பார்கள்? குறிப்பாக, வீரவன்ச அதை எவ்வாறு பார்த்திருப்பார் என்பதேயாகும்.
அவ்வாறு நடந்திருந்தால், அவர்கள் அதனைச் சாதாரணமாகக் கருத்தில் கொண்டு இருக்க மாட்டார்கள். அதேவேளை, தமிழர் ஒருவர் அல்லது முஸ்லிம் ஒருவர் இவ்வாறு குண்டெறிவதாகக் கூறியிருந்தால், பொலிஸார் அவரைச் சும்மா விட்டு விடுவார்களா?
தமிழர் ஒருவர் குண்டெறிவதாக மிரட்டயிருந்தால் அதைத் தேசத் துரோகமாகவும் சிங்களவர் ஒருவர் அவ்வாறு கூறியிருந்தால் அது ஜனநாயகத்துக்கு எதிரான மிரட்டலாகவும் கருதுவது தான் இந்த நாட்டில் தேசப்பற்றாக இருக்கிறது. சிங்களவர் ஒருவர் அவ்வாறு மிரட்டினால் விட்டுவிடுவதும் தமிழர் ஒருவர் அல்லது முஸ்லிம் ஒருவர் மிரட்டினால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தான் சட்டத்தைப் பாதுகாப்போரின் முறையாகவும் இருக்கிறது.
உத்தேச அரசமைப்பு நாட்டுப் பிரிவினைக்கு ஏதுவாக இருக்கும் என்ற வீரவன்சவின் வாதத்தின் அடிப்படையிலேயே, அவர் இவ்வாறு மிரட்டினார். “நாம் பதவியில் இருந்திருந்தால், திலீபன் நினைவஞ்சலி போன்றவற்றுக்கு அனுமதி வழங்கியிருப்போம்” என பஷில் ராஜபக்ஷ அண்மையில் கூறியபோது, அதற்கு எதிராகக் கொதித்தெழவில்லை.
கொதித்தெழ வேண்டும் என நாம் கூறவில்லை. ஆனால், சிங்கள இனவாதிகளின் கண்ணோட்டத்தில் அதுவும் பிரிவினை வாதத்துக்கு உடந்தையாகும் கூற்றாகும். அதாவது, பிரிவினைவாதத்துக்கு உடந்தையாகும் செயலில், தமது தரப்பில் ஒருவர் ஈடுபட்டால் பரவாயில்லை. மற்றவர்கள் ஈடுபட்டால் அவர்களுக்குக் குண்டெறிய வேண்டும் என்பதே வீரவன்சவின் சிந்தனைப் போக்காக இருக்கிறது.
இந்த அரசமைப்பு விவகாரத்தில் உள்ள முக்கியமானதோர் விடயம் என்னவென்றால், தமிழர்கள் மத்தியிலும் சிங்களவர்கள் மத்தியிலும் உள்ள தீவிரபோக்காளர்கள், இந்த அரசமைப்புத் திட்டத்தை பொதுவாகவும் மேற்படி இடைக்கால அறிக்கையை குறிப்பாகவும் ஆதரிப்பவர்களைத் ‘துரோகிகளாக’க் குறிப்பிடுவதேயாகும்.
அதிலும், இரு தரப்பினரும் பிடித்துக் கொண்டு வாதிடும் சரச்சைக்குரிய விடயமாக, அரசாங்கத்தின் தன்மையைக் குறிக்க, இடைக்கால அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ள ‘ஒருமித்த நாடு’ என்ற பதமே இருக்கிறது. இதுவரை பாவிக்கப்பட்ட ‘ஒற்றையாட்சி’ என்ற பதத்துக்குப் பதிலாகவே இந்தப் புதிய பதம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விசித்திரமான விடயம் என்னவென்றால், இந்தச் சொல்லைப் பாவித்து, அரசாங்கம் தம்மை ஏமாற்ற முயற்சிப்பதாகத் தமிழ்த் தீவிரபோக்காளர்களும் சிங்களத் தீவிரபோக்காளர்களும் கூறுவதேயாகும்.
அரசமைப்புச் சீர்திருத்தத்தின் மூலம், தமக்கு ‘ஏக்கிய ராஜ்ஜிய’ அல்லது ‘ஒற்றை ஆட்சி’யைத் தருவதாகக் கூறும் அரசாங்கம், தமிழர்களுக்கு ‘சமஷ்டி’யைக் குறிக்கும் ‘ஒருமித்த நாடு’ ஒன்றை வழங்குவதாகக் கூறுகிறது என்றும் இது தம்மை ஏமாற்றும் தந்திரம் என்றும் சிங்களத் தீவிரபோக்காளர்கள் கூறி வருகின்றனர்.
அதேவேளை, சிங்களவர்களுக்கு ‘ஏக்கிய ராஜ்ஜிய’ அல்லது ‘ஒற்றை ஆட்சி’யை வழங்க முற்படும் அரசாங்கம், ‘சமஷ்டி’க்குப் பதிலாகத் தமக்கு, ‘ஒருமித்த நாடு’ ஒன்றை வழங்குவதாக வாக்குறுதி அளிக்கிறது என்றும் இது தம்மை ஏமாற்றும் உத்தியாகும் என்றும் தமிழ்த் தீவிரபோக்காளர்கள் கருதுகின்றனர்.
‘ஒருமித்த நாடு’ என்னும் தமிழ்ப் பதத்தையே இந்த இரு சாராரும், அரசாங்கம் தம்மை ஏமாற்றப் போகிறது என்று கூறுவதற்குப் பாவிக்கிறார்கள். ஏனெனில், இந்தச் சொல்லைப் பல அர்த்தங்களைத் தரும் வகையில் பாவிக்கலாம்.
‘ஒருமித்த கருத்து’ என்னும் போது, அங்கு ‘ஒரே கருத்து’ என்ற அர்த்தம் தொனிக்கிறது. ‘பலர் ஒருமித்துக் குரல் கொடுக்கிறார்கள்’ என்ற வசனத்தை எடுத்துக் கொண்டால், பலர் ஒன்று சேர்ந்து, என்ற கருத்துத் தொனிக்கிறது.
கடந்த திங்கட்கிழமை, அரசமைப்புச் சபையில், இந்த இடைக்கால அறிக்கை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்தச் சொல் ‘ஒன்று’ என்பதை குறிக்கிறது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
எம். ஏ. சுமந்திரன் கூறினார்.
விமல் வீரவன்ச போன்றோர்கள், இப்போது இந்தத் தமிழ்ச் சொல்லைப் பாவித்து, சிங்கள மக்களை அச்சங்கொள்ளச் செய்ய முயற்சிக்கிறார்கள். சிலர், இடைக்கால அறிக்கை தொடர்பான, நாடாளுமன்ற விவாதம் ஆரம்பித்த கடந்த திங்கட்கிழமை, ‘ஒருமித்த நாடுவக் எப்பா’ என்று சிங்களத்தில் போஸ்டர்களை அச்சிட்டு, கொழும்பிலும் ஏனைய சில பகுதிகளிலும் ஒட்டியிருந்தார்கள்.
ஒரு தமிழ்ச் சொல்லைப் பாவித்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போது, சாதாரண சிங்கள மக்கள், அந்தச் சொல் ஏதோ பயங்கரமான ஒன்றைக் குறிக்கிறது என்று தான் விளங்கிக் கொள்வார்கள். இவ்வாறு தந்திரங்களைப் பாவித்தே, சிங்கள மக்களை, இந்த இடைக் கால அறிக்கைக்கு எதிராகத் தூண்டிவிடப் பேரினவாத சக்திகள் முயற்சிக்கின்றன.
அரசமைப்பில் எந்தச் சொல் பாவிக்கப்பட்டு இருந்தாலும், நடைமுறையில் என்ன நடக்கப் போகிறது என்பதை ஆராய்ந்து பார்க்கத் தமிழ் தீவிரபோக்காளர்களோ அல்லது சிங்கள தீவிரபோக்காளர்களோ தயாரில்லை.
உண்மை என்னவென்றால், இந்த இடைக் கால அறிக்கையின் அடிப்படையில், அரசமைப்பொன்றைத் தயாரித்தாலும், நாட்டில் அடிப்படை மாற்றங்கள் எதுவும் இடம்பெறப் போவதில்லை என்பதேயாகும்.
அதிகாரப் பரவலாக்கல், இந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஒரு விடயமாகும். இப்போதும் நாட்டில் மாகாண சபைகளுக்கு அதிகாரம் பரவலாக்கப்பட்டு இருக்கிறது. உத்தேச அரசமைப்பில் பரவலாக்கப்பட்ட அதிகாரங்கள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். ஆனால் அரசாங்கத்தின் தன்மையை நிர்ணயிப்பது அதிகாரம் பரவலாக்கப்பட்டு இருக்கிறதா இல்லையா என்பதே. அந்த அடிப்படையிலேயே நாடு ஒற்றை ஆட்சியுள்ள நாடா, சமஷ்டி முறையுள்ள நாடா என்பதைத் தீர்மானிக்க முடியும்.
அதிகாரப் பரவலாக்கலின் போது, மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண சபைகளுக்கும் அதிகாரம் வழங்குவதற்காக, அரசமைப்பில் மூன்று பட்டியல்கள் இருக்கின்றன.
அவற்றில், பொதுப் பட்டியலை அகற்ற ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அது நன்மை பயக்கக்கூடிய விடயம் தான். ஆளுநரின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என்றும் அதில் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் நல்லது தான். ஆனால், அவை அதிகாரப் பரவலாக்கல் என்ற விடயத்தில், அடிப்படை அம்சங்களை மாற்றப் போவதில்லை.
தற்போதைய நிலையில் அரசாங்கம், சிங்களத்தில், ‘இலங்கை ஓர் ஒற்றை ஆட்சி’ உள்ள நாடாகவே குறிக்க விரும்புகிறது. அதிலும் மாற்றம் ஏற்படப் போவதில்லை. பௌத்த மதம் தொடர்பான விடயத்திலும் உத்தேச அரசமைப்பில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. அதிலும் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படத்தான் போகிறது. தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் அந்த விடயத்தில் விட்டுக் கொடுத்து இருக்கும் நிலையில், அந்த விடயத்தில் எவ்வகையிலும் மாற்றம் ஏற்படாது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கலாம்; இணைக்காமல் இருக்கலாம். கிழக்கு மாகாணத்தில் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பொன்றின் முடிவின்படி, அம் மாகாணங்களை இணைப்பதா அல்லது இணைக்காமல் இருப்பதா என்பதைத் தீர்மானிக்கலாம் என இந்த இடைக்கால அறிக்கையில் மூன்று மாற்று ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு உள்ளன. ஆனால், கடந்த வாரம், வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசா கூறியதைப் போல், அம் மாகாணங்களை இணைக்கும் சாத்தியக்கூறுகள் இப்போதைக்குத் தென்படவில்லை. அதாவது, அந்த விடயத்திலும் மாற்றம் ஏற்படப் போவதில்லை.
சிலவேளை, நாடாளுமன்றத்தில் இரண்டாம் சபையொன்றை (செனட் சபையொன்றை) உருவாக்க, அரசியல் கட்சிகள் இணக்கம் காணலாம்; அது ஏற்படக் கூடிய மாற்றமொன்றுதான். ஆனால், அதனால்த் தமிழ் மக்களுக்கோ அல்லது முஸ்லிம் மக்களுக்கோ இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கோ எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை.
ஏனெனில், மாகாண சபைகளின் பிரதிநிதிகளே, இந்த இரண்டாம் சபையின் உறுப்பினர்களாக வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஒன்பது மாகாண சபைகளில் ஏழு மாகாண சபைகள் பெரும்பான்மை மக்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. அவற்றின் பெரும்பான்மையான பிரதிநிதிகள், தமிழர்களாகவோ அல்லது முஸ்லிம்களாகவோ இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. எனவே, அது பெரும்பான்மை அரசியல்வாதிகளின் கையை, மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையேயன்றி வேறொன்றும் அல்ல.
நிறைவேற்று ஜனாதிபதி முறையினால் பாதிக்கப்பட்டதனாலேயே மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை விட்டு வெளியேறினார். அவ்வாறு வெளியேறி, அவர் நாட்டுக்கு வழங்கிய முதலாவது வாக்குறுதி, நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வேன் என்பதே.
அதற்காக, நாடாளுமன்றத்தில் தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால், சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம், அதைச் செய்யலாம் எனத் தமக்குச் சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, அவர், எதிர்க் கட்சிகளின், பொது ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் முன் தோன்றிய, 2014 நவம்பர் 21 ஆம் திகதி கூறினார். அதன்படி, மக்கள் அவருக்கு ஆணை வழங்கினார்கள்.
ஆனால் இப்போது, அவர் தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய முடியாது என்று கூறுகிறது. மக்களுக்கு, ஜனாதிபதி என்ன வாக்குறுதியளித்து இருந்தாலும், அவர் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறி வருகிறார்கள்.
அதாவது, மக்களின் ஆணையை விட, கட்சியின் கட்டுக் கோப்பு மேலானது; பலமானது என ஸ்ரீ ல.சு.கட்சிக்காரர்கள் கூறுகிறார்கள். இதைப்பற்றி, ஜனாதிபதி இது வரை எதையும் கூறவில்லை. ஆனால், போகிற போக்கைப் பார்த்தால், நிறைவேற்று ஜனாதிபதி முறை இரத்துச் செய்யப்பட மாட்டாது போல் தான் தெரிகிறது. அதாவது, அதிலும் மாற்றம் ஏற்படப் போவதில்லை.
நாடாளுமன்றத் தேர்தல் முறையில் என்றால் மாற்றம் ஏற்படலாம். ஏனெனில் ஏற்கெனவே, அது தொடர்பில் நாட்டில் ‘ஒருமித்த’ கருத்து இருக்கிறது.ஏற்கெனவே உள்ளூராட்சி மன்றங்களுக்காகவும் மாகாண சபைகளுக்காகவும் கலப்பு முறையில் தேர்தல்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, நாடாளுமன்றத் தேர்தல் முறையை மாற்றுவது தொடர்பாக, இணக்கம் காணப்பட்டுள்ளதால், அந்த விடயத்திலும் உத்தேச அரசமைப்பு, எதையும் செய்யப் போவதில்லை.
இந்த நிலையில் தான், இந்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் அரசமைப்பொன்றைத் தயாரித்தால் நாடாளுமன்றத்துக்குக் குண்டெறிய வேண்டும் என்கிறார்கள்; அதை ஆதரிப்போரைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்கிறார்கள்.
ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தில் சகல அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்தால், நாட்டுக்கு நல்ல, பயன் தரக்கூடிய அரசமைப்பொன்றைத் தயாரித்துக் கொள்ளவும் முடியும்.