மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கலந்துரையாடலொன்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும் மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில், செவ்வாய்க்கிழமை (31) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதியமைச்சர் அமீர் அலி, ஸ்ரீநேசன், அலி சாஹிர் மௌலானா மற்றும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டு இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்தனர்.
இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,
“வாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி, கிரான் உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்ந்துச் செல்வதால், உடனடியாக நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சம்பந்தமாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சர் பௌசி தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நிலைமையை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு, இதன்போது கிழக்குப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜயகொடி ஆராய்ச்சியுடன் தொடர்பு கொண்டு பணிப்புரை வழங்கப்பட்டது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல இனங்களும் வளமைப் போன்று தமது அன்றாட தொழில், வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மதஸ்தளங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் இதன்போது மேலும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், அரசியலுக்கு அப்பால் மதத்தலைவர்களை அழைத்து அவர்கள் ஊடாக இந்த விவகாரத்தை சுமூகமாக தீர்த்து வைக்கவும் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றார்.