ஆட்சிக்கு வந்த முசோலினி ‘இத்தாலியின் முன்னேற்றத்திற்காக நான் பல தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறேன். இதை எதிர்ப்பவர்…கள் யாராக இருப்பினும் அவர்களை அழித்துவிடுவேன்’ என்று பகிரங்கமாக அறிவித்தான். எதிர்க்கட்சிகள் அனைத்தையும் தடைசெய்தான். பத்திரிகை சுதந்திரத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்கினான். தன்னை எதிர்ப்பவர்களை நாடு கடத்தினான். தன் எதிரிகள் என்று அடையாளம் கண்ட அனைவரின் தலைகளையும் துண்டிக்கும்படி உத்தரவு பிறப்பித்தான்.
நாகை மாலி
இரண்டாம் உலகப்போரில் ஹிட்லருக்கு அடுத்து மிகப்பெரும் சர்வாதிகாரியாக இருந்தது முசோலினி. ஹிட்லரின் வாழ்க்கையைப் போலவே, முசோலினியின் வாழ்க்கையும் திகில்களும், திருப்பங்களும் உடையவை. இத்தாலி நாட்டில் ஓர் இரும்புப் பட்டறை வைத்து நடத்தியவரின் மகனாக 1883ஆம் ஆண்டில் ஜூலை 13இல் பிறந்தவர் முசோலினி. அப்போது இத்தாலியில் மன்னர் ஆட்சி இருந்தது. முசோலினியின் தந்தை மன்னர் ஆட்சி ஒழிந்து, ஜனநாயக ஆட்சி உருவாக வேண்டும் என்ற கருத்துடையவர். தனது இரும்புப் பட்டறைக்கு வருவோரிடம் அரசியல் பேசுவார். இதனால் முசோலினிக்கும் இளமையிலேயே அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. பல மொழிகளைக் கற்ற முசோலினி பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்கவன். ஆசிரியராகப் பணியாற்றிய முசோலினி, அதைவிடுத்து ராணுவத்தில் சேர்ந்தான். ராணுவத்திலிருந்து விலகி, பத்திரிகை தொழிலுக்கு வந்தான். பத்திரிகைகளில் ஏராளமான, பரபரப்பான கட்டுரைகளை எழுதினான். அவன் எழுதிய கட்டுரை ஒன்றுக்காக ஓராண்டு காலம் சிறைத்தண்டனை அனுபவித்தான். இதனால் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றான் முசோலினி.
இக்காலக்கட்டத்தில், 1914ஆம் ஆண்டு, முதல் உலகப் போர் மூண்டது. மீண்டும் முசோலினி ராணுவத்தில் சேர்ந்தான். இதே ஆண்டில்தான், ஜெர்மனி நாட்டில் ஹிட்லரும் ராணுவத்தில் சேர்ந்தான். 1919ஆம் ஆண்டு ‘முதல் உலகப்போர்’ முடிவுக்கு வந்தது. இந்தப் போரில் இத்தாலியில் மட்டும் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். பத்து லட்சம் பேர் படுகாயமடைந்தனர். இப்போரினால் இத்தாலி நாட்டின் பொருளாதாரம் சீரழிந்தது. பசியாலும், பட்டினியாலும் மக்கள் துன்பப்பட்டனர். உள்நாட்டுக் கலகங்கள் வெடித்தன.இச்சூழலில், ‘பாசிஸ்ட்’ எனும் ஒரு அரசியல் கட்சியை முசோலினி தொடங்கினான். 1921ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் நடைபெற்ற தேர்தலில் இவனால் ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும், சில இடங்களில் வெற்றிபெற்றான். எதிர்க்கட்சி தலைவரானான்.
நாடாளுமன்றத்தில் முசோலினி மிகவும் ஆவேசமாக பேசுவான். இவன் பேச்சு ஆளும் கட்சியை அச்சம் கொள்ளச் செய்தது. நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்தவிடாமல், அதை ஒரு கலகக்கூடமாக மாற்றினான் முசோலினி. இத்தாலி நாட்டின் ஏராளமான ஊர்களுக்குச் சென்று, கூட்டங்கள் நடத்தி, உணர்ச்சிவயமாகப் பேசி, ஆளும் கட்சிக்கு எதிராக மக்களை எழுப்பிவிட்டான். மக்கள் தன் பேச்சில் கட்டுண்டு கிடக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்ட முசோலினி, ஊர்கள் தோறும் அராஜகங்களை கட்டவிழ்த்துவிட்டான்.அரசு அலுவலகங்களைக் கைப்பற்றுமாறு தன் கட்சியினருக்கு கட்டளையிட்டான். முசோலினியின் ‘பாசிஸ்ட்’ கட்சியினர் பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டு அரசு அலுவலகங்களைத் தாக்கினர். அரசு ஊழியர்களை அடித்துவிரட்டிவிட்டு, அலுவலகங்களையும், கருவூலகங்களையும் கைப்பற்றினான். 1922ஆம் ஆண்டு ‘கருஞ்சட்டைப்படை’ என்ற ஒரு ‘அராஜகப் படை’யை உருவாக்கினான். இவர்கள் இத்தாலியின் தலைநகரைப் பிடித்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், மந்திரிசபையை கலைக்குமாறு இத்தாலி மன்னன் கட்டளையிட்டான். மந்திரி சபை விலகிக் கொண்டது.
ஆட்சியை முசோலினியிடம் ஒப்படைத்தார் இத்தாலி மன்னர்.ஆட்சிக்கு வந்த முசோலினி “இத்தாலியின் முன்னேற்றத்திற்காக நான் பல தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறேன். இதை எதிர்ப்பவர்கள் யாராக இருப்பினும் அவர்களை அழித்துவிடுவேன்” என்று பகிரங்கமாக அறிவித்தான். எதிர்க்கட்சிகள் அனைத்தையும் தடைசெய்தான். பத்திரிகை சுதந்திரத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்கினான். தன்னை எதிர்ப்பவர்களை நாடு கடத்தினான். தன் எதிரிகள் என்று அடையாளம் கண்ட அனைவரின் தலைகளையும் துண்டிக்கும்படி உத்தரவு பிறப்பித்தான். தான் ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில், தன்னை எதிர்த்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களின், தலைகளை வெட்டிச் சாய்த்தான் முசோலினி. எதிர்க்கருத்துக்களையும், எதிரிகள் என அடையாளப்படுத்துபவர்களையும் நசுக்குவதுதான் பாசிச சித்தாந்தம். இதை உருவாக்கியவன் தான் இத்தாலி நாட்டின் சர்வாதிகாரி முசோலினி. படிப்படியாக நாடாளுமன்றத்தின் அனைத்து அதிகாரங்களையும் தானே எடுத்துக் கொண்டு, 1922ஆம் ஆண்டு முதல் இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக முசோலினி விளங்கினான்.
இக்காலகட்டத்தில், ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லருடன் முசோலினிக்கு ஆழ்ந்த நட்பு ஏற்பட்டது. சித்தாந்தத்திலும், செயல்பாட்டிலும் ஒன்றுபட்ட இருவரும் நண்பர்களானதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? 1934ஆம் ஆண்டு இத்தாலியின் வெனிஸ் நகருக்குச் சென்று முசோலினியை நேரில் சந்தித்துப் பேசி, அகம் மகிழ்ந்தான் ஹிட்லர். இதைத்தொடர்ந்து இத்தாலி ராணுவத்தை பலப்படுத்தவும், ஆயுதத் தொழிற்சாலை அமைக்கவும் ஹிட்லர் பேருதவி செய்தான்.இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரும், முசோலினியும் ஓரணியில் நின்று நேச நாடுகளை எதிர்த்தனர். முதலில் இவர்களுக்கு வெற்றிகள் பல கிடைத்தாலும் போரில் சோவியத் யூனியன் பங்கேற்று ஹிட்லரின் நாஜிப் படைகள் முறியடிக்கப்பட்ட பின்னர், போரின் போக்கு தலைகீழாக மாறியது. இதனால் மக்களின் வெறுப்புக்கு உள்ளானான் முசோலினி. முசோலினிக்கு ஏற்பட்ட தோல்விகளினால் பாசிஸ்ட் கட்சி மேலிடம், முசோலினியின் மீது அதிருப்தியும், வெறுப்பும் அடைந்தது. இதனால் 1943, ஜூலை 9இல் முசோலினியை கட்சியிலிருந்து நீக்கியது. முசோலினியும், அவனது குடும்பத்தாரும் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டனர். முசோலினி சிறைவைக்கப்பட்ட செய்தி, ஹிட்லரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தன் உயிர் நண்பன் முசோலினியை விடுவிக்க ஹிட்லர் முயற்சி செய்தான்.
பகிரங்கமாக படை எடுத்துச் சென்று முசோலினியை விடுவிப்பது சாத்தியமல்ல என்பதை உணர்ந்த ஹிட்லர், தனது ரகசிய படையை அனுப்பினான். ரகசியப் படையினர் முசோலினி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். முசோலினியையும், அவன் குடும்பத்தாரையும் மீட்டனர். வடக்கு இத்தாலியில் முசோலினிக்கு ஓரளவு ஆதரவு இருந்ததால், தனது காதலி கிளாராவுடன் அங்கு தப்பிச் சென்றான் முசோலினி. அங்கு ஒரு பொம்மை அரசாங்கத்தை அமைத்துக் கொண்டு, இத்தாலியின் ‘அதிபர்’ நானே என பிரகடனம் செய்தான் முசோலினி.இந்நிலையில், ‘இத்தாலி விடுதலை இயக்கம்’ என்ற ஒரு புரட்சி இயக்கம் இத்தாலியில் தோன்றியது. இவர்கள் இத்தாலி முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்ல, முசோலினியை பிடித்து, அவனை கொலை செய்து விடுவது என்று தீர்மானித்தனர். புரட்சிக்காரர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்துகொண்ட முசோலினி, தன் காதலியுடன் பக்கத்து நாடான ஸ்விட்சர்லாந்துக்கு தப்பிஓட முயன்றான்.
இரண்டு ராணுவ லாரிகளில் தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு ஸ்விட்சர்லாந்துக்கு புறப்பட்டான் முசோலினி. ஆனால் போகும் வழியிலேயே புரட்சிக்காரர்கள் முசோலினி சென்ற லாரியை மடக்கிப் பிடித்தனர். முசோலினியை கைது செய்தனர். இக்காட்சியைக் கண்ட முசோலினியின் காதலி கிளாரா லாரியிலிருந்து அலறிக்கொண்டு கீழே குதித்தாள். அவளையும் புரட்சிக்காரர்கள் பிடித்துக் கொண்டனர். முசோலினியின் மனைவி மட்டும் லாரியில் பதுங்கிக் கொண்டு, புரட்சிக்காரர்களின் கண்ணில் படாமல் தப்பித்தார். இச்சம்பவம் 1945, ஏப்ரல் 27இல் நடந்தது.புரட்சிக்காரர்களின் கைகளில் சிக்கிக் கொண்ட முசோலினியையும், அவன் காதலி கிளாராவையும் டாங்கோ என்ற நகரில் ஓர் அறையில் அடைத்து வைத்தனர்.
மறுநாள் ஓர் காரில் அவர்களை நேராக ஒரு மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். முசோலினியையும், கிளாராவையும் காரிலிருந்து கீழே இறங்கச் சொன்னார்கள். இவர்கள் இருவரும் கீழே இறங்கியதும், நடு ரோட்டில் நிற்கச் சொன்னார்கள். இயந்திரத்துப்பாக்கிகளால் இருவரையும் சரமாரியாகச் சுட்டார்கள். இருவரின் உடல்களும் குண்டுதுளைக்கப்பட்டு, ரத்தவெள்ளத்தில் சாய்ந்தன. முசோலினிக்கு உதவியாக இருந்த இன்னும் சிலரையும் சுட்டுக் கொன்றனர். முசோலினியின் உடலையும், மற்றவர்களின் உடலையும் புரட்சிக்காரர்கள் மிலான் என்ற நகருக்கு கொண்டு சென்றனர். அங்கு விளக்குக் கம்பத்தில் அனைவரையும் தலைகீழாக தொங்கவிட்டனர். அன்று மாலை, உடல்களை விளக்குக் கம்பத்திலிருந்து இறக்கி, அடையாளம் தெரியாத இடத்துக்கு கொண்டு சென்று புதைத்தனர். ‘பாசிசம்’ என்ற கொடிய சித்தாந்தத்தை உலகில் விதைத்த முசோலினி மண்ணோடு மண்ணாக புதைந்து போனான்.
(சுப்ரமணி ராமகிருஷ்ணன்)