(கே. சஞ்சயன்)
புதிய கட்சிகளின் உருவாக்கம், உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள், ஏட்டிக்குப் போட்டியான விமர்சனங்கள், எதிர்கால முதலமைச்சர் யார் என்ற அனுமானங்கள் போன்றவை, வடக்கின் அரசியல் களத்தை மீண்டும் சுவாரசியப்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. அடுத்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் என இரண்டு தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. எனவே கொள்கை, கோட்பாடுகளுக்கு அப்பால், எல்லாக் கட்சிகளும், அதற்குத் தயாராக வேண்டிய நிலையில் உள்ளன.
ஜனவரி மாதம் நடக்கவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் முறையில், மாற்றங்கள் அறிமுகமாக இருப்பதாலும், மாகாண சபைத் தேர்தலும் கூட, தொகுதிவாரி முறையுடன் கூடியதாக நடக்க இருப்பதாலும், சிறிய கட்சிகளுக்குக் கூட செல்வாக்குமிக்க வேட்பாளர்களைக் கொண்டு, ஆசனங்களைக் கைப்பற்றும் சாத்தியங்கள் உள்ளன.
அதனால், புதிய கட்சிகளும் இப்போது வடக்கில் முளைக்கத் தொடங்கி இருக்கின்றன. ஏற்கெனவே, ஜனநாயக போராளிகள் கட்சி என்ற பெயரில், முன்னாள் போராளிகளின் கட்சி ஒன்று இயங்கி வரும் நிலையில், புதிதாக தமிழ்த் தேசிய ஜனநாயகப் போராளிகள் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, பல ஆண்டுகளாக இயங்குகின்ற கட்சிகளே, கூட்டங்களை நடத்தத் தள்ளாடும்போது, புதிய கட்சி, தனியார் விடுதியில் ஆரம்பக் கூட்டத்தை நடத்துகின்ற நிலையையும் அவதானிக்க முடிகிறது.
உள்ளூராட்சித் தேர்தல் வரும் ஜனவரி மாதம் நடைபெறக் கூடிய சாத்தியங்கள் இருப்பதால், அதை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு, நாளை (04) வவுனியாவில் கூடவுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலுக்கான, வெளிப்படையான அரசியல் நகர்வுகள், இன்னமும் தொடங்கப்படாவிடினும், வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான அடுத்த முதலமைச்சர் யார், என்ற விவாதம் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டது.
முதலமைச்சர் விக்னேஸ்வரனை, மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்துமா என்பதில் நிறையவே சந்தேகங்கள் இருக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள், கசப்பான அனுபவங்களால், இன்னொரு முறை அவரை முதலமைச்சர் பதவிக்கு முன்னிறுத்த, கூட்டமைப்புத் தலைமை எத்தனிக்காது.
குறிப்பாக, தமிழரசுக் கட்சிக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையிலான விரிசல், அவரது அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்று, தமிழரசுக் கட்சி ஒதுங்கும் அளவுக்குச் சென்று விட்டது.
இப்படியான நிலையில், தமிழரசுக் கட்சி இனிவரும் மாகாணசபையிலும், அமைச்சர் பதவிகளைத் தியாகம் செய்து விட்டு ஒதுங்கி நிற்கும் என்று எதிர்பார்க்க முடியாது. முதலமைச்சர் பதவிக்கு மீண்டும் விக்னேஸ்வரனை முன்னிறுத்த தமிழரசுக் கட்சி ஒருபோதும் இணக்கம் தெரிவிக்க வாய்ப்பில்லை.
முதலமைச்சருக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, தமிழரசுக் கட்சி கொண்டு வந்தபோது, அதற்கு எதிராகக் கூட்டமைப்பின் மற்றைய கட்சிகள் எல்லாமே ஒன்றாக நின்றன.
அப்போது, முதலமைச்சரைத் தீவிரமாக ஆதரித்த டெலோ, அடுத்த சில வாரங்களிலேயே தனது முடிவுக்காக வருந்துகின்ற நிலையும் ஏற்பட்டிருந்தது. டெலோ முன்மொழிந்திருந்த மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்துக்குப் பதிலாக, அதேகட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட, குணசீலனுக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்ததால், இந்தநிலை ஏற்பட்டது.
இதையடுத்து, தற்போதைய பதவிக்காலத்துக்கு மட்டுமே, விக்னேஸ்வரனுக்கு ஆதரவு அளிப்பதென்றும், இனிமேல் அவரை ஆதரிப்பதில்லை என்றும், டெலோ தலைமைப்பீடம் முடிவெடுத்துள்ளது, இதனால், விக்னேஸ்வரனுக்கு எதிராகக் காய்களை நகர்த்தி வந்த தமிழரசுக் கட்சி இன்னும் பலமடைந்துள்ளது.
ஈ.பி.ஆர்.எல்.எப் அடுத்த முறை கூட்டமைப்புக்குள் இருந்து போட்டியிடுமா இல்லையா என்ற தெளிவு இன்னமும் இல்லாத நிலையில், விக்னேஸ்வரனை முன்னிறுத்தப் பங்காளிக் கட்சிகள் முடிவெடுப்பது என்பது சாத்தியமற்ற விடயமாகவே தென்படுகிறது.
இந்தநிலையில், முன்னாள் பிரதம நீதியரசர் சிறீபவனை, முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த, தமிழரசுக் கட்சி திட்டமிட்டுள்ளதாக சில ஊடகங்கள் புரளியைக் கிளப்பிவிட, இனிமேல், வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு வெளியிடத்தில் இருந்து யாரையும் இறக்குமதி செய்யமாட்டோம் என்று, அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்திருந்தார்.
விக்னேஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முதலமைச்சர் பதவியைக் கைப்பற்ற அவர் திட்டமிட்டதாக, அவர் மீது காட்டமான விமர்சனங்கள் முன்னர் வந்ததுண்டு. அவருக்கும், வடக்கு முதல்வர் பதவி மீது ஆர்வம் இல்லையென்றும் கூற முடியாது.
ஆனாலும், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், வடக்கு முதல்வர் பதவிக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை முன்னிலைப்படுத்த ஆரம்பித்துள்ளார்.
காங்கேசன்துறையில் கட்சி அலுவலகத் திறப்பு விழாவில், முதலமைச்சர் பதவிக்கு மாவை சேனாதிராசா பொருத்தமானவர் என்று கூற, அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த மாவையும் அமைதியாகவே இருந்திருக்கிறார்.
சம்பந்தனிடம் இதுகுறித்துக் கேள்வி எழுப்பியதற்கு, “அதுபற்றி இப்போது எந்தக் கருத்தையும் கூற முடியாது” என்று கைவிரித்திருக்கிறார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பினால் கழற்றி விடப்பட்டு விட்டால், அடுத்து அவர் என்ன செய்வார், என்ன செய்யப் போகிறார் என்ற கேள்விகள் இருக்கின்றன.
இத்தகைய சந்தர்ப்பத்தில், விக்னேஸ்வரன் இரண்டு முடிவுகளை எடுக்கலாம். அரசியல் இனிமேல் போதும் என்று கௌரவமாக ஒதுங்கிக் கொள்வது முதலாவது தெரிவு.
தன் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் அவர்களுக்காக அரசியலில் தொடர்வது என்று எடுக்கும் முடிவு இரண்டாவது தெரிவு.
உடல்நிலை, கௌரவத்தைக் காப்பாற்றுதல், தலைமைக்கு துரோகமிழைத்தவர் என்ற அவப்பெயரைச் சந்திக்காமல் தப்பித்தல் போன்ற காரணங்கள், முதலாவது தெரிவுக்கு வலுச்சேர்க்கும்.
தமிழ் மக்களின் ஆணை, அவர்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் கடப்பாடு, அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுதல் போன்ற காரணிகள் இரண்டாவது தெரிவுக்கு வலுச்சேர்ப்பதாக அமையக்கூடும்.
முதலமைச்சர் எத்தகைய முடிவை எடுப்பார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். என்றாலும், அவரை எப்படியாவது கூட்டமைப்பை விட்டு வெளியே கொண்டு வந்து, மாற்று அணி ஒன்றுக்குத் தலைமை தாங்க வைப்பதற்கு ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் முனைப்புடன் இருக்கின்றன.
கடந்தவாரம், ஒரு செய்தியாளர் சந்திப்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன், முதலமைச்சரின் நிலைப்பாடுகளை வரவேற்றுக் கருத்து வெளியிட்டிருந்தார். அவரை முதலமைச்சர் பதவியில் வைத்திருப்பதற்கான போராட்டங்களிலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஈடுபட்டிருந்ததும் நினைவில் கொள்ளத்தக்கது.
இவ்வாறாக, அடுத்த மாகாணசபைத் தேர்தலுக்கான தயார்படுத்தல்கள் இப்போதே நடந்து கொண்டிருக்கும் நிலையில், எஞ்சிய பதவிக்காலத்தை, வடக்கு மாகாணசபை எந்த வினைத்திறனும் இல்லாமலேயே கடத்திக் கொண்டிருக்கிறது.
முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பின்னர், வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகள், மந்தநிலைக்குச் சென்று விட்டதாகவே தெரிகிறது. அது முன்னரே, பலராலும் எதிர்வு கூறப்பட்டு வந்த விடயமும் கூட.
எனவே, எஞ்சிய காலத்திலும் கூட, வடக்கு மாகாணசபை பெரிதாக எதையும் சாதிக்கப் போவதில்லை. முதலமைச்சருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் ஒரு கூட்டத்தில், அடுத்த முதலமைச்சராக யார் வந்தாலும், பெரிதாக எதையும் செய்து விட முடியாது. அதற்கு அதிகாரமும் இல்லை; நிதியும் இல்லை என்று கூறியிருந்தார். ஆக, வடக்கு மாகாண சபையின் தற்போதைய பதவிக்காலத்தின் தோல்விகளுக்கும் இயலாமைகளுக்கும் அதிகாரப் பற்றாக்குறையின் மீது பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளும் முயற்சிகள், இப்போதே தொடங்கி விட்டதாகத் தெரிகிறது.
ஆனால், இருக்கின்ற அதிகாரங்கள் எப்படிப் பயன்படுத்தப்பட்டன என்ற கேள்வி இருக்கிறது. வடக்கு மாகாணசபை, தனது அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு தவறி விட்டது என்றும், அதற்குத் தேவையான நியதிச்சட்டங்களை உருவாக்கத் தவறி விட்டதாகவும், அண்மையில் எதிர்கட்சித் தலைவர் தவராசா குற்றம் சாட்டியிருந்தார்.
வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்குப் போதிய சட்ட அறிவு இல்லை என்பது அவரது வாதம். இந்தளவுக்கும், வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் ஒரு நீதியரசராக இருந்தவர். குற்றச்சாட்டைக் கூறிய தவராசாவும் ஒரு சட்டத்தரணி, முன்னர் அமைச்சராக இருந்த டெனீஸ்வரன் ஒரு சட்டத்தரணி. உறுப்பினராக இருக்கும் கேசவனும் ஒரு சட்டத்தரணி. இவர்களெல்லாம் இருந்தும், நியதிச் சட்டங்களை உருவாக்கும் வல்லமை வடக்கு மாகாணசபைக்கு இல்லாமல் போனது எப்படி? சட்ட அறிவுடைய இவர்கள் அதற்கான வழியைக் காட்டியிருக்க வேண்டாமா என்ற கேள்வி எழுவது இயல்பு.
அதுமாத்திரமன்றி, மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதில், வடமாகாண அரசு, எந்தளவுக்கு விட்டுக்கொடுப்புடன் நடக்கிறது என்ற கேள்வியும் இருக்கிறது.
அண்மையில் விவசாய அமைச்சராகப் பொறுப்பேற்ற சிவநேசன், சில நாட்களுக்கு முன்னர், தாம் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும், இல்லையேல் மாகாண அபிவிருத்திக்குத் தேவையான நிதியை, பெற முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
முன்னைய விவசாய அமைச்சர் அதைச் செய்யவில்லை; அந்தத் தவறை, தான் செய்யமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டார்கள் என்று, இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மீது முதலமைச்சர் விக்னேஸ்வரன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அவர்கள் பதவி விலக்கப்பட்டனர்; அல்லது விலகினர். அதற்குப் பின்னர், விவசாய அமைச்சராக முதலமைச்சரால் நியமிக்கப்பட்டவர்தான், இப்போது மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப் போவதாக அறிவித்திருக்கிறார்.
அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் சரியாகச் செயற்படாத ஜனாதிபதிக்குக் கண்டனம் தெரிவித்து, ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையை, புறக்கணிக்க வடக்கு மாகாணசபை முடிவு செய்திருந்தது.
முதலமைச்சர், அமைச்சர்கள், சபை உறுப்பினர்கள் எல்லோரும் புறக்கணித்த ஜனாதிபதியின் வருகையின்போது, விவசாய அமைச்சர் சிவநேசன் மாத்திரம், வெற்றிலை கொடுத்து வரவேற்றிருந்தார்.இது வடக்கு மாகாண சபையின் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு முரணானதாக இருந்தது. இப்போது மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு, முதலமைச்சரின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணானது.
இந்த விடயத்தில் முதலமைச்சர் என்ன செய்யப்போகிறார், வடக்கு மகாணசபையின் கடிவாளம் முதலமைச்சரின் கையில் இருந்து நழுவி விட்டதா என்ற கேள்விகள் எழுகின்றன.
மொத்தத்தில், வடக்கு அரசியல் களம், இப்போது முற்றிலுமாகக் குழம்பிப் போயிருக்கிறது. யார், எப்போது, என்ன செய்வார்கள் என்றே தெரியாத நிலைதான் காணப்படுகிறது.