தமிழினியின் சிறு குடிலில்…

(விஸ்வா)
தமிழினியின் மரணச் சடங்கில் கலந்துகொண்டுவிட்டு, இதனை எழுதுகின்றேன். பரந்தனிலிருந்து முல்லைத்தீவிற்கு செல்லும் பிரதான வீதியில், சற்று தூரம் சென்று இடப் பக்கமாக திரும்பும் ஒரு ஒழுங்கையில் சிறிது தூரம் செல்ல, ஒரு வயல்வெளியின் நடுவே அமைந்திருக்கும் சிறு குடில்தான் தமிழினியின் வீடு. போரின் பின்னர் இடம்பெற்ற மீள்குடியேற்றத்தின் பின்னர், பல மண் வீடுகளும், குடிசைகளும் கல் வீடுகளாகி விட்டன. வீடமைப்புத் திட்டங்கள் பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு கணிசமான அளவில் நிறைவு பெற்று, தற்போதும் இந்திய வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழினியின் வீடு இன்னும் குடிசையாகவே இருக்கின்றது. என்ன காரணம் என்று தெரியவில்லை.

1991ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்த சிவசுப்பிரமணியம் சிவகாமி என்ற தமிழினி பின்னர் விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியல் பிரிவற்கு பொறுப்பாளராக இருந்தார். இயக்கத்தில் பொறுப்பான இடங்களில் இருந்தவர்கள் பலர் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்ற காலங்களில் காணிகள் வாங்கி, வீடுகளும் அமைத்துக் கொண்டார்கள். வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் மற்றும், சமாதான காலத்தில் தாயகப் பகுதிகளுக்கு வந்தவர்கள் சிலரின் உதவிகளைப் பெற்று ஓரளவிற்கு அவர்கள் தங்களின் குடும்பங்களை வளப்படுத்திக் கொண்டனர். இவர்களில் களத்தில் பேராடிய போராளிகளை சேர்க்க முடியாது. பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் சிலரே இவ்வாறு, தங்களை வளப்படுத்திக் கொண்டார்கள். ஆனால் ஏழ்மையான குடும்பங்களிலிருந்து இயக்கத்தில் இணைந்த பெண்போராளிகள் பலருக்கு இப்படியான வாய்ப்புகள் கிட்டவில்லை.

விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியல் துறையின் பொறுப்பாளராக இருந்த தமிழினி தனது வீட்டிற்காகவோ, தாய், சகோதரிகளுக்காகவோ எதனையும் சேர்த்து வைக்கவில்லை. முழுவதுமாக இயக்கத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பணிகளை செய்பவராகவே இருந்தார். சமாதான பேச்சுவார்த்தை காலங்களில் புலம்பெயர் நாடுகளுக்கு அவர் சென்றிருக்கின்றார். அங்கிருந்தும் எதனையும் அவர் தனக்காக கொண்டுவரவில்லை. அதனால், அவரது குடும்பம் ஏழ்மை நிலையிலேயே இருந்தது. இப்போதும் அப்படியே இருக்கின்றது.IMG_1144

இறுதிப் போரின் போது, உடனடியாக படையினரிடம் சரணடையாமல், மக்களோடு மக்களாக வெளியேறி வந்த நிலையில், தமிழினி படையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அங்கு அவர் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக, செய்திகள் வெளியாகின. எனினும், அவ்வாறு நடந்ததா என்பது குறித்து தமிழினி யாரிடமும் தெரிவித்ததாக தகவல் இல்லை. சில சமயம் மிக நெருக்கமானவர்களிடம் அவர் அது பற்றி கூறியிக்கலாம் அல்லது அவது கணவரிடமாவது கூறியிருக்கலாம் ஆனால், அது பற்றிய தகவல்கள் பரவலாக வெளியாகவில்லை.

ஆனால், அவர் 2013ம் ஆண்டு விடுதலையானதன் பின்னர் மனதால் சித்திரவதைக்குள்ளானதை தனது முன்னாள் தோழிகளிடம் கூறினார்.

அவர் கைது செய்யப்பட்டிருந்தாலும், அரசாங்கத்தின் செல்வாக்குடன் இருந்ததாகவும், தேர்தலில் போட்டியிடுவதற்காகவே அவர் விடுதலை செய்யப்பட்டதாகவும் அரசியல்வாதிகள் சிலர் கதைகட்டினர். தமிழினி விடுதலையானவுடனேயே உதயன் பத்திரிகையில் அவரை புண்படுத்தும் விதத்தில் கட்டுரை ஒன்று வெளியானது. அவர், அப்போதைய மஹிந்த அரசாங்கத்தின் ஆதரவுடன் தேர்தலில் களமிறக்குவதற்காக விடுதலை செய்யப்பட்டார் என்றும், இன்னும் பல்வேறு பொய்யான தகவல்களையும் வைத்து அவர அவசரமாக எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்ட கட்டுரை அது.

இப்பத்திரிகையில் வெளியான கட்டுரை தொடர்பாகவும், அவர் தனது தோழிகளுடன் கூறி வேதனைப்பட்டிருக்கின்றார். தமிழினியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட முன்னாள் போராளியான பெண்ணொருவர் இதனை என்னிடம் கூறினர். ஆனால், அவ்வாறான திட்டம் ஒன்று அரசாங்கத்திடம் இருந்ததாகவும், அதற்காக பெரிய தொகையொன்றை தமிழினிக்கு வழங்க அரசாங்கத்தில் சிலர் முன்வந்ததாகவும் அதற்கு தமிழினி மறுத்து விட்டதாகவும் அவர் கூறினார்.IMG_1151

அவரது திருமணம் பற்றியும் அவர் குறிப்பிட்டார். புலம்பெயர் நாடொன்றிலிருந்து, திருமணமாகி விவாகரத்தான ஒருவர் தமிழினியை திருமணம் முடித்ததாகவும், தமிழினி சிறையிலிருக்கும் போதே அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார். கொழும்பில் தமிழினி வசிக்க, அவரது கணவர் ஜெயக்குமார் புலம்பெயர் நாட்டில் வசித்த நிலையில் கொழும்பிற்கு அடிக்கடி வந்து செல்வதாகவும் அவர் சொன்னார்.

தமிழினி புற்றுநோயினால் பாதிக்கப்பட்டமை அண்மைக் காலத்திலேயே தெரியவந்துள்ளது. இந்நிலையில், அவர் மகஹரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 18-10-2015 அன்று, சிகிச்சை பலனின்றி மரணித்தார்.

நேற்று (20-10-2015) பரந்தனில் உள்ள தமிழினியின் குடிலுக்கு முன்பாக பந்தலிடப்பட்டு, அவரது சக தோழியான வெற்றிச்செல்வி என்ற, போரில் ஒரு கையையும் ஒரு கண்ணையும் இழந்துள்ள முன்னாள் போராளியின் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. முன்னாள் பெண் போராளிகள் தமிழினியுடனான போராட்ட அனுபவங்களை அத்தருணத்தில் பகிர்ந்து கொண்டனர். தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்விற்கு முன்னாள் போராளிகள் பலர் அச்சம் காரணமாக வருகை தரவில்லை. குறிப்பாக பெண் போராளிகள்.

IMG_1141முன்னைய காலங்களில் இவ்வாறான நிகழ்வுகளில் புலனாய்வாளர்களின் கெடுபிடிகள் அதிகம் இருந்தன. முன்னாள் போராளி ஒருவரின் மரண நிகழ்வில் யார் யாரெல்லாம் கலந்து கொள்கின்றார்கள் என்பதை அவதானித்து பின்னர் அவர்களைத் தேடிச் சென்று அச்சுறுத்தும் நிலைமைகளும் இருந்தன. ஆனால், தமிழினியின் மரண நிகழ்வில் அவ்வாறான தொல்லைகள் எதுவும் இருக்கவில்லை. வந்திருந்த முன்னாள் பெண் போராளிகள் தங்கள் போர்க்கள அனுபவங்களை அஞ்சலி உரைகளில் குறிப்பிடும் அளவிற்கு நிலைமை மாற்றமடைந்துள்ளதை அவதானிக்க முடிந்தது.

அத்துடன், தமிழினிக்காக வைக்கப்பட்டிருந்த அஞ்சலி பதாதைகளில், புனர்வாழ்வு ஆணையாளரின் தலைமைச் செயலகத்தின் பதாதை ஒன்றும் காணப்பட்டது. இதனை ஒரு நல்ல விடயமாகவே பலரும் பார்த்தனர்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர் அமைப்புக்கள் தேர்தல் காலங்களில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கின்ற நிலையில், தமிழினியின் குடும்பம் போன்று ஏழ்மையில் வாழும் முன்னாள் போராளிகளுக்கு குறிப்பாக பெண்களின் தலைமையில் உள்ள குடும்பங்களுக்கு ஏன் உதவக்கூடாது என்ற கேள்வி தமிழினியின் மரணசடங்கிற்கு சென்று வந்த பின்னர் எனது மனதில் தோன்றியது.
(தேசம் — Thesam)