மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு, தாண்டவன்வெளி பகுதியிலுள்ள வீடொன்றில் முறைகேடாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில், 27 வயது யுவதியொருவரும் க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் 7 பேரும், இன்று (13) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தாண்டவெளி, பாரதீ வீதி, இரண்டாம் குறுக்கு தெருவிலுள்ள குறித்த வீட்டில், மாணவர் குழுக்களின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக, மட்டக்களப்பு தலைமையப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், அவ்வீட்டைத் திடீரென முற்றுகையிட்டபோதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சுற்றிவளைப்பின் போது, அவ்வீட்டிலிருந்து கஞ்சா, சிகரெட்டுகள் உள்ளிட்ட போதைப்பொருட்களும் ஆண் உறைகளும் மீட்கப்பட்டுள்ளனவென, பொலிஸார் தெரிவித்தனர். தமது மகன், மட்டக்களப்பில் கல்வி கற்பதற்காக அவ்வீட்டைத் தம்பதியினர் வாடகைக்குப் பெற்றுள்ள நிலையில், மகன், தனது நண்பர்களை இணைத்துக்கொண்டு, இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுவந்துள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள யுவதி, தனது காதலனைச் சந்திப்பதற்காக அங்கு வருகை தந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. யுவதியை விசாரணை செய்த மட்டக்களப்பு பொலிஸார், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் யுவதியை அனுமதித்து, மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.