லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவால் தலைமை தாங்கப்பட்ட, சிரிய இராணுவமும் அதன் தோழமை நாடுகளும், சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் இறுதிக் கோட்டையையும், நேற்று முன்தினம் (08) கைப்பற்றியுள்ளன என, அக்கூட்டணியின் தளபதியொருவர் தெரிவித்தார். இதன்மூலம், ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் ஆட்சி, சிரியா முழுவதிலும் வீழ்த்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
“ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் இறுதிக் கோட்டையான அபு கமல், அக்குழுவிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது” என, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்துக்கு ஆதரவான இராணுவக் கூட்டணி தெரிவித்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு, கிட்டத்தட்ட முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டது. இதற்கு முன்னர் 2015இல், உச்சநிலையில் காணப்பட்ட அக்குழு, ஈராக்கிலும் சிரியாவிலும், பெருமளவு பகுதிகளை ஆட்சி செய்தது. இரு நாட்டு எல்லைகளையும் தாண்டி ஆட்சி செய்த அக்குழு, எல்லைகளை இல்லாமல் செய்ததோடு, பணத்தை அச்சடித்திருந்தது; தமது சட்டங்களை அமுல்படுத்தியிருந்தது; அத்தோடு, உலகம் முழுவதிலும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டு நடத்தியிருந்தது.
ஆனால், அண்மைக்காலமாகத் தோல்விகளைச் சந்தித்துவரும் அக்குழு, சிறிய நிலப்பரப்பொன்றுக்குள் அடைக்கப்பட்டுள்ளது. ஈராக்கில், அநேகமாக எல்லா இடங்களிலிருந்தும் தோற்கடிக்கப்பட்டுள்ள அக்குழு, சிரியாவில் சிறியளவிலான இடங்களில் காணப்படுகிறது.
சிரியாவின் மத்திய, கிழக்குப் பகுதிகளில் உள்ள அவ்விடங்களிலிருந்து, அக்குழுவை விரட்டுவதற்கான ஆயுத நடவடிக்கை, கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்திருந்தது. அதில், அபு கமல் பகுதி, பிரதான பகுதியாகக் கருதப்பட்டது.
இந்நிலையிலேயே, ஹிஸ்புல்லா குழுவின் தலைமையில், இதற்கான இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் விளைவாக, “அபு கமல் விடுவிக்கப்பட்டுள்ளது” என, சிரிய அரச தொலைக்காட்சி அறிவித்தது.
ஆனால், மோதல் அங்கு இன்னமும் நிறைவடையவில்லை எனவும், தொடர்ந்த வண்ணமே காணப்படுகிறது என, கண்காணிப்பு அமைப்பான, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்தது.
அபு கமல் பகுதி, ஈராக்கிய எல்லைப் பகுதியில், யூப்பிரட்டீஸ் நதியின் கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதைக் கைப்பற்றுவதற்கான மோதல் நடவடிக்கையில், ஹிஸ்புல்லா குழு, ஈராக்குக்குள் நுழைந்தது எனவும், ஈராக்கின் ஆயுதக்குழு, சிரியாவுக்குள் நுழைந்து, இந்நடவடிக்கைக்கு உதவி வழங்கியது எனவும், சிரிய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
அபு கமல் பகுதியிலிருந்து, ஐ.எஸ்.ஐ.எஸ் குழு முழுமையாக வெளியேற்றப்பட்டது என்பது உண்மையென்றாலும் கூட, அதற்கு அருகிலுள்ள பாலைவனப் பகுதியின் சில பகுதிகள், அருகிலுள்ள கிராமங்கள், நகரங்கள் ஆகியவற்றில், ஐ.எஸ்.ஐ.எஸ் குழு இன்னமும் காணப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ் குழு, இவ்வாறு தனது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டாலும் கூட, ஈராக்கிலும் சிரியாவிலும், ஆங்காங்கே மறைந்திருந்து, தாக்குதல்களை நடத்திவருகிறது. அதேபோல், இணையத்தளங்களில் இன்னமும் பலமாக இருக்கும் அக்குழு, தாக்குதல் நடத்துவதற்காகத் தனிநபர்களைத் தூண்டிவிடும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.