‘கூட்டிற்குள் பிறக்கும் பறவைகள் பறக்கும் பறவைகளை சுகவீனமானவை என்றே கருதுகின்றன.’ அதேபோல் தெற்காசியாவில் பிறப்பவர்கள் மேற்குலகை கேள்விகேட்பதோ அல்லது அவர்களை எதிர்த்து தன்னிறவை அடைவதோ சுகவீனமானவர்களின் செயற்பாடு என்றே கருதுகின்றனர். சிலர் இதற்கு விதிவிலக்கு, ஆனால் இந்தச்சிலரால் பிரமாண்டமான சனத்தொகையை திசைதிருப்ப முடியாது. தெற்காசியா மேற்குலக ஆட்சியையும் அடக்குமுறையையும் எதிர்த்துப் போராடி 2ம் உலகப் போரின் பின் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரத்தை பெற்றுக் கொண்டது, எனினும் மேற்குலகத்தின் விருப்பத்துக்கிணங்க இன்றும் அரசியல் முறைமைகளை கையாண்டு வருகின்றது. இந்தியாவின் முதல் கட்சியான காங்கிரஸ் கட்சியும் இலங்கையின் முதல் கட்சியான இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியும் மேற்குலக ஆலோசனைக்கும் விருப்பத்திற்கும் இணங்க உருவாக்கப்பட்டது.
சுருக்கமாக கூறப்போனால் தெற்காசிய நாட்டுத்தலைவர்கள் எதிரிகளின் ஆலோசனைக்கு இணங்க ஆட்சிசெய்து வருகின்றனர். மேற்குலகம் தெற்காசியாவை சரியான முறையில் வழிநடத்தியிருந்தால் தெற்காசியா சீனாவிற்கு பின்னடைவாக இருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. இதிலிருந்து நாம் தெளிவாக விளங்கிகொள்வது யாதெனில் மேற்குலக சூழ்ச்சியில் தெற்காசிய தலைவர்கள் வீழ்ந்துள்ளனர். சீனாவிலும் பார்க்க தெற்காசியாவில் சனத்தொகை கூடுதலாக உள்ளது. தெற்காசிய தலைவர்கள் இந்த சனத்தொகையை சரியானமுறையில் வழிநடத்தி தன்நிறைவை அடைந்திருப்பார்களானால் மேற்குலக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வந்திருக்கும். ஆகையால் மேற்குலகம் தன் ஆதிக்கத்தை பேணிப் பாதுகாப்பதற்காக தனது சூழ்ச்சியினால் தெற்காசியாவை திட்டமிட்டு பின்னடைய செய்துள்ளது.
ஜனநாயகம் என்ற பெயரில் தெற்காசியாவில் சனத்தெகை அதிகரித்துச் செல்கிறது, ஆனால் அதற்கு ஏற்றது போல வீடு, கல்வி, மருத்துவ வசதிகளோ அதிகரிக்கப்படவில்லை. இது மக்களுக்கிடையே போட்டிகளையும் ஊழல்களையும் கணிசமான அளவு அதிகரிக்கச் செய்யும். தெற்காசிய நாடுகளில் இந்தியா அதிக ஊழல் நடைபெறும் நாடாக காணப்படுகின்றது. தெற்காசியாவின் பல்கலைக்கழகங்களில் ஒன்று கூட உலகின் முதல் 200 பல்கலைக்கழகங்களின் வரிசையில் இல்லை. கடந்த இரண்டு ஒலிம்பிக்போட்டிகளில் தெற்காசியாவால் ஒரு தங்கப்பதக்கத்தைகூட வென்றெடுக்க முடியவில்லை. ஆனால் தெற்காசியாவின் சனத்தொகை இரண்டு பில்லியன். பிரித்தானியா ஆண்ட தெற்காசியாவில் ஆங்கிலமொழியை கூட விஸ்தரிக்க முடியாத தலைவர்கள் தான் தெற்காசிய தலைவர்கள் என்றால் அது மிகையாகாது. தெற்காசியாவில் இரண்டு பில்லியன் மக்கள் திறனற்ற தலைவர்களால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
நான் சீனாவிற்கு பயணித்து அங்குள்ள இளைய சமுதாயத்துடன் கலந்துரையாடியுள்ளேன். சீனா தனது ‘ஒரு பிள்ளை கொள்கை’ மூலமும் ‘வெளிநாட்டு முதலீட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதன்’ மூலமும் தனது மக்களை முன்னேற்றி உள்ளது. ஒரு பிள்ளை கொள்கை மூலம் உருவாக்கப்பட்ட சமுதாயம் அறிவிலும் ஆற்றலிலும் தெற்காசிய இளைய சமுதாயத்தை விட வளர்ச்சி அடைந்துள்ளது. சீனா ஒரு பிள்ளை கொள்கை மூலம் சனத்தொகையை குறைத்து மக்களின் அறிவையும், திறமையையும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தியுள்ளது. ஆனால் தெற்காசிய தலைவர்கள் தங்கள் சுயநலத்திற்காக மக்களை இருளில் வைத்துள்ளார். இந்துக்கள் சமய சம்பிரதாயம் என்ற பெயரில் கல்லில் பால், பழம், தேன் என்பவற்றை ஊற்றி தங்கள் கடவுளை வழிபடுகின்றனர். ஆனால் வசதியற்ற சிறுபிள்ளைகள் பசி பட்டினியில் வாடுவதையிட்டு கவலைப்படுவதில்லை.
இப்படியான மனிதமாண்பற்ற செயல்களை புரியும் இந்து குருமார் உயர்சாதி வம்சம் எனவும், இவர்கள் ஏனைய சாதியினரை குறைவாக கணிப்பிடுகின்றார்கள். இலங்கையில் இருக்கும் இந்துக்களும் இந்து சமய சம்பிரதாயங்களை பின்பற்றுகின்றனர். இந்து சமயத்தினரால் பின்பற்றப்படும் சாதி வேற்றுமை கிறீஸ்தவ, பௌத்த மதத்தினராலும் இலங்கையில் பின்பற்றப்படுகின்றது. பெயர் பெற்ற 20ம் நூற்றாண்டு அரசியல் தலைவர் தந்தை செல்வாவும், தமிழுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தனிநாயகம் அடிகளாரும் கிறீஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். இதில் இருந்து நாம் விளங்கிக்கொள்வது யாதெனில், இந்து மதம் கனிசமான அளவு பின்னடைந்துள்ளது. தற்பொழுது இந்துக்கள் மதம் மாறுவது அதிகரித்து வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையக்கூடும். சமயம் மூலம் தனது இனத்தை பசியில் வாட்டுவதும், சாதி என்ற பெயரில் தனது இனத்தை குறைவாக கணிப்பிடுவதும் மேற்குலகத்திலோ, ஜப்பானிலோ, சீனாவிலோ இல்லை. ஆகையால் தெற்காசியா மிகவும் பின்னடைந்துள்ளது. மேற்குலகம் தெற்காசியாவை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆட்சிசெய்த போதிலும் இப்படியான பின்னடைவை மாற்ற முயற்சிக்கவில்லை, மாறாக தன்னுடைய ஆதிக்கத்தை பேணிப் பாதுகாப்பதற்காக ஊக்குவித்தது.
வெளிப்படையாக கூறப்போனால் மேற்குலகம் தெற்காசியாவை தோற்கடித்துவிட்டது. இத்தகைய சூழ்ச்சிக்குள் சீனாவையும் வீழ்த்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் இந்தியா முன்னேறுகின்றதாக மேற்குலகம் கூறி வருகின்றது. இந்தியாவின் முன்னேற்றம் சீனாவை போல் அல்ல, இந்தியாவின் முன்னேற்றம் மேற்குலக ஆதிக்கத்துக்கு அச்சுறுத்தலும் அல்ல. சீனாவின் முன்னேற்றம் மேற்குலகத்தை கதிகலங்க வைத்துள்ளது. இதனால் மேற்குலகம் இந்தியாவுடன் சேர்ந்த ஜனநாயகம் என்ற பெயரில் சீனாவை வீழ்த்த பலவழிகளை கையாண்டு வருகிறது. எனினும் சீனாவின் அறிவுள்ள தலைமை மேற்குலக சதிக்குள் விழுந்து விடாது. மேற்குலகம் தனது ஆதிக்கத்தை பேணிப்பாதுகாப்பதற்கு ஜனநாயகம் என்ற பெயரில் வளர்முக நாடுகளை திட்டமிட்டு பின்னடைய செய்து வருகின்றது. சுதந்திரம் கிடைத்த நாள்முதல் இந்தியாவின் கொள்கைகள் தோல்வியில் முடிந்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சியில் சிறிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த திருப்பம் இந்தியாவை வல்லரசாக ஆசியாவையோ, உலகையோ ஆளுவதற்கு தகுதியுடையதாக மாற்றாது. இந்தியாவின் தலைமைத்துவம் தெற்காசியாவை பின்னடைய வைத்துள்ளது. இந்தியாவின் பின்னடைவால் இலங்கை சுதந்திரம் கிடைத்த நாள்முதல் மேற்குலகையோ அல்லது சீனாவையோ வெளிநாட்டு முதலீட்டுக்காக தங்கியிருக்கும் நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்பட்டிருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன சிங்கப்பூர் போல வெளிநாட்டு முதலீடுகளுடன் இலங்கையை முன்னேற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதை இந்தியா தனது ஆதிக்கத்துக்கு அச்சுறுத்தலாகக் கண்டு இலங்கையில் தீவிரவாதத்தை உருவாக்கி இலங்கையை பிரித்தாண்டு தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது. இந்தியாவின் பிரித்தாளும் கொள்கை ஒரு குறுகிய நோக்கமாகும். இது ஒரு நீண்ட காலத் திட்டமல்ல. என்னுடைய கருத்தின் படி 20 – 30 ஆண்டுகளுக்குள் இந்தியா இலங்கையை இழந்துவிடும். பாகிஸ்தான் ஏற்கனவே இந்தியாவின் பக்கமில்லை, இலங்கையும் எதிர்காலத்தில் இந்தியாவின் பக்கம் சாயப்போவதில்லை. தற்போதைய இலங்கை தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் இந்தியாவிற்கு ஆதரவாக இருப்பினும் இளைய அரசியல் சமுதாயம் இந்தியாவின் கொள்கைகளுக்கு அடிபணியமாட்டார்கள். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கடந்த மாத நடவடிக்கைகள் இலங்கையின் எதிர்காலக் கொள்கைகளை வெளிப்படுத்துகின்றன. இந்திய தலைவர்களின் குறுகிய சிந்தனைகளால் இந்தியாவின் தற்போதைய பின்னடைவும் அதன் எதிர்கால தோல்வியும் தவிர்க்க முடியாதது என்றால் அது மிகையாகாது.
(Antany Peter)