(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
உலக வரலாற்றின் ஒருபக்கம், சதிகளால் நிரம்பியது. பண்டைய வரலாறெங்கும் அரண்மனைச் சதிகள் நிறைந்திருந்தன. பின்னர், மன்னராட்சிக்கு எதிரான சதிகள் அரங்கேறின. மாறுகின்ற காலத்துக்கேற்ப இராணுவச் சதிகள் நடந்தன. ஜனநாயகம் பிரதான பேசுபொருளாகவும் அரசாட்சியின் இலக்கணமாகவும் மாறிய சூழலில், அரசமைப்புச் சதிகள், நாடாளுமன்றச் சதிகள் எனப் பலவும் நிகழ்ந்தன. இவ்வாறு நடந்த சதிகள், அந்நாடுகளின் விதியைத் தீர்மானித்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலம், ஆட்சிக் கவிழ்ப்புகளின் பிரதான கருவியாக, இராணுவச் சதிகள் மாறின. அவை, வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களைப் பெற்றன.
இன்றும் ஆபிரிக்காக் கண்டம், இராணுவச் சதிகளால் நிறைந்துள்ளது. அதன் இன்னொரு வடிவம், அண்மையில் அரங்கேறியது. அதன் விசித்திரம் யாதெனில், சதி இல்லையென்று சொல்லியபடி நடந்த சதியாக அமைந்திருந்தது.
கடந்த வாரம், சிம்பாப்வேயில் இராணுவம், ஜனாதிபதி றொபேட் முகாபேயை வீட்டுக்காவலில் வைத்து, ஆட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையானது, ஆபிரிக்காவில் சத்தமின்றி இன்னொரு சதி நடந்தேறியதைக் கோடிட்டுக் காட்டுகிறது.
ஆனால், அண்மைக் காலங்களில் மாலியில், ஐவரி கோஸ்டில் நடந்தவை கவனம் பெறாமல் போனது போலன்றி, உலகளாவிய ஊடகங்களின் கவனம், சிம்பாப்வேயின் மீது திரும்பியுள்ளது. 37 ஆண்டுகள் ஜனாதிபதியாக இருக்கும், 93 வயதுடைய றொபேட் முகாபேயை அகற்றுவதற்காக நடாத்தப்பட்ட சதியை, மேற்குலக ஊடகங்கள் குதூகலத்துடன் கொண்டாடுகின்றன.
ஆபிரிக்காவின் நவீன கலகக்காரனாக இருந்தவர் றொபேட் முகாபே. மேற்குலகு, குறிப்பாக பிரித்தானியா வெறுத்த ஆட்சியாகவும் பலமுறை முயன்றும் அகற்றப்படவியலாத ஒருவராகவும் முகாபே இருந்தமை முக்கியத்துவம் பெறுகின்றன.
மேற்குலகின் வெறுப்புக்குரியவராகவும் ஊடகங்கள் ‘சர்வாதிகாரி’ எனவும் விமர்சிக்கப்படுவதற்குக் காரணம் என்ன என்பவற்றுக்கான பதில்களைத் தேடுவது முக்கியமானது.
அதேவேளை, இராணுவச் சதி நடந்தவுடன் புதியவர் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒருவாரம் கடந்த பின்னர், முகாபே பதவி விலகியுள்ளார் என நாடாளுமன்றில், அவருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது, சபாநாயகர் செவ்வாய்கிழமை (21) அறிவித்தார்.
தனது தள்ளாத வயதிலும், அழுத்தங்களுக்கு உட்பட்டு பதவி விலகாமல், முகாபே ஒரு வாரம் தன்னைத் தற்காத்துக் கொண்டார்; பொது நிகழ்வுகளில் பங்கெடுத்தார்; தொலைக்காட்சியில் மக்களுக்கு உரையாற்றினார். இவை, விசித்திரம் நிறைந்தவை. இதற்கான பின்னணிக் காரணிகள் தனியே ஆராயப்பட வேண்டியவை.
ஆபிரிக்காவின் மேற்கை விட, வித்தியாசமான முறையில் பிரித்தானிய கொலனியம் கிழக்கிலும் தெற்கிலும் அமைந்து இருந்தது. அங்கே பிரித்தானியர், தென்னாபிரிக்காவுக்கு அடுத்தபடியாக சிம்பாப்வேயில் கணிசமாகக் குடியேறிய ஒரு சமூகமாக இருந்தனர்.
தென் ஆபிரிக்காவில், பிரித்தானியருக்கு முன்னரே டச்சுக்காரர் குடியேறி விட்டனர். தென்னாபிரிக்காவில், ஐரோப்பியக் குடியேற்ற வாசிகளில் ‘ஆப்ரிக்கானர்’ என்று அழைக்கப்பட்ட டச்சுப் பரம்பரையினரே தொகையில் அதிகமானோராயிருந்தனர்.
அங்கே ஆப்ரிக்கானர்களுக்கும் பிரித்தானியக் கொலனிய எசமானர்களுக்கும் இடையிலான மோதலே, தென்னாபிரிக்காவின் முதலாவது விடுதலைப் போராயிருந்தது.
எனினும், தென்னாபிரிக்காவின் சுதந்திரம், பிரித்தானியச் செல்வாக்குக்கு உட்பட்ட வெள்ளை நிறவெறி ஆதிக்க ஆட்சியாகவே சென்ற நூற்றாண்டின் இறுதித் தசாப்தம் வரை தொடர்ந்தது.
ஆப்ரிக்கானருக்கும் பிரித்தானியருக்கும் இடையிலான மோதல் தணிந்தாலும், இனமுரண்பாடுகள் தொடர்ந்தன. அதேவேளை, தென்னாபிரிக்கா, ஆபிரிக்க கண்டத்தின் தென்பகுதியில், கொலனிய ஆட்சியின் தொடர்ச்சிக்கும் ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் தொடர்ச்சிக்குமான பாலமாக இயங்கி வந்தது.
ஆபிரிக்காவில், விடுதலைக்கான எழுச்சிகள் 1950களில் தீவிரமாகி வந்தன. மேற்கு ஆபிரிக்காவில் இருந்த, பிரித்தானியக் கொலனிகளில் ஆயுதப் போராட்டங்களாக அவை தீவிரமாகும் முன்னரே, பிரித்தானிய நிர்வாகம் சுதந்திரத்துக்கு உடன்பட்டது.
மேற்கு கானாவில் மட்டுமே, கொலனிய எதிர்ப்பில் தீவிரமான இடதுசாரிச் சிந்தனையாளரான க்வாமே ந்க்ருமா ஆட்சியில் அமர்ந்தார். அவரது ஆட்சி வெகு விரைவிலேயே, இராணுவச் சதி மூலம் கவிழ்க்கப்பட்டது.
ஆபிரிக்காவின் கிழக்கிலும் தெற்கிலும் பிரித்தானியக் கொலனிய நிர்வாகம், மிகவும் கடுமையானதாக இருந்தது. குறிப்பாக, கென்யாவில் அது வெள்ளையருக்கு எதிரான இன மோதலாக உருவெடுத்தது. போர்த்துக்கேயக் கொலனிகளான மொஸாம்பிக், அங்கோலா, கினி பிஸோ ஆகிய மூன்று நாடுகளிலும் ஆயுதப் போராட்டம் கூர்மை பெற்று வந்தது. தென்னாபிரிக்காவில், ‘ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்’ ஆயுதப் போராட்ட மார்க்கத்தைத் தெரிவு செய்தது.
இந்தப் பின்னணியிலேயே தென்னாபிரிக்காவுக்கு அடுத்தபடியாக, வெள்ளை இனத்தவர்கள் கணிசமான தொகையில் குடியேறி இருந்த, ‘தென் றொடிஷியா’ என அழைக்கப்பட்ட சிம்பாப்வேயில், கொலனித்துவ ஆட்சிக்கு உட்பட்ட, இயன் ஸ்மித் தலைமையிலான வெள்ளை இனவாத அரசாங்கம் இருந்தது.
அது ஒருதலைப் பட்சமாக, 1965இல் றொடிஷியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்தது. நாட்டில் இரண்டு சதவீதமான தொகையினரே ஆயினும், தமது அதிகாரத்தைக் கறுப்பின மக்களுடன் பகிரத் துளியும் ஆயத்தமாக இல்லாத, வெள்ளைக் குடியேற்றவாசிகளே இதன் பின்னால் இருந்தனர்.
இவர்களுக்கு, தென்னாபிரிக்காவில் இருந்த 18 சதவீத வெள்ளை இனத்தவரின் நிறவாத அதிகாரமும் பிரித்தானிய வலதுசாரி அரசியல்வாதிகளும் ஆதரவாக இருந்தனர். அமெரிக்க, பிரித்தானிய ஏகாதிபத்தியங்களும் ஆதரவாக இருந்தன.
றொடிஷியாவின் சுதந்திரப் பிரகடனம் நிகழ்ந்தபோது, பிரித்தானியாவில் ஆட்சியில் இருந்தது தொழிற்கட்சி. எவ்வாறு வியட்னாம் போரில் தொழிற்கட்சி அரசாங்கம், நயவஞ்சகமாக நடந்து கொண்டதோ, அவ்வாறே றொடிஷியாவிலும் நடந்து கொண்டது.
உறுதியான இராணுவ நடவடிக்கை மூலம், சட்ட விரோதமான வெள்ளையினச் சிறுபான்மை ஆட்சியைக் கவிழ்த்து, கறுப்பு இனத்தவர்களுக்கு கூடிய அதிகாரமுள்ள ஓர் ஆட்சியை நிறுவியிருக்கலாம். ஆனால், பிரித்தானிய ஆட்சி, வெறுமனே பொருளாதாரத் தடை விதிப்பதுடன் நிறுத்திக் கொண்டது. அந்தத் தடைகூட, மூன்றாமுலகின் அதிருப்திக்கு ஒரு கண்துடைப்பாக மேற்கொள்ளப்பட்டது. எனினும், தென் ஆபிரிக்காவோடு தடையின்றி வணிகம் நடைபெற்றது.
இந்தப் பின்னனியிலேயே, சிம்பாப்வேயில் விடுதலை இயக்கங்கள் இரண்டு எழுச்சி பெற்றன. இரண்டுமே இடதுசாரித் தன்மையுடையனவாயினும் றொபேட் முகாபேயின் தலைமையிலான ‘சிம்பாப்வே ஆபிரிக்க தேசிய ஒன்றியம்’ (ஸானு) வலியதாயும் வெகுசனப் போராட்டத் தன்மையுடையதாயும் இருந்தது.
கொலனியவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில், இரண்டு அமைப்புகளும் ஒத்துழைத்தன. விடுதலை எழுச்சிக்கு எதிராக, அண்டை நாடுகளான தென்னாபிரிக்காவும் போர்த்துக்கேயக் கொலனியாக இருந்த மொஸாம்பிக்கும் பயன்பட்ட போதும், 1974இல் போர்த்துக்கேய கொலனித்துவமும் போர்த்துக்கல் சர்வாதிகார ஆட்சியும் கவிழ்ந்ததோடு நிலைமைகள் வேகமாக மாறின.
இயன் ஸ்மித் ஆட்சியால், நாட்டைத் தொடர்ந்தும் நேரடியான வெள்ளையினத்தவரின் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்க இயலாததால், ஸானு-ஸாபு விடுதலை அமைப்புகளிடம் அதிகாரம் கைமாறாமல், 1978 இல் வெள்ளையின ஆட்சியின் எடுபிடியாக இருந்த, கிறிஸ்தவ பிஷப் முஸரோவாவிடம் ஆட்சிப் பொறுப்பு கையளிக்கப் பட்டது. ஆனால், உண்மையான அதிகாரம் ஸ்மித் தலைமையிலான வெள்ளை நிறவெறியர்களிடமே இருந்தது.
போலியான ஆட்சி மாற்றத்தின் மூலம், மக்கள் எழுச்சியைத் தடுக்க இயலாத நிலையிலேயே, 1980ஆம் ஆண்டு சிம்பாப்வேயின் சுதந்திரமும் சர்வசன வாக்குரிமை அடிப்படையிலான நாடாளுமன்ற ஆட்சி முறையும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
எனினும் இதற்கு முன்நிபந்தனையாக, வெள்ளையர்களின் வசம் இருந்த வளமான விவசாய நிலங்களைக் கறுப்பின அரசாங்கம் பறித்தெடுக்க மாட்டாது என்ற உத்தரவாதமும் பெறப்பட்டது. இதன் மூலம், ஒரு தேசிய பொருளாதாரம் தோன்றாமல் ஆப்பு வைக்கப் பட்டது.
1980கள் நவகொலனியம் தன்னை வலுப்படுத்திக் கொண்ட காலம். 1950களிலும் 60களிலும் வீறுகொண்டு எழுந்த விடுதலைப் போராட்டங்கள் போல எதுவுமே இல்லாத காலம். 1960களில் உச்சநிலையில் இருந்த தேசிய முதலாளித்துவ ஆட்சிகள் பல, 1970களில் பணிந்துபோய், 1980களில் நவகொலனித்துவத்துடன் சமரசம் செய்யத் தொடங்கி விட்டன.
சோவியத் யூனியனும் 1980களில் சர்வதேச ரீதியாகச் செல்வாக்கு இழக்கத் தொடங்கி விட்டது. எனவே, சிம்பாப்வேயின் இடதுசாரி அரசியல், பல வகையிலும் முடக்கப்பட்டிருந்தது. போதாததற்கு, அந்த நாடு ஏற்றுமதி வணிகத்திலேயே கணிசமான அளவுக்குத் தங்கியிருந்தது. உள்ளூர் ஏற்றுமதிகளில் முக்கியமானவை புகையிலை உட்பட்ட பயிர்களாகவும் அடுத்தபடியானவை கனியவளங்களாகவும் இருந்தன.
ஏற்றுமதிகளில் பெரும் பகுதி, ஐரோப்பிய நாடுகளுக்கும் தென்னாபிரிக்காவுக்குமே சென்றன. இந்த நிலைமைகளின் கீழ் சிம்பாப்வேயின் எதிர்காலம், நவகொலனிய ஆதிக்கத்துக்கு உட்பட்ட ஒரு பொருளாதாரத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதிலேயே தங்கியிருந்தது.
வலிமையான ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் உணர்வு ஒரு புறமும், அதை முன்னெடுத்துச் செல்ல இயலாத விதமான மூலப்பொருள் ஏற்றுமதி சார்ந்த விவசாயமும் புதிதாக உருவாகி வந்தன. கறுப்பின நடுத்தர வர்க்கத்தினது எதிர்பார்ப்புகளும் சிம்பாப்வேயில் ஒரு தேசிய பொருளாதாரம் விருத்தி பெறாமல் தடுத்து நின்றன.
அதேவேளை, மூலப் பொருள் ஏற்றுமதிகளின் விலைகளின் சரிவும் இறக்குமதிகளின் விலை ஏற்றமும், பல மூன்றாம் உலக நாடுகளைப் போல, சிம்பாப்வேயின் தேசிய பொருளாதாரத்தையும் விருத்தி பெறாமல் தடுத்து நின்றன. அத்துடன் சிம்பாப்வேயின் அயல் வணிகப் பற்றாக்குறையும், அதன் விளைவாக அந்நியக் கடன் சுமையும் ஏறத் தொடங்கின.
இவற்றின் நடுவே, சிம்பாப்வே அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான கிளர்ச்சிகள் மற்ற பல மாநிலங்களில் கிளறிவிடப் பட்டன. இதில் வௌ்ளைநிறவாத தென்னாபிரிக்க ஆட்சிக்கும் ஒரு பங்கிருந்து. கிளர்ச்சியின் முடிவை அடுத்து ஸானவும்-ஸாபுவும் இணைந்து ஸாணு-பி.எவ் என்ற கட்சியாக ஒன்றிணைந்தன.
பல விதமான அந்நிய ஏகாதிபத்திய நெருக்குவாரங்களின் நடுவே, நகர் சார்ந்த நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி காரணமான பொருளாதாரச் சமமின்மையைச் சமாளிக்க இயலாத சூழ்நிலையில், முகாபேயின் தலைமையிலான ஆட்சி தனது ஆதரவுத் தளத்தை வலுப் படுத்தவும் கிராமிய வறுமைக்கு முகம்கொடுக்கவும் 2000ஆம் ஆண்டில் வெள்ளையருக்குச் சொந்தமான காணிகளைப் பகிர்ந்தளிக்க முற்பட்டது. இதன் பின்னர் சிம்பாப்வேயின் பொருளாதாரத்தைத் தனிமைப்படுத்தி, பலவீனப்படுத்தும் முயற்சிகள் மேலும் தீவிரமடைந்தன.
சிம்பாப்வேயின் சகல உழைக்கும் மக்களையும் வர்க்க அடிப்படையில் ஒன்று திரட்டி, ஒரு வெகுசன அரசியல் பாதையை முன்னெடுக்கத் தவறியதாலேயே சிம்பாப்வே அரசாங்கம் மேலும் மேலும் எதேச்சதிகாரமான முறையில் நடந்து கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டது.
எனினும், அமெரிக்க ஆதரவு பெற்ற பல ஆபிரிக்க நாடுகளை விட, சிம்பாப்வேயில் கருத்துச் சுதந்திரம் இருந்து வந்துள்ளது. அதேவேளை, ஊழல்களும் ஒழுங்கீனங்களும் வலுப்பெறவும் தொடங்கின. சிம்பாப்வே மீது ஜனநாயகமின்மை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, நேரடியாக ஓர் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்த இயலவில்லை. இதனால் கடந்த பல தேர்தல்களில், ஆட்சியை விழுத்தும் நோக்கத்துடன் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் எதிர்பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
1990களில் உருவான ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கம் முகாபேக்கு எதிரான பல்வேறு சக்திகளின் கூட்டணியாகும். இந்த அமைப்புக்கு நேரடியாகவே பிரித்தானிய ஆட்சியாளர்களின் ஆதரவு தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. மிக நீண்டகாலமாக, சிம்பாப்வேயில் ஓர் ஆட்சி மாற்றத்துக்காக மேற்குலகு ஏங்கிவந்துள்ளது.
சிம்பாப்வேயின் பிரச்சினை வெறுமனே ஜனநாயகம் பற்றிய ஒன்றல்ல. ஜனநாயகம் மட்டுமே பிரச்சினை என்றால், சிம்பாப்வேயை விட மிக மோசமான அடக்குமுறை ஆட்சிகள் எத்தனையோ உள்ளன.
சிம்பாப்வே இலக்கு வைக்கப்படுவது அதற்காக அல்ல; சிம்பாப்வேயின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. பண வீக்கமும் விலைவாசி ஏற்றமும் மாதத்துக்குப் பல மடங்கு, ஆண்டுக்குப் பல நூறு மடங்கு என்பது ஒரு பாரிய பிரச்சினை. ஆட்சி மாறினால் அந்நிய முதலீடு வந்து குவியும், பொருளாதாரம் வேகமாகச் சீரடையும் என்று வெளிவெளியாகவே பிரசாரம் செய்யப் படுகிறது. இவற்றின் நோக்கங்களை விளங்கிக் கொள்வது கடினமானதல்ல.
ஏகாதிபத்திய எதிர்ப்பில், முகாபே உறுதியாய் இருந்தமையே அவர் பற்றிய நிலைப்பாடுகளைத் தீர்மானிக்கின்றன. எனினும், சிம்பாப்பேயின் பலவீனமான பொருளாதாரம், நாட்டை எதிர்நோக்கி நிற்கும் பயங்கரமான வறுமையும் முகாபேக்கு பாதகமான காரணிகளாக அமைந்தன.
முகாபே மேற்கொண்ட காணிச் சீர்திருத்தத்தை, ஒரு மக்கள் இயக்கமாக்கி, ஒரு தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முயலாமை முகாபேயின் மிகப்பெரிய தவறு. இது சிம்பாப்வே இன்று எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க பெரிதும் உதவியிருக்கும்.
இப்பின்னணியில் இன்றைய நிலைவரத்தை நோக்கலாம். முகாபேக்குப் பிறகு ஆட்சியதிகாரம் ஏறுவது யார் என்ற வினா, கடந்த சில ஆண்டுகளாக ஸானு-பி.எவ் உள்ளே பிரதான வினாவாகியிருந்தன. நீண்டகாலமாக முகாபேயின் இரண்டாம் நிலையில் இருந்துவரும் எமெர்ஸன் மனங்கக்வாவுக்கும் முகாபேயின் மனைவி கிரேஸ் முகாபேக்கும் இடையிலேயே போட்டி நிலவியது.
கிரேஸ், ஸானு-பி.எவ்வின் இளந்தலைமுறையினரிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றவர். அதேவேளை, அவருக்கு சுதந்திரப் போராளிகளினதும் இராணுவத்தினதும் கணிசமான ஆதரவும் இருந்தது. கடந்த மாதம் தனக்கெதிரான சதியொன்று நிகழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக முகாபே கூறினார்.
இந்நிலையில், இம்மாதத் தொடக்கத்தில் முகாபே, உபஜனாதிபதி எமெர்ஸன் மனங்கக்வாவைப் பதவியிலிருந்து நீக்கினார். இதைத் தொடர்ந்து, இந்நடவடிக்கையை இராணுவம் கண்டித்தது.
இதையடுத்தே இராணுவச்சதி அரங்கேறியுள்ளது. சிம்பாப்வே இராணுவம், “சதி நடைபெறவில்லை; குற்றவாளிகளைக் களையெடுக்கும் நடவடிக்கைகளையே மேற்கொள்கின்றோம்” எனத் தொடர்ச்சியாகச் சொன்னது. இச்சதியின் பின்னணி என்ன என்பதை நோக்குவது முக்கியமானது.
கடந்த செப்டெம்பர் மாதம், ஐந்தாம் திகதி ரொய்டர் செய்திச்சேவை, ‘திரைமறைவில்: முகாபேக்குப் பிறகு பற்றிய சிம்பாப்வேயின் அரசியல்வாதிகள் இரகசியத் திட்டம்’ என்ற தலைப்பிலமைந்த சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனால் அது, ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அதில் சொல்லப்பட்ட தகவல்கள், இப்போது நடந்தேறிய சதியை விளக்கப் போதுமானவையாகும்.
ரொய்டர் செய்திச் சேவையின் இவ்வறிக்கையானது, இராஜதந்திரிகள், சிம்பாப்வே மத்திய புலனாய்வு அமைப்பின் நூற்றுக்கணக்கான உள்ளக அறிக்கைகள், சிம்பாப்வேயின் அரசியல்வாதிகளின் உரையாடல்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.
இதன்படி, எமெர்ஸன் மனங்கக்வா, முகாபேயின் பின்னர் ஜனாதிபதியாவதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ளார். ஆனால், அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தலில் முகாபேயின் தலைமையிலேயே ஸானு-பி.எவ் போட்டியிடவுள்ளது. இந்நிலையில் சிம்பாப்வேயில் உள்ள அதிகாரம்மிக்க சக்திகள் முகாபேக்குப் பின்னரான ஆட்சியைத் தங்களுக்கு வாய்ப்பானதாக அமைப்பதற்கான கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என ரொய்ட்டர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், எமெர்ஸன் மனங்கக்வா, சிம்பாப்வேயின் பொருளாதாரத்தைச் சீர்ப்படுத்த, விவசாயத்துறையை மேப்படுத்த வேண்டும் என நினைக்கிறார். அதற்கு நிலங்கள் பறிக்கப்பட்ட வெள்ளையர்களுக்கு நிலங்கள் திரும்பி அளிக்கவும், அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் உடன்பட்டுள்ளார். அவர் வெள்ளையின விவசாயிகளின் தொழிற்சங்கத் தலைவர்களுடன் இதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் எனப் புலனாய்வு அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன எனவும் அந்தச் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், எமெர்ஸன் மனங்கக்வா, எதிர்கட்சித் தலைவர் மோகன் ஸ்ங்கராயுடன் பேச்சுகளை நடாத்தியுள்ளார். இவ்வாறான மாற்றங்களுக்கு ஆதரவளிக்குமிடத்து இராணுவத்தினருக்கான சலுகைகள் அதிகரிக்கப்படும் எனத் தனக்கு நெருக்கமான இராணுவ உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தாகவும், 2016 முதல் பல்வேறு திகதிகளில் அறிக்கையிடப்பட்ட புலனாய்வுத் தகவல்களில் குறிப்பிட்டிருப்பதாக ரொய்ட்டரின் சிறப்பு அறிக்கை சொல்கிறது.
அதேவேளை, எமெர்ஸன் மனங்கக்வாவும் அவரது சகாக்களும் ஏற்கெனவே விலைபோய்விட்டதாகவும், அவர்களுக்கு பிரித்தானியாவின் ஆதரவு கிடைப்பதாகவும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் கிரேஸ் முகாபே முழுமையாக நம்புகிறார். இதனாலேயே முகாபேக்குப் பின்னர், ஆட்சிப்பொறுப்பை, எமெர்ஸன் மனங்கக்வாவுக்கு வழங்குவதற்கு கிரேஸ் மறுப்புத் தெரிவித்துள்ளார் என்பதையும் ரொய்டர்ஸ் அறிக்கையிடுகிறது.
இவை இப்போது, சிம்பாப்வேயில் நடந்து கொண்டிருப்பவற்றை விளங்கிக் கொள்வதற்கான பின்னணியை எமக்குத் தந்துள்ளன. இன்று முகாபேயின் சரிவு கொண்டாடப்படுவதன் உள்ளார்ந்த காரணங்கள், எமக்குச் சொல்லும் கதையோ வேறுவகையானது.
அயல் குறுக்கீடுகள் மூலம், ஏகாதிபத்தியங்கள் தமக்கு உவப்பில்லாத ஆட்சிகளைத் தொடர்ந்து அகற்றுகின்றன. அதற்கான வழி வகைகள் வேறுபடுகின்றன.
சிலநாடுகளில் தேர்தல்; சிம்பாப்வேயில் இராணுவம். எந்தவொன்றைப் பற்றிப் பேசுகின்ற போதும், இன்னொன்றைப் பற்றியும் கூடப் பேசமுடியும் என்பதே நாம் சிந்திக்கவேண்டிய செய்தி.