இது தமிழினியின் மரணத்தைக் கொச்சைப்படுத்த அல்ல.

 

புலிகள் இயக்கம் ஒரு சூனியமான இயக்கம். பல இளஞர்கள் புலிகள் இயக்கத்தில் இணைந்த பின்னால் வருத்தப்பட்டார்கள். சிலர் தாங்கள் இறந்துவிடுவதே நல்லதென நினைத்தார்கள் இறந்தார்கள்… பலர் இணைந்த பிறகுதான் உட்படுகொலைகள், சகோதரப் படுகொலைகள் செய்ய வேண்டியதற்கு ஆளானார்கள். இந்திய அமைதிப்படையுடன் பிரபாகரன் யுத்தம் தொடுத்த பின்னர் பல நூற்றுக்கணக்கான புலிகள் இதுதான் தருணம் என இந்தியாவுக்குத் தப்பிச் சென்று அங்கிருந்து ஐரோப்பாவிற்கும், கனடாவிற்கும் சென்றுவிட்டார்கள். குறிப்பாக கிட்டுவுடன் சேர்ந்து இயங்கிய பல புலிகள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள்.

நான் 88ம் ஆண்டு இந்தியா சென்றபோது புலி இயக்கதில் இணைந்திருந்த எனது வகுப்புத் தோழனைச் சந்தித்தேன். தான் வெளிநாடு போவிருப்பதாகக் கூறினான். ஏன் இயக்கத்தை விட்டு விலகினாய் என்று கேட்டபோது நான் இதயசுத்தியுடந்தான் போராடப் போனேன். ஆனால் இந்த இயக்கத்திலிருந்து என்னால் போராட முடியாது என்று வெளிப்படையாகக் கூறினான். என்னால் சகோதரப் படுகொலை செய்ய முடியாது. நான் தொடர்ந்து இருந்தால் யாருக்காகப் போராடப் போனேனோ அந்த மக்களையே கொல்ல வேண்டி இருக்கிறது. மேலதிகமாக அவன் சொல்ல விரும்பவில்லை.நான் இயக்கத்தை விட்டு விலக வேண்டும் அல்லது இறக்க வேண்டும். சந்தர்ப்பம் கிடைத்தது நான் விலகிவிட்டேன் என்றான்.

நான் மொன்றியாலில் இருந்தபோது அச்சுவேலிக்கு பொறுப்பாக இருந்த “நிசாந்தன்” என்ற முன்னாள் புலித் தளபதியைச் சந்தித்தேன். மனம் விட்டுப் பேசினார். தான் இந்திய இராணுவத்துடன் யுத்தம் புரிந்ததாகச் சொன்னார். நீங்கள் இந்திய இராணுவத்துடன் யுத்தம் புரிந்தது சரியா? தவறா? என்று கேட்டேன் . தவறு என்றார். அப்போ ஏன் யுத்தம் புரிந்தீர்கள் என்று கேட்டபோது இயக்கத்தில் இருந்தால் தலைமையின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும். பின்விளைவுகளைப் பற்றி யோசிக்கக் கூடாது என்றார்.

இப்படி பல முன்னாள் புலிகள் உண்மைகளைக் கூறியிருக்கிறார்கள். வடமராட்சியில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்த புலி என்னிடம் கூறியது “அண்ணை நான் ஒருவருடனும் பழகுவதில்லை” காரணம் நான் பழகின ஆளை நானே போடவேண்டிவரும் என்றார்.. அவர் இப்போது ஜேர்மனியில் இருக்கிறார்.

தலைமையின் உத்தரவால் தமிழினி பல பெண்பிள்ளைகளை பலாத்காரமாக யுத்தத்தில் இணைத்திருக்கிறார்.
தமிழினியால் தங்கள் பெண்பிள்ளைகளைப் பறி கொடுத்தவர்கள் பலர் . இறுதி யுத்தத்தில் பெண் புலிகள் தப்பியோட்டாமல் காவல் காத்தவர் தமிழினி. கட்டாயமாகப் புலிகள் இயக்கத்தில் இணைக்கப்பட்டு இராணுவத்திடம் சரணடைந்த பெண்புலிகள் தமிழினி பற்றி முறைப்பாடு செய்துள்ளனர்.

சரி அதை விடுவோம். புலிகளின் இயக்கத்தில் இணைந்தால் இவையெல்ல்லாம் விரும்பியோ விரும்பாமலோ செய்ய வேண்டிவரும். ஏனென்றால் தலைமை அப்படி!.

தப்பியோடும் மக்களைச் சுட்டுக் கொல்லும்படி எனக்கு உத்தரவு . அதை நான் செய்கிறேன். முள்ளிவாய்க்காலில் மக்கள் தப்பி ஓடாமல் காவலிருந்த புலி இதைச் சொன்னதாக அந்த மக்கள் கூறினார்கள்.

தமிழினி புனர்வாழ்வளிக்கப்பட்டு இவ்வளவு நாட்களும் வன்னியில்தான் இருந்தார். அரசாங்கம் அவருக்குக் காணி வழங்கியிருந்தது. ஆனால் இன்று தமிழினிக்காக அழுகின்றவர்கள் தமிழினியின் வாழ்கைக்கு உதவ முன்வரவில்லை. அவரின் மரணச்சடங்கு சிறீதரன் தலைமையில் நடைபெற்றது.

தமிழினி உயிருடன் இருந்த காலத்தில் அவர் ஒரு முன்னாள் போராளி என்று இவர்கள் கௌரவிக்கவில்லை. ஆனால் தமிழினியின் இறப்பில் ஆதாயம் தேடுகிறார்கள். தமிழினிக்குப் புற்றுநோய் இருந்ததென்பதே அவர் இறந்த பிறகுதான் எல்லோருக்கும் தெரிந்தது. புலிகள் இயக்கத்தை வெளிநாடுகளில் காட்டி கோடி கோடியாக பணம் சேர்த்து கோடீஸ்வரர்களானவர்கள் பாதிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு உதவவில்லை.

முன்னாள் போராளிகள் என்று சொல்லப்படுபவர்கள் அவயவங்களை இழந்து இன்னும் கண்ணீருடன் வாழ்கிறார்கள். இன்னும்புலிகலையே புகழ்பாடும் சிறிதரன் அவர்களுக்கு உதவ என்ன செய்கிறார்.?

அம்பிளாந்துறை அரிய(ண்ட)ம் தமிழினிக்காகக் கவிதை எழுதிக்கொண்டிருக்குது. தமிழினி பரந்தனில்தானே இருந்தார்.
இதைத்தான் சாவிலும் வாழ்வோம் என்கிறார்கள். இருக்கும்போது மதிக்காம இறந்த பிறகு அஞ்சலி செய்வதும் வீரவணக்கம் செய்வதும்தான் இவர்களின் வேலை.

தொடரும்

(Rahu Rahu Kathiravelu)