மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மறுசீரமைப்புச் செய்து, மீண்டும் செயற்படுத்த அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. யுத்தத்தால் மோசமாகச் செயலிழந்த யாழ்ப்பாணம், வலிகாமம் பிரதேசத்தில் அமைந்துள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகமும் அதனுடன் தொடர்புபட்ட 54 ஏக்கர் காணியும், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக இவ்வருடம் விடுவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், அப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், மீள அப்பிரதேசத்தில் குடியமர்ந்துள்ளதுடன், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கும் முன்வந்துள்ளனர்.
அந்த வகையில், மோசமாக செயலிழந்துக் காணப்படுகின்ற குறித்த துறைமுகத்தை, மீளப் பயன்படுத்துவதற்கு ஏதுவான வகையில், மறுசீரமைப்புச் செய்வதற்கான வேலைத்திட்டங்களை துரித கதியில் ஆரம்பிப்பதற்கு அவசியமான செயற்றிட்டங்களை மேற்கொள்வது தொடர்பில், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைகளுக்ேக அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.