(சாகரன்)
1980 களின் முற் கூற்றில் தமிழ் நாட்டில் நக்சல்பாரி அமைப்புக்களுடன் இரகசிய உறவுகளை பேணி ஈழமக்களின் விடுதலைக்கான வேலைகளை செய்த கால கட்டங்களில் அருணமுறுவல், ராஜன், வள்ளிநாயகம், ஓவியா, வீரசந்தானம், சுஜாதா, சேஷாஸ்திரி, ஞாநி போன்ற பல்வேறு இடதுசாரிச் செயற்பாடாளர்களுடன் தோழர் பத்மநாபா உறவுகளை வைத்திருந்தார். ஈழத்தில் இருந்து மக்கள் விடுதலை போராட்ட செயற்பாட்டிற்காக இடையிடையே தமிழகம் சென்ற போதெல்லாம் தோழர் நாபா தன்னுடன் என்னையும் அழைத்துச் சென்று இவர்களை அறிமுகப்படுத்திய வகையில் மட்டும் இவர்களுடன் உறவுகள் நிறையவே உண்டு. இந்த வகையில் தோழர் ஞாநியுடனும் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது என்னை ஞாநி அறிந்திருந்தார் என்பதை விட ஞாநி தோழர் நாபாவையும் நான் தோழர் ஞானியையும் அறிந்திருந்தோம் என்பதே உண்மை.
இடதுசாரிக் கருத்துகளைத் தாங்கிய வீதி நாடகங்களை நாம் ஈழத்தின் தெருக்களில் அரங்கேற்றயதில் ஞாநி போன்றவர்களின் கருத்து ஆளுமையும் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. விகடன் குழுமத்துடன் இணைந்து தன் சுயத்தை இழக்காமல் கட்டுரைகள், ஆக்கங்கள், கருத்துச் சித்திரங்கள் என்று ஜனசஞ்சரமாக ஊடகத்திற்குள் தன்னை இணைத்து போதும் தாம் நம்பும் இடதுசாரி கருத்துக்களில் இருந்து விலகி தனது எழுத்துக்களை வியாபாரமாக்காத போக்கை என்னால் ஞாநியிடம் அவதானிக்க முடிந்தது. இது கோபிநாத் நடாத்தும் ‘நீயா நானா’ நிகழ்வில் அவர் நிபுணர் குழுவில் ஒருவராக நிகழ்ச்சிகளில் பங்குபற்றி கருத்துரைகள் வழங்கிய போதும் என்னால் உணரப்பட்டது. இதே போக்கை ஓவியாவும் கொண்டிருந்தார்.
நக்கசல்பாரிகள் பற்றிய இந்திய ஆளும் வர்க்கம் பரப்புரை செய்து வந்த தவறான கருத்துக்களை தமது எழுத்துகள் மூலம் நிர்மூமாக்குவதில் இவரின் பங்களிப்பு மகத்தானது. சிறப்பாக பழங்குடியினர் மத்தியில் நிலவிய அரச படைகளின் அட்டூளியங்கள் இவற்றின் அடிப்படையில் விடுதலையை நோக்கி அவர்கள் தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கு வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதை இவர்களைப் போன்றவர்களே இந்திய சமூகத்தின் முன்னால் தெளிவுபடுத்தினர்.
‘நக்சல்பாரிகள்’ சிலரிடம் பிற்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய ஏற்பட்ட மயக்கம் ஞானியிடம் ஏற்படவில்லை என்பதை இன்னும் ஒரு கூடுதல் சிறப்பு. தான் நம்புக் கருத்துக்களை வளைந்து கொடுக்காமல் எச்சபையிலும் எவ்விடத்திலும் அடித்துரைக்கும் நேர்மை ஆளுமை இவரிடம் எழுத்துக்களில் மட்டும் அல்ல பேச்சுக்களிலும் கண்டிருக்கின்றேன்.
கமலஹாசனிடம் ஒருவகை ‘இடதுசாரி’ ஓட்டம் இருக்கின்றது என்று நம்பியவர்களில் ஞாநியும் ஒருவர். ஜுனியர் விகடனின் ஆரம்ப இதழ் ஒன்றில் கமல் வாணியின் திருமணத்தைப் பற்றிய கட்டுரை இதனைப் பறைசாற்றி இருந்தாலும் இறக்கும் தறுவாயில் தனது கருத்தை மாற்றி இருப்பார் என நம்புகின்றேன். பல்துறை ஆளுமை உள்ள ஒரு இடதுசாரி சிந்தனையாளன் இழக்கப்படக் கூடாத இழப்பாக தமது படைப்புக்களை மட்டும் எம்மிடம் விட்டு விட்டு சென்றுவிட்டார். ஞாநியின் சிந்தனைகளால்இ படைப்புக்களால் அவர் எம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.