“எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில்களில் போட்டியிடும் 56,066 வேட்பாளர்களுள் 50 பேர், தேர்தலில் போட்டியிடுவதற்கே தகுதியற்றவர்கள்” என மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது.
“இந்தத் தேர்தலில் 8,356 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக 56,066 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். இந்த வேட்பாளர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும், இவர்களால் மீறப்படும் தேர்தல் சட்டங்கள் குறித்து தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்களும், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸார் வெளியிட்டு வரும் அறிக்கைகளை அடிப்படையாக வைத்துப்பார்த்தால், 50 பேர் தகுதியிழந்தவர்கள்” என்றும் அவ்வியக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மருதானையில் உள்ள சமூக நல கேந்திர நிலையத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட மார்ச் 12 இயக்கத்தின் முக்கியஸ்தர்களே, மேற்கண்ட விவரங்களை முன்வைத்தனர்.
அந்த 50 வேட்பாளர்களில், சட்டவிரோத மதுபானம், சூதாட்டம் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 14 பேர், தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் 06 பேர் , கொலை மற்றும் கடும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்கள் 06 பேர் , நிதிமோசடி அல்லது கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் 05 பேர், பாதாள உலகத் தலைவர்கள் 05 பேர், பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஒருவர், மரக்கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் ஐவர் என மொத்தமாக 50 அடங்குகின்றனர்.
இவர்களுள், சிறைத்தண்டனை அனுபவித்தவர்களும் இருப்பதாகவும், அவர்கள் சிறையில் இருந்த காலம் தொடர்பான சான்றுகள் கிடைத்ததன்பின்னர் அவர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் மார்ச் 12 இயக்கத்தில் அங்கம் வகிக்கும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார். குறித்த 50 வேட்பாளர்களும் பிரதான 3 கட்சிகளில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
“குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை தேர்தலில் நிறுத்த வேண்டாமென நாம் பல வருடங்களாக, பிரதான அரசியல் கட்சிகளிடம்
“வேண்டுகோள் விடுத்து வந்தோம். அதற்கமைய பண்டாரநாயக்க சர்வதேசமாநாட்டு மண்டபத்தில் வைத்து 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் எம்முடைய வேண்டுகோளை மதித்து ஏற்றுக்கொள்வதாக எமக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது. எனினும், உள்ளூராட்சித் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களைப் பார்த்தால் அந்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளது” என்றார்.
“எனினும், இவ்வாறான குற்றவாளி வேட்பாளர்கள் மத்தியில் மக்களுக்கு சேவை செய்வதற்கென பல சிறந்த வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்” என ரோஹண ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார்.
“எனவே, தமது தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட்டு தமது கிராமங்களுக்கு சேவையாற்றக் கூடியவர்களை தெரிவு செய்வது மக்களின் கடமையாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.