(சாகரன்)
முத்தழகு, கலாவதி, பரமேஸ், கோணேஸ் என்று இலங்கை தமிழ் இசைக்கு குரலால் வளம் கொடுகப் புறப்பட்டவர்கள் ஓரளவிற்கு மேல் ஜனசஞ்சமாக தமிழ் இசையைக் கொண்டு செல்ல முடியவில்லை. இவ் வேளையில் பைலாப் பாட்டு இரகத்தில் பொப் இசையாக இலங்கைத் தமிழ் இசைக்கு ஜனசஞ்சர ஆதரவை உருவாக்கியதில் ஏஈ மனோகரனுக்கு முக்கிய பங்குண்டு. நித்தி கனகரத்தினம், அமுதன் அண்ணாமலை, எம்எஸ். பெனான்டோ போன்றவர்கள் சமகாலத்தில் இதேயளவு பங்களிப்புகளை செய்திருக்கின்றார்கள். இந்த ஜனசஞ்சர அறிமுகம்தான் இலகு இலங்கை தமிழ் இசையை எம் தீவிற்கு அப்பால் கொண்டு செல்வதற்கு ஆதாரமாக இருந்தது.
அது இன்று ஜுனியர் கனகரத்திற்கு கிடைத்த அங்கீகாரம் வரை வளர்ந்திருக்கின்றது. 70 களில் ஏஈ இன் ‘பொப்’ இற்கு இடுப்பை ஆட்டாதவர்கள் யாரும் இருந்திருக்க முடியாது. அது சுகததாச விளையாட்டு அரங்கு, யாழ்ப்பாணத்த்து திறந்த வெளியரங்கு, திருகொணமலை கடற்கரை மைதானம், மட்டக்களப்பு வைபர் மைதானம் ஏன் ரியூட்டரி கொட்டகைகளின் சரஸ்வதி பூசைகளிலும் தலை காட்டத் தவறவில்லை. ஒரு பாட்டிற்கு நூறு ரூபாய் என்ற ஊதியம் வரை உயர்ந்தே இருந்தது. நாதஸ்வர தவில் வாத்திய இசைக்கு தட்சணாமூர்த்தி, சின்னராசா, பஞ்சமூர்த்தி பஞ்சாபிகேசன் போன்றவர்களால் இந்திய உபகண்டத்தில் கிடைத்த அங்கீகாரம் போல் இதுவும் அமைந்தன.
இதற்கு ஒத்த வடிவம் சிங்கள குரல் இசையிலும் சமாந்தரமாக பயணிக்கப்பட்டது. போரும் இதனைத் தொடர்ந்த நிகழ்வுகளும் இந்த பைலா பாடல்களின் வளர்ச்சியை தமிழ் சூழலில் தடையை போட அது விடுதலைக கீதங்களாக மாற்றம் எடுத்து புகழ்பரப்பியது. இது பத்மநாபாவின் ஈபிஆர்எல்எவ் இன் விடுதலை கீதங்களாக ஆரம்பித்து புலிகளின் தேனிசை செல்லப்பா வரை தனி ஒருவரைப் புகழ் பாடும் கானங்களாக இறுதியில் நீண்டு சென்றது. யுத்தத்தின் முடிவும் இதன் வலிகளும் வவுனியா ஜெயந்தன் போன்றர்களின் இசை மலர்சிக்கு வித்திட்டு இன்று புலம் பெயர் தேசங்களில் வசதிகள் வாய்பை பயன்படுத்தி ‘கலைஞர்’களை உருவாக்கி இருக்கின்றது.
இலங்கை தமிழ் சூழலில் இனித்த குரலை ஜனசஞ்சரமாக்கிய வகையில் ஏஈ மனோகரனின் பங்களிப்பு நினைவு கூரப்பட வேண்டியது. எனவே அவரின் இழப்பு கலைஞர் ஒருவரின் இழப்பாக உணரப்படுகின்றது. அவரின் புகழ் ‘சுராங்கனி….’ இருக்கும் வரை பல்மொழிகளிலும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும். மலையகத்து நண்பர் வரதன் கிருஷ்ணாவின் 1983 கலவரங்களைத் தொடரந்த அகதி மண்டப வாழ்வு அனுபவப் பகிர்வின் படி சமூக அக்கறை உள்ள மனிதனாக ஏஈ யை உம் கேஎஸ் போல் காட்டி இருக்கின்றது. கலைஞனாக சமூக அக்கறையுள்ள செயற்பாட்டாளராக ஏஈ மனோகரனின் இழப்பிற்கு அஞ்சல் செலுத்தி நிற்கின்றது இசை உலகம்.
(Jan 22, 2018)