பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்து செல்கின்றமை தனக்கு உளத் துன்புறுத்தலாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவுக்கு வெளியில் வைத்து ஊடகவியலாளர்களிடமே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு நேற்று வியாழக்கிழமை சமுகமளித்திருந்தார்.
சுயாதீனத் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்கப்படவேண்டிய கொடுப்பனவுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறவே மஹிந்த அழைக்கப்பட்டிருந்தார். இவர், ஆணைக்குழுவின் முன்னிலையில், கடந்த 15ஆம் 16ஆம் திகதிகளிலும் ஆஜராகியிருந்தார். அவர், இன்று வெள்ளிக்கிழமையும் ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சுயாதீனத் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்கப்படவேண்டிய கொடுப்பனவுகள் தொடர்பாக சுயாதீனத் தொலைக்காட்சி சேவையின் உள்ளக கணக்காளர் மஞ்சுள அழகியவன்னவிடம் இதன்போது சாட்சியம் பதியப்பட்டது.
சுயாதீனத் தொலைக்காட்சி சேவையின் முன்னாள் தலைவர் அநுர சிரிவர்த்தன, பொது முகாமையாளர் அருண விஜேசிங்க, பிரதிப் பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) உபாலி ரஞ்சித் மற்றும் சந்தைப்படுத்தல் பிரதி முகாமையாளர் திலிப் பிரியந்த விக்கிரமசிங்க ஆகியோரும் நேற்று ஆஜராகியிருந்தனர்.