வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால், தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதாக, உலகம் தீவிரமாக கருத்தில் எடுத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், ”தமிழர்களுக்கு எதிரான இனஅழிப்பைக் கண்டித்து அண்மையில் வடக்கு மாகாணசபை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அதுபோல, வடக்கில் இருந்து விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அது ஒரு இனச்சுத்திகரிப்பாகும். வடக்கு மாகாணசபை இதனைச் செய்யாது போனால், தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதாக, உலகம் தீவிரமாக கருத்தில் எடுத்துக் கொள்ளாது. யாழ்.மாவட்டத்தில் பெரும்பான்மையினரான தமிழர்கள் தவறுகளைப் புறக்கணிக்கும் போது, சிங்களப் பெரும்பான்மையினரின் தவறுகளை அவர்களால் கண்டிக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதிக்கத்தில் உள்ள வடக்கு மாகாணசபையின் கவனத்துக்கு கொண்டு வருவீர்களா என்று, எழுப்பிய கேள்விக்கு, நான் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் அல்ல. எனது பார்வையையே குறிப்பிட்டேன். அவர்களே அதனைச் செய்ய வேண்டும்” என்று சுமந்திரன் பதிலளித்துள்ளார்.