(மொஹமட் பாதுஷா)
இலங்கையின் வரலாற்றில், உள்ளூராட்சித் தேர்தல் ஒன்றுக்குப் பின்னர், ஒருபோதும் ஏற்பட்டிராத அரசியல் நெருக்கடிநிலை, இம்முறை ஏற்பட்டிருக்கின்றது. ‘குட்டி இராஜாங்கத்துக்கான தேர்தல்’ நாட்டின் ஒட்டுமொத்தமான ‘பெரிய அரசாங்கத்தின்’ அடித்தளங்களிலும் அதிர்வுகளை உண்டுபண்ணிக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் எது நடந்துவிடும் என்று எண்ணி, தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு அஞ்சியதோ, அதைவிடவும் பாரதூரமான சிக்கல்கள் தலைதூக்கியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
2015இல் நடைபெற்ற இரு தேர்தல்களிலும், ஐக்கிய தேசிய முன்னணியும் மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டணியும் வெற்றிபெற்ற போதிலும் கூட, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவுத்தளம் மிதமான மட்டத்தில் இருக்கின்றது என்பதைத் தேர்தல் முடிவுகள் உட்கிடையாக உணர்த்தியிருந்தன என்றுதான் சொல்ல வேண்டும்.
அதற்குப் பிறகு, நல்லாட்சியாளர்களுக்கு இடையிலும் பனிப்போர் ஏற்பட்டதுடன், அவர்கள் மீது கடுமையான மோசடிக் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் ஒரு தேர்தல், அதிலும் குறிப்பாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுமாயின், ஆளும் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு, அது சாதகமாக அமையப் போவதில்லை என்பதுடன், அந்தக் கட்சியுடன் இரண்டறக் கலந்திருந்தால் சுதந்திரக் கட்சியின் வாக்குவங்கியும் சரிவடைந்து விடுமோ என்று எண்ணுமளவுக்கு நிலைமைகள் சென்றன.
மத்திய வங்கி பிணை முறி விவகாரத்துக்கு பிற்பாடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.தே.க சார்புப் போக்கைக் கடைப்பிடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது என்றும் கூறலாம்.
இந்தக் கட்டத்தில், ஜனாதிபதி ஒரு ‘கத்தியைச் சுழற்ற’ ஆரம்பித்தார். அதில் பலரது தலைகள் அகப்படக் கூடும் என்று கருதப்பட்ட போதிலும், அவ்வாறு நடக்கவில்லை. அதேபோல், தேர்தல் பிரசார மேடைகளிலும் மிகக் காட்டமான உரைகளை அவர் நிகழ்த்தியிருந்தார்.
“கள்வர்களுக்கு இடமளிக்க மாட்டேன்; அவ்வாறானவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற தொனியில் அவர் ஆற்றிய உரைகள், சிலருக்கு உள்மன அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், பகிரங்கமாக அப்பேர்பட்ட நடவடிக்கைகள் எதுவும், இதுவரை நடந்த மாதிரித் தெரியவில்லை.
இந்த நேரத்திலேயே, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வட்டாரமும் விகிதாசாரமும் கொண்ட கலப்பு தேர்தல் முறைமை பற்றி அரசியல்வாதிகளும் மக்களும் விளங்கிக் கொள்வதற்கிடையிலேயே வாக்கெடுப்பு நடந்து முடிந்திருக்கின்றது.
இப்புதிய தேர்தல் முறைமை பற்றி, முஸ்லிம் அரசியல் கட்சிகள், மக்களுக்குத் தெளிவுபடுத்தாதது ஒருபுறமிருக்க, குறைந்தபட்சம் தாமாவது, அதன் உள்ளடக்கங்கள், சூத்திரங்களை விளங்கிக் கொள்ளவில்லை என்பது கண்கூடு.
நாடாளுமன்றத்திலும், மாகாண சபையிலும் குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்குப் பாதகமான சட்டத்துக்கும் கூட, கூட்டத்தோடு சேர்ந்து கையை உயர்த்திவிட்டு, பிறகு மக்கள் மன்றத்தில் விழிபிதுங்கி நின்றிருக்கிறார்கள். அதுபோலவே, தேர்தல் முறைமையிலும் விளக்கமற்றவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பது, உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்களைப் பார்க்கின்றபோது, நன்றாகவே புலப்படுகின்றது.
இந்தத் தேர்தல் முடிவுகள், வழக்கத்துக்கு மாறான பல்வேறு பண்பியல்புகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. அதில் இரு விடயங்கள் முக்கியமானவை. முதலாவது விடயம், ஆளும் கட்சியல்லாத ஒரு கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, அதிகப்படியான உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியுள்ளமையும் ஆட்சியின் பிரதான பங்குதாரர்களான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை அதற்கடுத்த நிலையிலும் ஒப்பீட்டளவில் குறைவான உறுப்பினர்களைப் பெற்றுள்ளமையும் ஆகும்.
அடுத்த விடயம், பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில், மிகக் குறிப்பாக, சிறுபான்மை மக்கள் வாழும் பிரதேசங்களில், தனித்து ஓர் ஆட்சியை நிறுவ முடியாத சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளமை ஆகும்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி, 239 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியுள்ளது. சிங்களப் பெரும்பான்மைப் பிரதேசங்களிலேயே இந்தச் சபைகள் பெருமளவில் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
இது உலகுக்கு மறைமுகமாக ஒரு செய்தியைச் சொல்கின்றது. சிங்களப் பெரும்பான்மை மக்கள், தற்போதைய கூட்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் போக்குகளுடன் உடன்படவில்லை என்பதும், மஹிந்தவுக்கு பதவியில்லாவிட்டாலும் கணிசமான மக்களாதரவு இருக்கின்றது என்பதுமே அந்தச் செய்தியாகும்.
இந்தப் பின்னணியில், தேசிய அரசியலில் ஒரு பெரிய பிரளயமே நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. ‘இதோ பிரதமர் பதவி விலகப் போகின்றார்; இதோ ஆட்சி கவிழப் போகின்றது; புதிய பிரதமரும் அமைச்சரவையும் உருவாக்கப்படப் போகின்றது’ என்றெல்லாம் பல்வேறு ஊகங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அத்துடன், மைத்திரியும் மஹிந்தவும் சேரப் போகின்றார்கள் என்றும், மஹிந்தவும் ரணிலும் சேரப் போகின்றார்கள் என்றும், இல்லையில்லை யாருடனும் யாரும் சேரமாட்டார்கள் என்றும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட அரசியல் கதைகளும் உலாவ விடப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும் போது கூட, களநிலைமைகள் மாறிவிடுவதற்கு சாத்தியங்கள் உள்ளன.
உள்ளூராட்சி மன்றங்கள் என்பது ஒரு நாட்டினுடைய ஆளுகைக் கட்டமைப்பின் ஆகச் சிறிய அலகு என்றாலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு, ஆட்சியை மாற்றவோ நாடாளுமன்றத்தைக் கலைக்கவோ முடியாது. இவ்வாறு இதுவரை நடந்ததும் இல்லை.
ஆனால், கூட்டரசாங்கத்துக்குள் முன்னமே நிதி மோசடிக் குற்றச்சாட்டுகள், முரண்பாடுகள், தனித்து ஆட்சியை அமைப்பதற்கான பனிப்போர் எல்லாம் உருவெடுத்திருந்த ஒரு சூழலில், பலமான கூட்டு எதிரணி இருக்கின்ற ஒரு நாட்டில், அந்த எதிரணிக்கு சார்பான பொதுஜன பெரமுன கிட்டத்தட்ட பெருமளவான சபைகளைக் கைப்பற்றியிருக்கின்றமை, ஆட்சிப் பீடத்தின் அடித்தளத்தில் அதிர்வை ஏற்படுத்தும் வலிமையைக் கொடுத்திருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி சரியில்லை; அவர்கள் நாட்டைக் குட்டிச்சுவராக்குகின்றார்கள் என்று சொல்லி, புதிய அரசாங்கத்தை நிறுவிய ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைமையும் சுதந்திரக் கட்சித் தலைமையும் எக்காரணம் கொண்டும், மீண்டும் ராஜபக்ஷவின் பக்கம் தலைவைத்தும் கூட படுக்கமாட்டார்கள் என்ற நிலைமை இப்போது மாறியிருக்கின்றது.
பொதுஜன பெரமுனவின் வெற்றி, மஹிந்தவை, இரு பிரதான கட்சிகளும் உள்ளூற, ஏக்கத்தோடு திரும்பிப் பார்க்கச் செய்திருக்கின்றது. இந்த முக்கோண அதிகாரப் போரில் இருந்து விடுபட்டு, ஏதாவது இரு தரப்புகள் ஆட்சியைப் பலப்படுத்தவோ, மாற்றியமைக்கவோ ஒன்றிணையும் சாத்தியம் கடந்த சில நாட்களுக்குள் அதிகரித்திருக்கின்றமை தெளிவானது.
கொழும்பில், கடந்த சில நாட்களாக நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம், ஆட்சியின் எதிர்காலம், நல்லாட்சி அரசின் நிலைபேண் தன்மை பற்றிய ஏகப்பட்ட இரகசிய பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அத்துடன்,கட்சி தாவுவதற்கு விரும்புகின்றவர்களுக்கும் மூன்று பிரதான அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான மந்திராலோசனைகளும் தினமும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.
வெளியாகியுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள், அடுத்து இடம்பெறவுள்ள மாகாண சபைத் தேர்தலிலும் அதற்குப் பிறகு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே பொது நியதி ஆகும்.
எனவே, மஹிந்த அணி பெற்றிருக்கின்ற பலத்தை மூலதனமாக்கி, ஆட்சியை ஆட்டிப்பார்க்கும் முயற்சிகள் பல பக்கத்தில் இருந்தும் இடம்பெறுகின்றன.
முதலில் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு ஆட்சியை எம்மிடம் ஒப்படையுங்கள் என்று எதிர்த்தரப்பில் இருந்து குரல்கள் வந்தன. இந்நிலையில், கூடிய அமைச்சரவை, நல்லாட்சி அரசாங்கத்தையே முன்கொண்டு செல்வது என்ற முடிவை எடுத்தது.
அதன்பிறகும், மக்கள் ஆதரவுள்ள சுதந்திரக் கட்சியை அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு ஐ.தே.கவின் எதிர் முகாமில் இருப்பவர்கள் கோரியுள்ளனர்.
இதற்கிடையில், மஹிந்த அணியின் முக்கிய அரசியல்வாதிகள் சிலர் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலர் மைத்திரியையும் மஹிந்தவையும் இரகசியமாகச் சந்தித்ததாகவும் பிரதமரை சு.க முக்கியஸ்தர்கள் சந்தித்ததாகவும் உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், மூன்று பெரும்பான்மைக் கட்சிகள் முரண்பாட்டில் சிக்கியுள்ளதால் சிறுபான்மை கட்சிகளின் துணையுடன் ஆட்சியமைக்க முடியுமா என்பது பற்றியும் ஒரு தரப்பு சிந்திக்கின்றது.
அரசாங்கத்தின் எதிர்காலம் குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினத்துக்குள் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் சமகாலத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதானமாகக் கொண்டும் ஒன்றிணைந்த எதிரணியின் பக்கபலத்துடனும் சிறுபான்மை அரசாங்கமொன்றை நிறுவுவதற்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகின்றது.
அவ்வாறு நடைபெற்றால், சு.க உறுப்பினர்களுக்கு மேலதிகமாக ஒன்றிணைந்த எதிரணியினதும் ஐ.தே.கவினதும் சில உறுப்பினர்களை இதில் உள்வாங்க வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க,சுதந்திர தினத்தில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையாலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகள் குறைவடைந்துள்ளதாக ஒரு மூத்த அரசியல்வாதி கூறியிருக்கின்றமை கவனிப்புக்குரியது.
இவ்வாறு, நகைச்சுவைத் தனமான காரணங்களைக் கண்டறிகின்ற அரசியல்வாதிகள், இந்த மூன்று வருடங்களுக்குள், இந்த நல்லாட்சி மீது, ஏன் மக்கள் வெறுப்படைந்தார்கள் என்பதை ஏன் கண்டறிய முயற்சிக்கவில்லை என்ற வினா எழுகின்றது.
அந்தவகையில், மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தில், சிலர் விடயத்தில் கடைப்பிடிக்கப்பட்ட மென்போக்கு மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்புக்கான இடைக்கால அறிக்கை போன்ற விடயங்கள் நல்லாட்சிக்கான (ஐ.தேக மற்றும் சு.க) சிங்கள ஆதரவுத்தளம் குறைவடைந்து மஹிந்தவுக்கான ஆதரவுத்தளம் அதிகரிக்கக் காரணமாகி இருக்கலாம்.
அதேபோன்று, இனவாதிகளை மீண்டும் களத்தில் சுயாதீனமாக உலாவ விட்டமையும் முஸ்லிம், தமிழ் அரசியல்களில் ஏற்பட்ட புதிய அணிகளும், கட்டமைப்பு மாற்றங்களும் ஐ.தே.கவுக்கும் சு.கவுக்கும் வாக்குச் சேர்க்கும் வழிமுறைகளில் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றன.
ஆனால், மஹிந்த தனது பழைய கருவியை வைத்தே, வாக்காளர் தளத்தை கட்டுக்குலையாமல் வைத்திருந்திருக்கின்றார் என்பதை ஏன் இவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை எனத் தெரியவில்லை.
புதிய தேர்தல் முறைமை கொண்டுவரப்பட்ட போது, அது சிறுபான்மை மக்களுக்கு சாதகமானதல்ல என்பதைச் சமூக செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் சொன்னார்கள். ஆனால், பெண்கள் பிரதிநிதித்துவத்துக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தின் அளவுக்கேனும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தையும் அபிலாஷையையும் உறுதிப்படுத்தவில்லை. உத்தேச அரசமைப்பு வரைபிலும் முஸ்லிம்களுக்கு இதுவே நடந்தது. இதற்குப் பிரதான காரணம், பிரதான முஸ்லிம் கட்சி உள்ளடங்கலாக எல்லா முஸ்லிம் கட்சிளும் அதன் அரசியல்வாதிகளும் என்பதையும் இங்கு குறிப்பிடாமல் விட முடியாது.
இவ்வாறு சிறுபான்மை முஸ்லிம்களை கவனத்தில் கொள்ளாமல், அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேர்தல் முறைமை, அதேபோன்று ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் சிறுபான்மைப் பிரதிநிதித்துவங்களை இல்லாது செய்யக் காரணமாகிய இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தில் ஒரு கட்சிக்கே இரு உறுப்பினர்களும் கிடைக்கும் விதத்திலமைந்த சட்ட ஏற்பாடு எல்லாம் இன்று, அதை உருவாக்கியவர்களின் ஆட்சிக்கே உலை வைக்குமளவுக்குச் சென்றிருக்கின்றது. இதைத்தான் காலத்தின் நியதி என்று சொல்வது. எது எவ்வாறாகினும், இன்று தேசிய அரசியலில் ஏற்பட்டிருக்கின்ற இந்தக் குழப்பநிலை, நீண்டகாலத்தில் ஆட்சி மாற்றம் ஒன்றுக்குக் காரணமாக மாட்டாது என்று கூறுவதற்கில்லை.
ஆனாலும், இந்தப் போக்குகளைத் தணிய வைப்பதற்கான முன்னெடுப்புகள் வலுப்பெறுமாயின், ஆட்சி மாற்றம் நிகழாமல் விடுவதற்கும் சாத்தியமுள்ளது.
ஆனாலும், கூட்டு அரசாங்கம் அல்லது கூட்டாட்சி என்று ஒன்றை, இரு அணியினர் சேர்ந்து இப்போது உருவாக்கினால் கூட, உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்றை காட்டும் நமது அரசியல் சூழலில், புல்லுருவிகளும் கறுப்பு ஆடுகளும் நிரம்பியிருக்கின்ற களநிலையில், அந்த ஆட்சி நெடுங்காலத்துக்கு உறுதிமிக்கதாக நீடித்து நிலைத்திருக்க மாட்டாது என்பதே, நாம் கடந்த மூன்று வருடங்களில் பட்டறிந்துள்ள அனுபவமாகும்.