(காரை துர்க்கா)
இலங்கையில், அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அதிர்வலைகள் இன்னமும் ஓயந்தபாடில்லை. ஓயாத அலைகளாகவே அலை மோதுகின்றது. மேலும், ஓயப்போவதில்லை என்பது போலவே அரசியல் போக்குகள் தெரிகின்றன. கிராமிய மக்கள் மன்றங்கள் என அழைக்கப்படுகின்ற உள்ளூர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும், பிரதேச சபைகளுக்கான தேர்தல் முடிவுகள், முழு நாட்டையும் உலுப்பி விட்டிருக்கின்றன.
இதன் தாக்கத்தால், கொழும்பு தொடர்ந்தும் கொதித்துக் கொண்டிருக்கின்றது. காலையில் ஒரு செய்தி, மதியம் வேறு ஒரு செய்தி, மாலையில் பிறிதொரு செய்தி என செய்திகள் சிறகடிக்கின்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து, அதன் முடிவுகள் வெளியாகிய பின்னர், முன்னாள் ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ, ஊடகவியலாளர்கள் சந்திப்பைக் கொழும்பில் கூட்டினார்.
“தமிழர்களின் தனித்தாயகம் என்று உரிமை கொண்டாடிய ஈழப் பிராந்தியம் சுருங்கி விட்டது என்பதையே தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது” என்று, அவர் அங்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.
முன்னாள் ஐனாதிபதி மஹிந்தவின் இந்தக் கூற்று தொடர்பில் இரண்டு வகையான அலசல்களைச் செய்யலாம்.
முதலாவதாக, நாடு பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்று வரை, ஆட்சி புரிந்து வருகின்ற அரசாங்கங்கள், திட்டமிட்டு மேற்கொள்கின்ற சிங்களக் குடியேற்றங்களால், தமிழர் பிரதேசங்கள், கறையான் அரிப்பது போல கரைகின்றன. அதாவது திட்டமிட்டு கரைக்கப்படுகின்றன.
கிழக்கு மாகாணத்தில், 1949ஆம் ஆண்டு தொடக்கம், பல்வேறு காலப்பகுதிகளிலும், பாரிய அளவில் மேற்கொண்ட, நன்கு திட்டமிட்ட குடியேற்றங்களால், அங்குள்ள குடிப்பரம்பலில், தமிழ் மக்கள் பின்தள்ளப்படும் நிலை காணப்படுகின்றது.
அதுபோலவே, வடக்கு மாகாணத்திலும் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. 1948ஆம் ஆண்டு தொடக்கம், இன்று வரை தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்த அனைத்து அரசாங்கங்களினதும் பிரதான நிகழ்ச்சி நிரலாகச் சிங்களக் குடியேற்றம் இருந்துள்ளமையை அவதானிக்க முடியும்.
திருகோணமலையில் உள்ள 13 சபைகளில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐந்து சபைகளில் வெற்றி பெற்றுள்ளது. வவுனியாவில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு என, நிலத்தொடர்பு அற்ற முறையில் ஒரு பிரதேச சபையும் ஒரு பிரதேச செயலகமும் உருவாக்கப்பட்டு உள்ளன.
அது, வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபை எனவும் வவுனியா தெற்குப் பிரதேச செயலகம் எனவும் அழைக்கப்படுகின்றது. அந்தப் பிரதேச சபையிலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.
இந்தச் சிங்கள மக்கள், காலத்துக்குக் காலம் மாறி மாறி ஆண்ட அரசாங்கங்களினால், பல்வேறு வழிகளில், அபிவிருத்தி உட்பட வெவ்வேறு காரணங்களை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்கள் மூலம் குடியமர்த்தப்பட்டவர்களாவர்.
தற்போது இவர்கள் இப்பிரதேசத்தின் நிரந்தர வாசிகள். இங்கு, இவர்களது வாழ்வும் வளமும் சிறப்பாக உள்ளன. இந்த நிலங்களின் உண்மையான உரித்துக்காரர்கள், ஊர் இழந்து, உறவு இழந்து, உதிரிகளாய், அகதியாய் அவல நிலையில் வாழ்கின்றனர்.
தமிழர் தாயகம் என்ற கருதுகோளைக் கரைப்பதற்காக, அன்று வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் வலுக்கட்டாயமாக அழைத்து வந்து குடியேற்றப்பட்டவர்கள் இவர்கள். இவர்கள் விரும்பி இங்கு வரவில்லை. இவர்களுக்கு அரசாங்கம் முழுமையான பாதுகாப்புக் கொடுத்து, தொழில்முயற்சிகளில் ஈடுபடுவதற்குத் தேவையான அனைத்து வசதிவாய்ப்புகளையும் வழங்கியே இங்கு குடியேற்றியிருந்தது.
இவ்வாறு வந்து குடியேறியவர்கள், இன்று இந்தச் சபைகளில், தன்னிசையாக முடிவுகளை எடுக்கப் போகின்றார்கள்; ஆம்! இன்று அங்குள்ள சபைகளை ஆளப் போகின்றார்கள்.
பேரினங்கள், அதாவது பெரும்பான்மை இனங்கள், ஏனைய தேசிய இனங்களையும் சிறுபான்மை இனங்களையும் அடக்கி ஒடுக்குவதற்காகக் பயன்படுத்தும் ஒரு வலுவான ஆயுதமே இவ்வாறான குடியேற்றங்கள் ஆகும்.
இதன் ஊடாக, சிறுபான்மை இனங்களின் நிலத்தொடர்ச்சியை இல்லாமல் செய்து, அல்லது நிலத்தொடர்பை சுருக்கி, நில உரிமையைக் காலப்போக்கில் இல்லாமல் செய்தலே இதன் மறைமுக நிகழ்ச்சிநிரல் ஆகும்.
ஏனெனில், ஒரு தேசிய இனத்தின் உயிர்நாடி, மொழியும் நிலமும் ஆகும். சர்வதேச ரீதியாகப் பெரிய இனங்கள், சிறிய இனங்களை விழுங்க நடத்துகின்ற உபாயம் இதுவேயாகும்.
இதையே, எம் நாட்டில் ஆட்சியாளர்கள் எழுபது வருடமாகச் செய்கின்றார்கள்; இனியும் செய்வார்கள். ஆகவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பெருமைப்படுவதுபோல், ஈழம் கரைக்கப்படுகின்றது என்பது நிசமானதுதான்.
இரண்டாவதாக, கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு, கிழக்கில் போட்டியிட்ட தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளினதும் பொதுவான நோக்கு, ‘தமிழ் இனத்தின் சுதந்திரம்; அதாவது அடுத்தவரின் தலையீடு அற்ற நிம்மதியான வாழ்வு’ என்பதாகும்.
ஆனால், அவர்களுக்கிடையில் ஆயிரம் பிணக்குகள் முளைக்க வைக்கப்படுகின்றன. ஒரு குடையின் கீழ், ஒன்று திரள இன்னமும் பின்னடிக்கின்றனர்; பல காரணங்களைச் சோடிக்கின்றனர். தமிழ்ச் சமூக, சமயப் பிரமுகர்களின் கோரிக்கைகள், மக்களின் மன்றாட்டங்கள் எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்காகவே இன்னமும் ஒலிக்கின்றது.
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களிடமிருந்து, தொடர்ச்சியான ஆதரவையும் ஆணையையும் பல வருடங்களாகப் பெற்றுப் பெரும் பலத்துடன் வலம் வந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி, வீழ்ச்சியை நோக்கிப் பயனிக்கத் தொடங்கி விட்டதோ எனத் தேர்தல் ஆரூடம் கூறுகின்றது.
2013 வடக்கு மாகாண சபையில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றவர்கள், நாடாளுமன்றத்தில் 16 உறுப்பினர்களைக் கொண்டவர்கள் உள்ள கட்சியின் தலைவரே நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவிவகிக்கின்றார்.
இது இவ்வாறிருக்கையில், இவர்கள் கடந்த காலங்களில் மக்களுடன் கை கோர்த்துப் பயணிக்கவில்லை; மக்களின் மன நிலையைச் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை; மக்களின் மனதில் நம்பிக்கைக்கு உரிய உரித்துக்காரர்களாக உருவாகவில்லை.
தமிழ் மக்களது நீண்டகால அரசியல் பிணக்குத் தீரும் வரை, தமிழ்க் கட்சிகள் ஓர் அணியில் திரண்டாலே பலன் உள்ளதாக, பலம் உள்ளதாக, பயம் உள்ளதாக அமையும். அப்போதுதான், தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகப் பேச்சுவார்த்தை மேசையில், எதிர்த்தரப்புடன் (ஸ்ரீ லங்கா அரசாங்கம்) வலுவாகப் பேரம் பேசலாம். இதுவே தமிழ் மக்களினது பெருவிருப்பம்.
இதுவரை அந்த நிலையில் (ஆசனத்தில்) அமர்ந்த தமிழ்க் கூட்டடைப்பு தொடர்ந்தும் அமர வேண்டும். அவ்வாறாக இருக்க வேண்டுமாயின் பல முற்போக்கான சீர்திருத்தங்களை உடனடியாக ஆற்ற வேண்டி உள்ளது. தெற்கில், ஸ்ரீ லங்கா பொதுஐன பெரமுன, பல சபைகளிலும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுப் பலமான ஆட்சியை அமைக்கவுள்ளது.
ஆனால் வடக்கு, கிழக்கில் பல சபைகளிலும் தொங்கு நிலையே உள்ளது. ஒன்றிரண்டு சபைகளைத் தவிர, பலமாக உறுதியான ஆட்சி அமைக்க முடியாத கையறு நிலையில் கூட்டமைப்பு உள்ளது.
கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் தோல்வி அடைந்ததை மையமாகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை மாற்ற வேண்டும் என்ற கோசங்கள் தலைநகரில் வலுப் பெற்று வருகின்றன.
தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை தொடர்பில் பேச்சுகள், உரையாடல்கள் வருகின்ற போதும், கூட்டமைப்பின் தலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டால், அது தொடர்பில் பரிசீலிக்கப்படும் எனப் பல கட்சிகள் கூறி வருகின்றன. ஆகவே, அது தொடர்பில் கூட்டமைப்பு, கூடி ஆராய வேண்டும். ஏனெனில், ‘சாதாகமாக உள்ளதை ஆற்றுவதே அரசியல் ஆகும்’. ஆகவே, அதில் சாதகங்கள் இருக்குமெனின் பரிசீலனை ஏன் செய்யக் கூடாது? அத்துடன், எந்த விலை கொடுத்தேனும் ஒற்றுமை மிக முக்கியம்.
கொழும்பில் ஆட்சி அமைத்த சிங்கள அரசாங்கங்களுடன், தமிழ்க் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து, நேரடியாக ஆட்சியில் பங்கு கொள்ளவில்லை. ஆனால், உள்ளூராட்சி மன்றங்களின் சபைகளில் வடக்கு, கிழக்கில் ஆட்சி அமைக்க அவர்களிடம் அனுசரனை கோர வேண்டிய நிலையில் உள்ளனர்.
அதேவேளையில், கூட்டமைப்பு கூட்டாக, ஓர் அணியில் திரண்டு, தேர்தலைப் பலமாக எதிர்கொண்டிருப்பின், அனைத்துச் சபைகளிலும் பலமான ஆட்சியை அமைத்திருக்கலாம். ஆனால், இவ்வாறான ஒற்றுமை தேர்தலின் பின்னராவது மலருமா என்பது கேள்விக்குறியாகும். நடக்கப்போவது யாதெனில், தவிசாளர், பிரதித் தவிசாளர் பதவிகளைக் குறி வைத்து, பிணக்குகள் ஏற்படப் போகின்றன.
ஆகவே, உருவாக்கப்படவுள்ள சபைகள் மக்கள் சேவையை நோக்கி ஆரம்பிக்க முன்னரே அவர்களுக்குள் பிரச்சினைகள் ஆரம்பித்து விட்டன. மாறி மாறி, ஒருவர் மேல் மற்றொருவர் குப்பைகளைக் கொட்டத் தயாராகி விட்டனர். அடுத்து வரும் நான்கு ஆண்டுகள், தமிழ்ப் பிரதேசங்களின் பிரதேச சபைகளில், ‘கயிறு இழுப்புப் போட்டிகள்’ பஞ்சமின்றி நடக்கும்.
தமிழ்க் கட்சிகள் தங்களுக்குள் கட்சிகளாகவும் சுயேட்சைகளாகவும் பல அணிகள் பிரித்து, பொறுப்பற்றுக் களம் இறங்கினர். இதனால், தெற்கை மையமாகக் கொண்ட தேசியக் கட்சிகள், வடக்கு, கிழக்கில் இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளன.
அதன் ஊடாக, அவை இங்கு வலுவாகக் கால் பதிக்க, நம்மவர்களே பாதை அமைத்தது போல ஆகி விட்டது. அதாவது, எம்மவர்களால் எங்கள் தேசம் கரைகின்றது; கரைக்கப்படுகின்றது.