அஞ்சலி: எழுத்தாளர் தோழர் விதுரன் (இராசையா தங்கேஸ்வரன்) மறைவு!

“ஓ! மனிதர்களே நம்புங்கள்.

நான்,
பிரபஞ்சத்தில் ஒளி தேடுபவன்.
சிறந்த சித்தாந்தத்தின் புத்தன்.
இப்பூவுலகம் என் போதிமரம்.” – விதுரன் 

இப்பொழுதுதான் முகநூலில் இராசையா தங்கேஸ்வரனின் மறைவுச் செய்தினை அறிந்து கொண்டேன். உண்மையில் மிகவும் அதிர்ச்சியாகவிருந்தது. இவர் முல்லைத்தீவு கற்சிலைமடுவைச் சேர்ந்தவர். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இவர் ஒர் எழுத்தாளர் என்பது சிலரே அறிந்ததொன்று. விதுரன் என்னும் பெயரில் சில சிறுகதைகளையும், கவிதைகள் சிலவற்றையும் எழுதியிருக்கின்றார் (நானறிந்த வரையில்). மேலும் அதிகமாக எழுதினாரா என்பது தெரியவில்லை. இவரது சிறுகதையான நிஜதரிசனம் தேடல் (தேடக வெளியீடு) சஞ்சிகையின் பங்குனி 1994 இதழில் வெளியானது. இலங்கையிலிருந்து அகதியாக அமெரிக்கா வரும் தமிழ்ப்பெண்ணொருத்தியைக் கனடாவிலிருந்து சென்று அழைத்துவரும் தமிழ் இளைஞனைப்பற்றியது. அதில் இவர் பெண்ணுரிமை, தமிழர்தம் பெற்றோர் பார்த்துச் செய்யும் திருமணமுறை, புகலிடப்பெண்கள் நிலை, காதல், இணைந்து பழகும் டேட்டிங் என்று பல விடயங்களைச்சுற்றிக் கதையினை அமைத்திருப்பார். இவரது கவிதையான காணாமல் போன ஆடு தேடலின் மே 1997 இதழில் வெளியாகியுள்ளது. இவரைச் சந்திக்கும் தருணங்களில் மேலும் எழுதும்படி கூறுவேன். எழுதுவேன் என்று கூறுவார். மேலும் எழுதினாரா என்பது தெரியவில்லை.

ஒருமுறை இவருடன் சம்பாஷித்துக் கொண்டிருந்தபொழுது 1983 கலவரத்தைத்தொடர்ந்து சிறிது காலம் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் இணைந்திருந்ததாகவும், அதன் காரணமாகச் சிறிது காலம் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட இளைஞர்களொருவராக இலங்கைச் சிறையொன்றில் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். நான் அவரது சிறை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்படி , பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் அது பற்றி எதுவும் பின்னர் பதிவு செய்ததாகத் தெரியவில்லை.

பல வருடங்களுக்கு முன்னர் வன்னிச்சங்கம்(கனடா) மலர் வெளியிட்ட கொம்பறைக்கு ஆக்கம் நாடி அணுகியிருந்தார். கொடுத்ததாக ஞாபகம். அக்கட்டுரை கொம்பறை` மலரொன்றில் வெளியாகியிருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். அக்காலகட்டத்தில் வன்னியில் மாணவர்களுக்காக இலாப நோக்கற்ற அமைப்புக்காகச் சிறு தொகை கொடுத்தபோது நன்றி கூறிக் கடிதம் அனுப்பியிருந்தார். பின்னர் அவ்வப்போது மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்வதுண்டு. அண்மையில் கூட கண்புரை சத்திரசிகிச்சை பற்றிப் பதிவொன்றினையிட்டிருந்தபொது அச்சிகிச்சையினைத் தான் பல வருடங்களுக்கு முன்னர் செய்ததாகவும், அது பற்றிய அறிவுறுத்தல்களையும் முகநூலில் உள்பெட்டியில் தெரிவித்திருந்தார். அண்மையில் கூட ஜனவரி 23 எனது பிறந்தநாளினையிட்டு வாழ்த்துச் செய்தியினையும், பொங்கல் வாழ்த்துச் செய்தியினையும் அனுப்பியிருந்தார்.

இவ்விதமானதொரு சூழலில் நான் நினைத்திருக்கவில்லை அவரது மறைவு இவ்விதம் விரைவில் சம்பவிக்குமொன்று. இவரது இழப்பால் வாடும் அனைவர்தம் துயரிலும் என்னையும் இணைத்துக்கொள்கின்றேன்.

கவிதை.: காணாமல் போன ஆடு – விதுரன் (கவிதை மே 1997)

சூரியனைச் சுருக்கிட்டு
கட்டி வைக்க முயன்றவன்
விடிவெள்ளி தேடினான்
காணவில்லை.

பின் எப்படிச் சூரியன்?

ஓ! மனிதர்களே நம்புங்கள்.
நான்,
பிரபஞ்சத்தில் ஒளி தேடுபவன்.
சிறந்த சித்தாந்தத்தின் புத்தன்.
இப்பூவுலகம் என் போதிமரம்.

உங்களுக்குத் தெரியுமா?
நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும்
சூரியனை விடப் பெரியவை.

போனால் போகட்டும் சூரியன்
உங்களுக்கு,
நட்சத்திரப் பிரகாசம் நிச்சயம்.

சுருக்குகள் தயார்.
இதோ நட்சத்திரங்கள்
என்றவன்
திடீரென ஓர் நாள்
மினிமினியைத் திருடிக் கொண்டு
தலைமறைவானான்.
அத்துடன்..
முருகன் கோவிலில் மின்னிய
குத்துவிளக்கும்
பிள்ளையாருக்கு தீபமேற்றிய
பஞ்சாலாத்தியும்
காணாமல் போயிருந்தது.

தோழர்கள் சொல்லிக் கொண்டார்கள்
அவனுக்கு தலைக்கு மேல்
வெள்ளமாம்.
மக்கள்!!!
தமக்கு உரிய நளினத்துடன்
இடம் புதுசு. கதை பழசு என்றார்கள்.

(Giritharan.N