குழந்தை நட்சத்திரமாக எனக்கும் பலருக்கும் அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி. பாபு படத்தில் அவரின் வசதி, வறுமை என்ற இரு மாறுபட்ட நடிப்பில் எனக்கு அறிமுகமாகி பாலசந்தரின் கறுப்பு வெள்ளையில் கமலஹாசனின் காதலி ரஜனியின் தாய் என்ற இரு பரிமாண நடிப்பை தனது 15 வயதில் வெளிப்படுத்தி கமல், ரஜனி என்ற இரு முன்னிலை நடிகர்களையும் தனது நடிப்பால் தோற்க வைத்தவர். கூடவே பாரதிராஜாவின் 16 வயதில் சப்பாணியின் ஆதரவுடன் பரட்டையிடம் இருந்து தன்னை பாதுகாத்த பண்பட்ட நடிப்பு இவரை உச்சத்திற்கு கொண்டுவர பாபுவில் சிவாஜியின் பேத்தி போல் தோன்றியவர் அவருக்கு காதலியாக நடிக்கும் பார்முலா நடிப்பிற்குள் பிற்காலத்தில் தள்ளப்பட்டவர்.
ஆனாலும் மூன்றாம் பிறையில் கமலுக்கு கிடைத்த சிறந்த நடிகர் பட்டம் ஸ்ரீதேவி இற்கு கிடைத்திருக்கும் ஆனால் அப்படத்தின் கடைசிக் காட்சியில் கமலின் நடிப்பு ஸ்ரீதேவியின் நடிப்பபையும் விஞ்சிவிட்டதால் ‘பட்டம்’ தவறியதாக அந்தக்காலத்தில் பலரும் பேசிக் கொண்டனர். ஆனாலும் அப்படத்தில் கமல் ஒரு போக்கு பாத்திரத்தை செய்திருக்க ஸ்ரீதேவி இரு மாறுபட்ட நிலை (புத்தி சுவாதீனம் அற்றவர், வசதி படைத்த குடும்பத்தில் பிறந்த சுத்த சுவாதீனம் உள்ள இளம் பெண்) பாத்திரங்களை ஏற்று தனது நடிப்பாற்றலை நிரூபித்திருந்தவர்.
இத் திரைப்படத்தின் நடிப்பை மதிப்பீடு செய்யும் குழுவில் இருந்த ஆண் மேலாதிக்க தன்மையின் வெளிப்பாடே ஸ்ரீதேவியை பின் தள்ளி கமல் இற்கு முதல் இடம் கிடைக்க காரணமானது என்பது எனது பார்வை. இது அவரது திருமண வாழ்விலும் தொடர்ந்தது. அடைக்கலம் தேடி குடும்ப வாழ்விற்குள் புகுந்தாரோ என்பது எனது கேள்வியாக இருப்பதற்கு இந்த ஆணாதிக்க (அதுவும் திரையுலகில் காணப்படும் ஆண்களுக்கு இருக்கும் அதீத சந்தர்பங்கள் இதற்கு வாய்பாக அமைந்து விடுகின்றன) சமூக அமைப்பே காரணம் என்பது எனது கருத்து.
தனது தாய் தந்தையரின் தொடர் இழப்பைத் தொடர்ந்து இழப்புகளின் வலிகளுக்காக தன்னை அரவணைத்து ஆதரித்துக் கொண்டவரை அணைத்துக் கொள்வதை தவிர அவருக்கு வேறு தெரிவு இருக்கவில்லை என்பதை வேறு எப்படி பார்பது. இந்த (சினி)ஆணாதிக்க உலகில் இருந்து ஸ்ரீதேவி போன்ற உச்ச நிலை நடிகைகளும் தப்ப முடியவில்லை. குடும்ப வாழ்வில் அவர் சந்தோஷங்களை அனுபவத்தார் என்பதற்கு இவர் பெற்ற இரு மகள்களுடன் இவரும் போனி கபூரின் இன்னொரு மகளாக உலாவருவது சில சந்தோஷங்களை காட்டி நின்றாலும் அவரின் விருப்பு குடும்ப வாழ்வை அவரே தெரிவு செய்வதற்கு ‘சுயாதீன’ வாய்பு இருந்திருக்குமா என்பது எனக்குள் கேள்வியாக இன்றும் தொக்கி நிற்கின்றது.
குழந்தையாக.. குமரியாக… தாரமாக… தாயாக… ஏன் பேத்தியாக படிமான வளர்ச்சியூடாக தனது நடிப்பு திறமையை காட்டி இன்னும் உச்சத்திற்கு சென்றிருக்கு வேண்டியவர் இடையிடையே ‘அரிதாரம்’ பூசிய அழகு நடிகையாக மாற்றப்பட்டு பொருளாதாரத்தை ஈட்டி இந்தியிலும் முதல் நடிகையாக மாறினார் என்பது எனக்கு ஏமாற்றமாக இருந்தாலும் எனக்கு என்றும் விருப்பமான குழந்தை நட்சத்திரம்தான் இவர்தான். குமரியானதும் எனது சகா என்பதற்கு அப்பால் இவரை பார்க்கும் ‘சபலம்’ இற்குள் நான் பதின்ம வயதில் உள்ளாகவில்லை என்பது ஸ்ரீதேவி இன் தன்னை வெளிப்படுத்தும் முறையில் அவர் கையாண்ட வெற்றி என்றே கூறுவேன். இது என்னைப் போன்ற பலருக்கும் பொருந்தியிருப்பது ஒரு நடிகை என்பதற்கும் அப்பால் ஒரு மனுசியாக அவரின் இழப்பிற்காக என்மனமும் சஞ்சலப்படுகின்றது.