ஸ்ரீதேவி, மிதுன், போனி கபூர்… ராம் கோபால் வர்மா சொன்னதும் நிஜத்தில் நடந்ததும் என்ன?

(எம்.குமரேசன் எம்.குமரேசன்)

`நடிகை ஸ்ரீதேவி, உண்மையிலேயே சந்தோஷமாக வாழ்ந்தாரா அல்லது நிஜத்திலும் நடித்தாரா?’ என்று பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்ரீதேவி, வாழ்க்கையில் பல விஷயங்களில் தோல்வியைச் சந்தித்தவர்தான். கோலிவுட்டுடன் ஒப்பிடுகையில் பாலிவுட் மிகப் பெரியது. பத்மினி, வைஜெயந்தி மாலா, வஹிதா ரஹ்மான், ஹேமமாலினி, ரேகா வரிசையில் தென்னிந்தியாவிலிருந்து சென்று பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிபெற்றவர் ஸ்ரீதேவி. பாலிவுட்டில் `லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற அந்தஸ்த்தைப் பெற்ற ஒரே நடிகை இவர் மட்டுமே! அவரின் சொந்த வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாகவா இருந்தது?

ஸ்ரீதேவி பாலிவுட்டுக்குச் சென்ற சமயத்தில் மிதுன் சக்கரவர்த்தி பாப்புலராக இருந்தார். `டிஸ்கோ டான்ஸர்’ `படத்தின் ஹீரோ அவர். அட்டகாசமாக நடனம் ஆடுவார். மிதுனுடன் சேர்ந்து சில படங்களில் ஸ்ரீதேவி நடித்தார். முதலில் மிதுனைத்தான் ஸ்ரீதேவி ரகசியத் திருமணம் செய்தார். மிதுனுக்கோ ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தனர். மனைவியின் பெயர் யோகிதா பாலி.

இந்தச் சூழலில், ஸ்ரீதேவியை வெளிப்படையாக `மனைவி’ என்று அறிவிக்கத் தயங்கினார் மிதுன். இதற்கிடையே 1975 முதல் 1980 வரை வெளியான ஸ்ரீதேவியின் தமிழ் சினிமாக்களைப் பார்த்து போனி கபூருக்கும் அவர் மீது காதல் மலர்ந்தது. ராம்கோபால் வர்மா எப்படி ஸ்ரீதேவியை வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு சினிமாவுக்குள் நுழைந்தாரோ… அதேபோன்று போனி கபூரும் ஸ்ரீதேவியை வைத்து படம் தயாரிப்பதே லட்சியமாகக்கொண்டார்.

சென்னையில் வசித்துவந்த ஸ்ரீதேவியைச் சந்திக்க முயன்றார் போனி கபூர். அந்தச் சமயத்தில் சிங்கப்பூரில் படப்பிடிப்பில் ஸ்ரீதேவி இருந்ததால், போனி கபூர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற கதையும் உண்டு. 1983-ம் ஆண்டு வெளியான `சத்மா’ (மூன்றாம் பிறை)வுக்கு முன்னரே இரு இந்திப் படங்களில் நடித்திருந்தார். ஆனால், `சத்மா’ வெளியான பிறகே ஸ்ரீதேவியின் நடிப்பை பாலிவுட் உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தது.

இதற்கிடையே போனி கபூருக்குப் பெண் பார்த்தனர், அவரின் பெற்றோர். அந்தப் பெண்தான் மோனா. மிதுன்-ஸ்ரீதேவி விவகாரத்தால், போனி கபூர் மோனாவை திருமணம்செய்துகொண்டார். ஆனால், அவரை வைத்து சினிமா தயாரிக்க வேண்டும் என்ற ஆசையை மட்டும் கைவிடவில்லை. படப்பிடிப்பு ஒன்றில் ஸ்ரீதேவியைச் சந்தித்தார். தன் புதுப் படம் பற்றி அவரிடம் கூறினார். அந்தப் படம்தான் 1987-ம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான `மிஸ்டர் இந்தியா’. இந்தப் படத்தில் நடிக்க 10 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டார் ஸ்ரீதேவியின் தாயார் ராஜேஸ்வரி. போனி கபூரோ 11 லட்சம் ரூபாய்க்கு செக் அளித்தார்.

`மிஸ்டர் இந்தியா’ படப்பிடிப்பின்போது, மிதுனுக்கும் தனக்குமிடையே இருந்த உறவை போனி கபூரிடம் கூறினார். ஸ்ரீதேவியை `மனைவி’ என்று வெளிப்படையாக மிதுன் அறிவிக்கத் தயாராக இல்லாத நிலையில், போனி கபூரோ அவருக்காக எதுவேண்டுமானாலும் செய்ய தயாராக இருந்தார். போனி கபூரின் ஆறுதல் வார்த்தைகள் அவரைத் தேற்றின. மிதுனிடம் இல்லாத காதலை போனி கபூரிடம் ஸ்ரீதேவி கண்டார். `நான் கனவில் கண்ட ஆண் அவர்’ என்று போனி கபூர் பற்றி ஸ்ரீதேவி கூறுவார். ஸ்ரீதேவி தாயார் ராஜேஸ்வரி வாங்கியிருந்த கடன் முழுவதையும் போனி கபூர் அடைக்க, ஸ்ரீதேவியின் நம்பிக்கையைப் பெற்றார் போனி கபூர். `மிஸ்டர் இந்தியா’வுக்குப் பிறகு யாஷ் சோப்ரா இயக்கத்தில் வெளியான `சாந்தினி’ சூப்பர் டூப்பர் ஹிட் ஆக, `லேடி சூப்பர்ஸ்டார்’ அந்தஸ்த்தை எட்டினார் ஸ்ரீதேவி.

இதற்கிடையே, போனி கபூருக்கு முதல் மனைவி மூலம் இரு குழந்தைகள் பிறந்திருந்தன. அதில், ஒருவர்தான் தற்போதையை இந்திப் பட ஹீரோ அர்ஜுன் கபூர், நடிகை அன்சூலா கபூர். 1996-ம் ஆண்டு போனி கபூர் ஸ்ரீதேவியைத் திருமணம் செய்துகொள்ள, குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. போனி கபூரின் மனைவி மோனா, தன் குழந்தைகளுடன் கணவரைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்தார். மோனாவின் தாயார் தன் மகளின் வாழ்க்கையை ஸ்ரீதேவி பாழடித்துவிட்டதாகக் கருதினார். கர்ப்பமாக இருந்த ஸ்ரீதேவியைப் பார்த்த மோனாவின் தாயாருக்குக் கடும் கோபம் ஏற்பட, அவரின் வயிற்றில் கையால் ஓங்கிக் குத்தக்கூட முயன்றார்.

போனி கபூரைத் திருமணம் செய்த ஸ்ரீதேவி, தன் குடும்பத்தை மிகவும் நேசித்தார். ஶ்ரீதேவி இல்லாமல் அந்தக் குடும்பத்தில் அணுவும் அசையாது. போனி கபூருக்கும் ஸ்ரீதேவி மீது வற்றாத காதல். ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் எழ முதல் காரணமாக இருந்தது, ஒரு நிகழ்வு!

துபாயில் பிப்ரவரி 20-ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. 22-ம் தேதி போனி கபூர் இளைய மகள் குஷியுடன் மும்பை திரும்புகிறார். பிறகு 24-ம் தேதி மீண்டும் துபாய்க்கு அவர் தனியாகச் சென்றது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது அல்லவா? மனைவிக்கு `சர்ப்ரைஸ்’ அளிப்பதற்காகச் சென்றதாக போனி கபூர் கூறினார். `இந்த வயதில் என்ன சர்ப்ரைஸ்?’ என்ற வினாவும் நமக்குள் எழும். இந்த வயதிலும் அவருக்கு சர்ப்ரைஸ் அளிக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டியது, மனைவி மீது இருந்த வற்றாத காதல்தான்.

ஸ்ரீதேவியின் மரணம், போனி கபூரின் மூத்த மகன் அர்ஜுன், அன்சூலா ஆகியோருக்கும் கடும் துயரத்தை அளித்தது. தகவல் கிடைத்ததும், சித்தப்பா அனில்கபூர் வீட்டில் தங்கியிருந்த சகோதரிகள் ஜான்வி, குஷியை நோக்கி ஓடோடி வந்து ஆறுதல் அளித்துத் தேற்றினர். பிறகு, சித்தியின் உடலைக் கொண்டு வர, அர்ஜுன் துபாய் சென்று தந்தைக்கு உதவினார். தனி விமானத்தில் சடலத்தை அவர்தான் மும்பைக்குக் கொண்டு வந்தார். இறுதிச் சடங்கு முடிந்த பிறகு, போனி கபூர் கண்ணீருடன் ஒரு ட்விட் போட்டுள்ளார். அதில், `உலகத்துக்கு ஶ்ரீதேவி சாந்தினி; எங்கள் குடும்பத்துக்கு அவர்தான் எல்லாமே. இந்தச் சமயத்தில் அர்ஜுன், அன்சூலாவின் ஆதரவும் அன்பும் கிடைத்ததை ஓர் ஆசீர்வாதமாகவே கருதுகிறேன். நான், ஜான்வி, குஷி இந்தப் பெரும் இழப்பிலிருந்து மீண்டு வர, அவர்கள் காட்டும் அன்பும் அரவணைப்பும்தான் எங்களுக்கு உதவும்’ என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார்.

முத்துப்பல் சிரிப்பால்தான் ஸ்ரீதேவி ரசிகர்களைக் கட்டிப்போட்டார். பொது நிகழ்ச்சியிலும் முத்துப்பல் தெரிய சிரிப்பார். சிரிப்பவர்கள் எல்லோரும் சந்தோஷமானவர்கள் இல்லையென்று உணர்த்திச் சென்றிருக்கிறார் மயில்!

(Vikadan)