-இரா.முருகவேள்.
மதுவின் கொலையை முன்வைத்து பழங்குடி பகுதிகளைப் பீடித்திருக்கும் வறுமையையும் பட்டினிச் சாவுகளையும் பற்றி….
காலனியாட்சிக்கு முன்பு சமவெளிகள் போல காடுகளில் தனியுடமை இல்லை. காடு முழுவதும் பழங்குடி இனங்களுக்குச் சொந்தமானதாக இருந்தது. விவசாயமும் எரித்துப் பயிரிடும் கூட்டு விவசாயமாகவே இருந்தது.
ஆங்கில ஆட்சி பழங்குடி மக்களிடையே தனி உடமை பற்றிய பட்டயங்களோ ஆவணங்களோ இல்லாததைப் பயன்படுத்திக் கொண்டு பெரும்பகுதி காடுகளை பேரரசின் பயன்பாட்டுக்கு என்று ரிசர்வ் காடுகளாக அறிவித்தது. ஒரு பகுதி காடுகளை ரெவின்யூ காடுகள் என்று சொன்னது. ஜமீன்கள், கோவிலங்கங்கள் என கீழிருந்த பெரு நில உடமையாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்த காடுகள் சமவெளி மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட்டன.
பழங்குடி மக்களை வெள்ளை அரசு பணயக் கைதிகளாகவே பயன்படுத்தியது. அவர்களை வதைத்து வற்புறுத்தி வேலை வாங்கி காடுகளில் தேக்கும் யூக்கலிப்டஸும் பயிரிட்டது. மரம் வெட்டுவதற்காக கூப்பு சாலைகள் அமைத்தது. ரிசர்வ் காட்டில் வராத அவர்களின் நிலங்கள் சமவெளி பேராசைக்காரர்களால் ஆகிரமிக்கப்பட்டன. ‘விஷகன்யா’ என்ற மலையாள நாவல் வயநாட்டில் குடியேறிய சிரியன் கிருத்துவர்களைப் பற்றிய சோகக் கதை. ஆனால் அது பழங்குடி மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட கதை. மக்கள் அடிமையாக்கப்பட்ட கதை. சமவெளி மக்களால் அடிமையாக்கப்பட்ட ஒரு பழங்குடி இனத்தின் பெயர் ‘பணியர்’ (பணீ செய்பவர்கள்) என்றே ஆகிவிட்டது.
முதுமலையில் பழங்குடி மக்கள் ஆடுகள் போல ஓட்டிச் செல்லப்பட்டு தேக்கு பயிரிடச் செய்யப்பட்டதால் அவர்கள் தங்கள் சொந்த கிராமங்கள் இருந்த இடங்களையே மறந்து போயினர்.
இந்தியா முழுவதும் நடந்த இந்தக் கொடுமைகளின் காரணமாக பழங்குடி மக்களுக்கும் வெள்ளை அரசுக்கும் இடையே சுமார் 150 யுத்தங்கள் நடந்தன. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மறக்கப்பட்ட வரலாறு அது.
சுதந்திர இந்திய அரசியல் சட்டத்தின் 5 வது ஷெட்யூல் பழங்குடி பகுதிகளுக்கு விஷேஷ உரிமைகள் அளித்தாலும் தேயிலைத் தோட்டங்கள், சுரங்கங்கள், அணைகள், பெரும் உடமையாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்த காடுகள் 5 வது ஷெயூலின் கீழ் கொண்டு வரப்படவில்லை. அதன் விளைவுதான் காடுகளில் நிலவும் கலக மனநிலை. அருந்ததி ராய் ‘வாக்கிங் வித் காம்ரேட்ஸ்’ல் சொல்வது போல மாவோ பிறந்ததற்கு முன்பிருந்தே நடந்து வரும் போர் இது.
அட்டப்பாடி பள்ளத்தாக்கின் பெரும்பகுதி நிலம்பூர் கோவிலகம் என்ற கேரள ஜமீனின் கீழிருந்தது. பழசிராஜா, மப்ளா எழுச்சி கதைகளில் அடிபடுமே அதே நிலம்பூர் கோவிலகம். தமிழக கேரளப் பகுதிகளில் இறுதியாக அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட பகுதி இதுதான். இன்று வனத்துறை இந்திய நிலப்பரப்பில் 11 சதவீத நிலப்பரப்பை தன் இரும்புப் பிடியில் வைத்துக் கொண்டு பெரும் நிலப்பிரபுவாக இருக்கிறது.
ரிசர்வ் காட்டில் இல்லாத பல பழங்குடி மக்களின் நிலங்கள் கீழிருந்து வந்த மலையாளி தமிழ் மக்களால் கைப்பற்றப்பட்டு அவற்றுக்கு அரசால் பட்டாவும் வழங்கப்பட்டது.
இந்தக் குடியேறிகளும் ஆசிரமங்களும் அரசும் அகழிகளும் முள்வேலிகளும் மின்சார வேலிகளும் அமைத்து தங்கள் நிலங்களைக் காப்பதாலும் யானைகளின் வழித்தடங்களில் பெரும் அணைகளும் சுரங்கங்களும் அமைப்பதாலும் யானைகளும் மான்களும் காட்டெருமைகளும் பழங்குடி மக்களிடம் எஞ்சியிருக்கும் நிலங்களைத் தாக்குகின்றன.
சொந்த நிலங்களில் பயிரிட முடியாதவர்கள், ரிசர்வ் காட்டிலிருந்து வனத்துறையால் துறத்தப்பட்டவர்கள், நிலங்களை குடியேறிகளின் இழந்தவர்கள் செங்கல் சூளைகளிலும் கேம்ப்கூலி மில்களிலும் வதை படுகின்றனர்.
எங்கள் வீட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் காடு தொடங்கிவிடுகிறது. மனநிலைபாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லமுடியாத ஆனால் நடப்பு சூழலைப் புரிந்து கொள்ள முடியாத பல பழங்குடி ஆண்களை நான் பார்த்திருக்கிறேன். யானையை தடி கொண்டு அடித்தவர், சிறுத்தை உலாவும் ஓடியருகே மாடுகளை விட்டுவிட்டு புல்லில் படுத்துத் தூங்கியவர் என்று…. தங்கள் உலகுக்கும் இந்த பேராசைக்காரர்கள் உலகுக்கும் இடையே ஒரு மாய உலகில் வாழ்பவர்கள் இவர்கள்.
ஒரு மது அல்ல. வீரப்ப வேட்டையில் கொல்லப்பட்ட இருநூற்றுக்கும் மேட்பட்டவர்கள், கோவை மன்னார்க்காடு சிறைகளில் கஞ்சாக்கடத்தல்காரர்கள் என்று அடைக்கப்பட்டு டிபி வந்து உயிர் விட்டவர்கள், மில்களில் வதைபடுபவர்கள்….
உத்பலேந்து சக்ரவர்த்தியின் வங்காள மொழிப்படம் ‘போஸ்ட்மார்டம்’. பசி தாங்க முடியாமல் காட்டில் தற்கொலை செய்து கொண்ட ஒரு சந்தால் பழங்குடியின் உடலை போஸ்ட்மார்டம் செய்யாமல் கொடுக்க முடியாது என்று போலீஸ் சொல்லி விடுகிறது.
மக்கள் பொறுமையுடன் காத்திருகின்றனர்.
போஸ்ட் மார்ட்டம் முடிந்ததும் அவனது அம்மா கேட்கிறார். “அந்தக் குடல்களில் ஒரு பருக்கை சோற்றையாவது பார்த்தீர்களா?” #JusticeForMadhu #Kerala #Adivasi #ReserveForest
நன்றி : மகேஸ்வரன் நாச்சிமுத்து.