இன்றைய நிலையில், சொல்ல நினைப்பது…..

(எம்.பௌசர்)

தற்போது இலங்கையிலிருந்து வந்து கொண்டிருக்கும் செய்திகள், மீண்டும் மீண்டும் மிக மோசமான நிகழ்காலத்தினையும் எதிர்காலத்தினையும் கட்டியம் கூறுகின்றன. கடந்தகால அனுபவங்களிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் இலங்கை எதனையும் கற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதை நிகழ்காலத்தின் விளைச்சல்களாக மாறி நிற்கும் இரத்தம் சிந்துதலும் உயிரிழப்புகளும் இனவன்முறைகளும் நமது முகத்தில் காறி உமிழ்கின்றன. உண்மைகள் கசப்பானவைதான் ஆனால் அவை தீர்வைக் கண்டடைவதிலிருந்து பல்லினங்களையும், சமூகங்களையும் மக்களையும் தூரப்படுத்துவதுதான் மிக ஆபத்தாக அமைகிறது. அடிப்படையை அடையாளம் காணாமல் தலையணையையும் தலைப்பாகையும்( அரசியல் கிரீடத்தையும் ) காலத்திற்கு காலம் மாற்றுவது தீர்வல்ல.

அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றுவது ஒருபுறமிருக்க, நீண்டகால அடிப்படையில் இந்த நிகழ்வுகளைத் தடுப்பது தொடர்பாக அறிவுபூர்வமாக செயற்படுவதும் அவை தொடர்பாக சிந்திப்பதும் இதற்காக முன்கை எடுப்பதும் இன்னொரு முக்கிய விடயமாகும்.இலங்கையில் வாழும் இனங்கள், சமூகங்கள், மதப்பிரிவினரிடையே மீள் நல்லிணக்கத்தினை அடிப்படையில் கட்டி உருவாக்கும் வகையில் செயற்படத்தக்க நீண்டகால வேலைத்திட்டமொன்றை சிவில் சமூகங்களின் மத்தியில் கட்டியெழுப்புவது உடனடித் தேவையாகயுள்ளது.

இதற்கான சிறு சிறு முயற்சிகள் நெருக்கடிக் காலகட்டங்களில் எடுக்கப்பட்டாலும் அவை வெற்றிபெறாமையும் , பெருமளவில் ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியாமையாக இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, ஒவ்வொரு தரப்பு பற்றி மற்றத் தரப்பினர் மோசமான கருத்துக்களையும் பகை முரண்களையும் கொண்டிருப்பதேயாகும். இதனால், மக்களுக்குள் நல்லிணக்கத்தினை முதன்மைப்படுத்தும் பிரிவினர் தமது பணியை முன்னெடுப்பதில் பின்னடைவையும் தோல்வியையுமே சந்தித்து வருகின்றனர்.

கண்டியை மையப்படுத்தி தற்போது நிகழ்ந்துவரும் சிங்கள முஸ்லிம் வன்சூழலை உதாரணமாகக் கொண்டு பார்க்கும்போது, சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியிலிருந்து நடைபெற்று வருகின்ற வன்செயல்களுக்கு எதிராக பலமான எதிர்ப்போ, இதனை தடுத்து நிறுத்துவதற்கான திரற்சியான சிவில் சமூகக் குரலோ எழாமல் இருக்கிறது என்கிற நடைமுறை உண்மை இங்கு முக்கியமானது. இந்த நிலைமைக்கு பின்வரும் காரணங்கள் இருக்கலாம்.

1. முஸ்லிம் வெறுப்பு இனவாதம் நிறுவனமயப்பட்டுள்ள நிலையில், தனி நபர்களாக அல்லது சிறு அமைப்புகளாக நல்லிணக்கத்தினை வலியுறுத்தும் கருத்துக்கள் குரல் இழந்ததாக, காயடிக்கப்பட்டதாக மாறியுள்ள சூழல்.

2 . முஸ்லிம் மக்களின் சமூக வாழ் அரசியல், பொருளாதார, மத அணுகுமுறைகளின் காரணமாக பெரும்பான்மை சிங்கள மக்கள் முஸ்லிம்கள் தொடர்பில் அதிருப்தி உற்றுள்ளமையால், இந்த வன்செயல்களை நியாப்படுத்தி கடந்து போகும் நிலை.

எந்தவொரு சிக்கலையும் முரணையும் அதன் அடிப்படைத் தன்மையை இனம்கண்டு சீர்செய்யாமல், அதற்கான முழுப்பரிகாரத்தினையும் கண்டடைந்து விட முடியாது. சம்பவங்கள், அதற்கு சொல்லப்படும் காரணங்கள் இடையில் நிகழ்வனதான். அண்மையில் அளுத்கம , அம்பாரை, கின்தொட்ட, இன்று திகன , இவை இந்த இனவாத நிகழ்ச்சி நிரலில் ஒவ்வொரு தரிப்பிடம்தான். இனியும் எதிர்காலத்தில் இப்படியான பட்டியல் தொடரத்தான் போகின்றன. ஒவ்வொரு சம்பவங்கள் நிகழும் போதும் உணர்ச்சிகளை அள்ளி இறைப்பதும், ஆவேசம் கொள்வதும் பின் தடமறியாமல் பழைய நிலைமைக்குத் திரும்புவாதாலும் எந்தப் பயனுமில்லை. இவற்றிற்கு பின்னுள்ள அரசியல், இனமான விடயங்களையிட்டு நமக்கு ஒரு தெளிவும் தூரப்பார்வையும் அவசியமாகும்.

00000

இலங்கையின் காலனித்துவத்திற்குப் பிந்திய அரசியல் வரலாறே இன முரண்களினதும் இனங்கள் மேலான கொடூர வன்செயல்களினதும் கூட்டுத்திரட்சிதான். இலங்கை அரசின் தன்மை என்பதே இனவாதத்தால் கட்டமைக்கப்பட்டதுதான். காலத்திற்கு காலம் பதவிக்குவரும் யூ.என்.பி, எஸ்.எல்.எப்.பி, தலமையிலான அரசாங்கங்கள் இந்த இனவாதத்தினை பேணும் அரசியல் நிறுவனங்களே. அரசின் சட்டம் ஒழுங்கைப் பேணும் நிறுவனங்களான நீதித்துறை, பொலிஸ், இராணுவம் என்பது இந்த இனவாத அரசின் கைப்பொம்மைகளே. இவை இன சமத்துவத்தினை உருவாக்க பாடுபடும் என்றோ, இம்மக்களை பாதுகாக்குமென்றோ நம்புவது அரசியல் அறிவீனம்.

காலனித்துவத்திற்குப் பின் 1933, 1946.1977, 1983 என பாரிய அளவிலான இன வன்செயல்கள் இலங்கையில் நடந்தேறியுள்ளன , பதவியிலிருந்த அரசாங்கங்களே இவ்வன்செயல்களை திட்டமிட்டு நடத்தியுள்ளன இவற்றிற்கு பின்புலமாக இருந்துள்ளன அல்லது வேறுபட்ட பெயர்களில் அமைப்புகளை உருவாக்கி ஊட்டி ஊக்குவித்தது வளர்த்து வந்துள்ளது என்பது வெள்ளிடைமலை. இறுதியாக 2009 மே இல் தமிழ் மக்களை கொன்று பாரிய இனப்படுகொலையை நாடாத்தியது இந்த அரசு. 2009 க்குப் பின்னான இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல் முஸ்லிம்களை முதன்மை இலக்காகக் கொண்டது. அதன் விளைவுகள் தான் கடந்த பத்தாண்டுகளாக முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் அரசியல் ,சமூக நிலைமைகள்.

00000

இந்த நிலையில், இலங்கை அரசோ, அல்லது அதன் துணை நிறுவனங்களோ பெருமளவிலான சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்குமென்றோ, அவர்களுக்கு நீதி தருமொன்றோ நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. பாதிக்கப்படும் மக்களுக்குள்ள வழிகளில் முதன்மையானது அனைத்து இன மக்களுக்குள்ளும் அதன் சிவில் சமூகத்துடன் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவதும், தம் பக்கத்திலுள்ள தவறுகளை இனம் கண்டு சீர் செய்வதும் , மக்களின் நன்மதிப்பினை தமக்கு கவசமாக்கிக் கொள்வதுமேயாகும். இதுதான் முன்னுள்ள தெரிவு. இதன் மூலமே நிறுவனமயப்பட்டு ஆழ விருட்சம் பரப்பியுள்ள இனவாத கருத்து நிலையை ஒரளவு அடி பணிய வைக்க முடியும். பிற இன மக்களை பகைவராக்குவதன் மூலமும், வெறுப்பதன் மூலமும் தமக்குத் தாமே படுகுழிகளை தோண்டத்தான் முடியும். விளைவுகள் அனைத்து தரப்புக்கும் கண் முன்னானவை.