கௌசிகன் என்ற மன்னன் தான் ஆண்ட நாட்டு மக்களின் நன்மைக்காக முடி துறந்து முனிவராக மாற யாகம் செய்தான்.ஒரு சத்திரியன் முனிவராவதை முனிவர் வசிட்டர் விரும்பவில்லை.ஆனாலும் கௌசிகன் தவமிருந்து சிவனின் அருளால் பிரம்ம ரிஜி பட்டம் வாங்கி விசுவாமித்திர முனிவர் என்ற பெயர் பெறுகிறார்.
ஒரு சத்திரியன் முனிவராவதை ஏற்க மறுத்த பிராமணர்களும் தேவர்களும் விசுவாமித்திரரின் தவலிமையை குறைக்க சதிகளில் ஈடுபட்டனர்.அதையும் மீறி விசுவாமித்திரர் சக்தி பெற்றார்.ஆனாலும் வசிட்ட முனிவர் சாதி காரணமாக சத்திரியன் ஒருவன் பிரம்ம ரிஜி என்பதை ஏற்க மறுத்தார்.
சிவனே பிரம்ம ரிஜி என்று ஏற்றபோதும் சாதாரண பிராமண முனிவராகிய வசிட்டர் தன்னை பிரம்ம ரிஜி ஏற்கவில்லை என விசுவாமித்திர முனிவர் வருந்தினார்.எப்படியாவது வசிட்டன் வாயால் பிரம்ம ரிஜி பட்டம் வாங்க முயன்று இறுதியில் வசிட்டரே பிரம்ம ரிஜிக்கு எல்லாம் பிரம்ம ரிஜி புகழப்பட்டார்.
இன்றைய குடா நாட்டு அரசியலைப் பார்க்கும்போது இந்தக் கதை நினைவுக்கு வருகிறது.
டக்ளஸ் தேவானந்தா ஈழ விடுதலை போராட்டம் என தொடங்கியபோது ஆரம்ப காலங்களில் களம் இறங்கியவர்களில் ஒருவர்.விடுதலைபோராட்டம் என்பது திசை மாறிப் போனதால் அவரது பாதையும் மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.புலிகளின் எதிர்ப்பும் இந்திய அரசு,தமிழக அரசு ஆதரவு இன்றி தவித்த டக்ளஸ் தன்னையும் தனது சகாக்களையும் பாதுகாக்க வேறு வழியின்றி இல்ங்கை அரசோடும் அரச படைகளோடும் இணங்கி செயற்பட்டவர்.
இந்திய இராணுவத்தோடு ஏற்பட்ட மோதல்களால் நிலைகுலைந்துபோன புலிகள் தங்களை பாதுகாக்க இலங்கை அரசோடு சேர்ந்து இயங்கினார்கள்.அதே வழியைத்தான் டக்ளஸ் தேவானந்தாவும் ஏனையவர்களும் பின்னாட்களில் பின்பற்றினார்கள்.தமிழ் அரசியல்வாதிகளும் இலங்கை அரசின் பாதுகாப்பில் வாழ்ந்தவர்கள்
இந்த தமிழ் அரசியல்வாதிகள்,ஒருவாறு பின்னாட்களில் புலிகளோடு இணந்து டக்ளஸ் தேவானந்தா அவர்களையும் ஏனைய குழுக்களையும் ஒட்டுக்குழுக்கள்,துரோகிகள் என வசை பாடினார்கள்.சென்ற தேர்தல்வரை இது தொடர்கதையாக இருந்தது.
நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவும்,தமிழ் காங்கிரசின் திடீர் எழுச்சியும் கூட்டமைப்பை டக்ளஸ் தேவானந்தாவோடு இணைய வைத்தது.இவ்வளவு நாட்களும் துரோகி ஒட்டுக்குழு என அழைக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா முன்னாள் போராளி தோழர் என வரவேற்கப்பட்டுள்ளார்.இன்று யார் டக்ளஸ் தேவானந்தாவை வசை பாடினார்களோ அவர்களே இன்று புகழும் சூழ்நிலையை டக்ளஸ் உருவாக்கிவிட்டார்.
இன்று டக்ளஸ் தேவானந்தா நல்ல நண்பர்.முன்னாள் போராளி.விசுவாமித்திரர் வசிட்டர் வாயால் பிரம்ம ரிஜி என அழைக்கப்பட்டது போல கூட்டமைப்பால் டக்ளஸ் தேவானந்தா பாராட்டப்படுகிறார்.டக்ளஸ் தேவானந்தா பிரம்ம ரிஜி.முப்பது வருட போராட்டத்தில் டக்ளஸ் பெற்ற மாபெரும் வெற்றி .
டக்ளஸ் காங்கிரசை ஆதரிக்காமல் கூட்டமைப்பை ஆதரிப்பதாக அறிவித்தபோது நானும் ஒரு கணம் திகைத்தேன்.ஆனால் டக்ளஸ் தேவானந்தா புத்திசாலி என நிரூபித்துவிட்டார்.இனி அவரை துரோகி ஒட்டுக்குழு என யாரும அழைக்கமுடியாது.அவரை மட்டுமல்ல ஏனையவர்களையும் அழைக்க முடியாத ஒரு புதிய சூழலை டக்ளஸ் தேவானந்தா உருவாக்கியுள்ளார்.
வரலாறு தானாகவே டக்ளஸ் தேவானந்தாவை விடுதலை செய்துவிட்டது.கறைகளை பூசியவர்களே துடைத்துவிட்டனர்..காலம் பதிலை சொல்ல வைத்தது.
(Vijaya Baskaran)