(சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் சிவப்பரம் பொருளுக்கும் நடந்த சம்பாசணைபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சி (ஈபிடிபி) க்குமிடையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் சம்பாசணை நடந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்தோம். அந்தக் கற்பனையை நீங்களும் படித்தறிக)
சுந்தரமூர்த்தி நாயனாரின் வரலாறு அனை வரும் அறிந்ததே.
திருமண மண்டபத்தில் வைத்து சுந்தரர் தன் அடிமை என்று கூறிய வேதியரைப் பித்தா என்றார் சுந்தரர்.
வந்திருப்பது வேதியர் அல்ல சிவனே என்ற றிந்தபோது சுந்தரர் வேதனையுற்றார். சுவாமி தங்களைப் பித்தா என்று செப்பிவிட்டேனே என்று விம்மி அழுதார்.
சுந்தரரின் பரிதாபம் கண்ட சிவன் அசரீரியாக சுந்தரா! பித்தா! என்ற வாயால் என்னைப் புகழ்ந்து பாடு என்றார்.
இது அன்று நடந்த சம்பவம். இன்று தமிழ் அரசியலில் என்ன நடக்கிறது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழினத்தின் துரோகி என்று தமிழரசுக் கட்சி கூறி வந்தது.
தமிழரசுக் கட்சிக்கு ஆதரவான ஊடகங்கள் அதனை முதன்மைப்படுத்திப் பிரசுரித்தன.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாநகர சபை. சாவகச்சேரி நகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றும் ஆசையில் டக்ளஸ் தேவானந்தாவின் உதவியை தமிழரசுக் கட்சி நாடியது.
இதோ சம்பாசணை (கற்பனை)
சேனாதி: ஐயா! நீங்கள் உதவி செய்தால்; ஆதரவு தந்தால் நாங்கள் யாழ். மாநகர சபையிலும் சாவகச்சேரி நகர சபையி லும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.
தேவா: தமிழரசுக் கட்சியின் தலைவர்களே! நீங்கள் என்னைத் துரோகி என்றீர்கள். என் கட்சிக்காரர்களை ஈபிடிபி என்று வெறுப்பாகப் பேசினீர்கள். இதன் பின் எப்படி உங்களை நாம் ஆதரிக்க முடியும்.
சேனாதி:ஐயனே! மன்னித்தருள்க. காலசூழ் நிலை அப்படியாகச் செய்துவிட்டது. இப் போது அதற்காக நாம் என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்கிறோம்.
தேவா: அப்படியா! துரோகி என்ற வாயால் தோழர் என்று பாடுக.
சேனாதி:ஐயனே! ஒருமுறையல்ல பலமுறை பாடுவோம்.
தோழர் எனும் நாமம் கொண்ட தேவா! நமக்குத் தேவை எனும் போது ஆதரவு தரும் நாதா…
அன்று பித்தா என்ற பிழை போல் இன்று நாம் செய்த பிழை பொறுத்தருளி யாழ். மாநகர சபை முதல்வர் பதவி நமக்கே ஆக தந்திடுக தேவா நின் ஆதரவைத் தந்திடுக நாதா.
தேவா: நல்லம் நல்லம். தந்தோம். தந்தது தெரியாமல் தந்தோம். நம் ஆதரவு உமக்கே என்பது மக்களுக்குப் புரியாமல் தந்தோம். ஆதரவு பெற்றிடுக.
நம் அன்பன் சட்டத்தரணி போட்டியிட்டே உன்னவரை முதல்வர் ஆக்குவார். காப்பார். அருள் தருவார்.
நன்றி – வலம்புரி ஆசிரியர் தலையங்கம்