தமிழகத்தில் காவிரி விவகாரம் பெரிதாகி வரும் நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி வாரியம் அமைக்கும் இறுதி நாளான இன்று பாஜக நிர்வாகிகள் ஊடகங்களில் பதில் அளிப்பதைத் தவிர்த்து வருகின்றனர். தமிழகத்தில் காவிரி பிரச்சினை முக்கிய பிரச்சினையாக மாறி வருகிறது. காவிரிக்கான நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்தது, அதற்கு 6 வார கால அவகாசமும் வழங்கியது.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திட வேண்டும் என்று தமிழகத்தில் பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆண்டாலும் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க குரல் கொடுக்கிறது.
ஆனால் பாஜக தமிழக தலைவர்கள் நிலையோ இதற்கு நேர் மாறாக உள்ளது. ஒருவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பார், ஒருவர் உங்களுக்கு நீர் தானே தேவை, நீர் வேண்டுமானால் என்னிடம் வாருங்கள் காவிரி நீர் கேட்டால் கிடைக்காது அது கர்நாடகாவுக்கு சொந்தம் என்பார்.
என்ன அவர் இப்படி பேசுகிறாரே என்று மாநில தலைவரிடம் கேட்டால் அது அவர் சொந்தக் கருத்து, பிரதமர் மோடி நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீருவார் என்று கூறுவார். இன்னும் 6 வார காலம் இருக்கிறது ஏன் அவசரப்படுகிறீர்கள் என்று ஒரு தலைவர் பேசுவார்.
தொலைக்காட்சி விவாதங்களில் தங்களுக்கு தோன்றும் கருத்துகளை ஆளாளுக்கு வித விதமாகக் கூறுவார்கள். காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நியாயமல்ல என்றெல்லாம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் திடீரென காவிரி மேலாண்மை வாரியம், காவிரி அமைப்பு இரண்டும் ஒன்று தான் என்று பின் வாங்கினார்.
பின்னர் எது வந்தாலும் தமிழகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். மற்ற பாஜக நிர்வாகிகளும் இதே போன்ற கருத்தை கூறிவந்த நிலையில் அவர்களது டெல்லி மேலிடம் காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்கவில்லை. 6 வார காலம் இருக்கையில் இப்போது ஏன் அவசரப்படுகிறீர்கள் என்று கேட்ட பாஜக நிர்வாகிகள் 6 வார கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மத்திய அரசும் ஒன்றும் முடிவெடுக்காததால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
ஒரு சின்ன தகவல் கிடைத்தால் கூட பேசி சமாளிக்கும் திறமை பெற்றவர்கள் மத்திய அரசின் முடிவு கிணற்றில் போட்ட கல்லாக இருப்பதால் ஊடகங்களுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் வெளியில் தலை காட்டாமல் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பலர் தங்களது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டதாகவும், சிலர் வேறு பல காரணங்களைக் கூறி தவிர்ப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தொலைக்காட்சி விவாதங்களுக்கு அழைத்தபோது சொந்தக் காரணங்கள், ஊரில் இல்லை என்பது போன்ற காரணங்களை சொல்லி தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையாக விளங்கும் காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து இங்குள்ள பாஜக தலைவர்கள் கருத்தை அறிய தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், கே.டி.ராகவன் உள்ளிட்டோரை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர்கள் இணைப்பில் வரவில்லை.
இன்று தமிழகத்தின் விவாதப்பொருளே காவிரி மேலாண்மை வாரியம் என்பதால் இதில் என்ன பதில் சொல்வது என்றே அனைவரும் தயங்கி தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.