“ஈ.பி.டி.பி கட்சி ஒட்டுக்குழு என்றும், தமிழ் உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள் என்றும் எம்மீது பொய் குற்றச்சாட்டுக்களை கூறி வீண்பழி சுமத்தி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க எங்களின் ஆதரவை பெற்றுள்ள நிலையில் அப் பொய் குற்றச்சாட்டுக்களில் இருந்து எங்களை விடுவித்துள்ளது” என ஈ.பி.டி.பி கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களான மு.ரெமிடியஸ், வி.குபேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
“ஈ.பி.டி.பி கட்சியும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தான் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது என்பதே வெளிப்படையான உண்மை.
உள்ளுராட்சி மன்றங்களின் சில சபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதுக்கு ஈ.பி.டி.பி கட்சி ஆதரவு வழங்கியதை வைத்து அவர்களுடன் எமது கட்சி கூட்டாட்சி அமைத்துவிட்டது என்று யாரும் என்ன வேண்டாம். ஈ.பி.டி.பி கட்சியானது எப்போதும் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாது. தொடர்ந்தும் அதன் கொள்கையின் வழியிலேயே பயணிக்கும்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஈ.பி.டி.பி மீது வசை பாடுவதே வேலையாக செய்பவர்கள். இதனை எமது கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா பல தடவை கூறியுள்ளார்.
ஈ.பி.டி.பி மீது பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு எமது கட்சியின் ஆதரவினை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
நாமும் தூய்மையான கரங்களை உடையவர்கள் தான் என்ற உண்மை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது” என்றனர்.