“தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள்” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் எம்.ரெமிடியஸ் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இறுதி யுத்தம் வரை சென்று வந்தவன் என கூறிக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் யுத்தம் நடைபெற்றுகொண்டு இருக்கும் போதே இராணுவத்தினரிடம் சரணடைந்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்து விட்டார்.
அவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே ஆனந்தபுரத்தில் இராணுவ சுற்றிவளைப்பு தாக்குதலில் விடுதலைப்புலிகளின் தளபதி கேணல் தீபன் உள்ளிட்ட பல தளபதிகள் மரணித்தனர்.
அதேபோன்று இன்று யுத்த குற்றம் என்று கூறுபவர்கள் தான் ஜெனிவாவில் சென்று ஷரூத் கொமிஷன் என்பதை ரத் கொமிஷன் என உச்சரித்தவர்கள்.
ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி மூலம் அரசியலுக்கு வந்தவர் இன்று தமிழரசு கட்சிகாரன் என கூறுகின்றார். யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சியின் விசுவாசியாக செயற்படும் அவர் வன்னியில் வேறு கதைகள் கூறுகின்றார். வெளிநாட்டில் வேறு கதை கூறுகின்றார்.
கிளிநொச்சி நீரை யாழ்ப்பாணம் கொண்டு செல்ல விடமாட்டேன். என யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர், ஏதோ தான் கிளிநொச்சி மண்ணின் சொந்தக்காரன் போன்று பேசி யாழ்ப்பாண கிளிநொச்சி மக்கள் மத்தியில் மாவட்ட பிரதேச வாதங்களை தோற்றுவிக்க முயல்கின்றார்.
ஆனால் தன்னை ஒரு தமிழ் தேசிய வாதியாக காட்ட முனைக்கின்றார். தமிழ் தேசியத்திற்கு வரைவிலக்கணம் என்ன என்பதே தெரியாது.
எமது கொள்கை எப்போதுமே வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த மாநிலம், மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே. இன்று தமிழ் தேசியம் கதைக்கும் பலர் யுத்த முடிவுக்கு முன்னர் எவ்வாறு தமிழ் தேசியம் பேசினார்கள் தற்போது எவ்வாறு தமிழ் தேசியம் பேசுகின்றார்கள் என்பது புலனாகிறது” என தெரிவித்தார்.