1950களில் தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது அந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக காமராஜர் சென்றிருந்தார். கடும் வெள்ளம். தண்ணீர் சுழித்துச் சுழித்து ஓடுகிறது. அதிகாரிகள் தயங்கி நிற்கிறார்கள். சட்டையைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வேஷ்டியை மடித்து இறுகக் கட்டிக் கொண்டு தண்ணீருக்குள் குதித்து மக்களை நோக்கிச் சென்றாராம் காமராஜர். அப்பொழுது மீடியா வெளிச்சம் இல்லை. பேண்ட்டை சுருட்டிவிட்டால் கூட படம் எடுத்து ‘எங்க ஆளைப் பார்..அடுத்த ஆட்சி எங்களுடையதுதான்’ என்று கறுவும் கலாச்சாரம் இல்லை. ஆனாலும் காமராஜர் தண்ணீருக்குள் இறங்கினார்.
அது நடந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது. காலம் மாறிவிட்டது. மக்கள் மாறிவிட்டார்கள். அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் குறைந்தபட்ச நடவடிக்கையாவது எதிர்பார்ப்பார்கள் அல்லவா? என்ன செய்து கிழித்தார்கள் ஆட்சியாளர்கள் என்று கேள்வி எழுப்புவார்கள் அல்லவா? நேற்று முழுவதுமாக கதறல்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன. ‘பாலத்தின் கீழாக நிற்கிறேன். கையில் குழந்தை இருக்கிறது. தண்ணீர் மட்டம் உயர்கிறது. யாராவது காப்பாற்றுங்கள்’ என்று பதறினார்கள். செல்போன் வேலை செய்யவில்லை. ஃபேஸ்புக் இணைப்பு இருக்கிறது. அந்த எண்ணுக்கு அழைத்தால் எந்த பதிலும் இல்லை. என்ன ஆனார்? எப்படி இருக்கிறார் என்று எதுவும் தெரியவில்லை.
‘முதல் தளத்தில் மூன்று குடும்பங்கள் இருக்கிறோம். தண்ணீர் தரைதளத்தை மூழ்கடித்துவிட்டது. குடிப்பதற்கு வெறும் பத்து லிட்டர் தண்ணீர்தான் இருக்கிறது. எங்களுடன் குழந்தை ஒன்றும் இருக்கிறது’ என்று தகவல் வந்திருந்தது. பெரும்பாலான உதவி எண்கள் வேலை செய்யவில்லை. எந்த செல்போனும் உபயோகத்தில் இல்லை. யாருக்கும் யாருடனும் தொடர்பு இல்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் தண்ணீருக்குள் சிக்கித் தவிக்கிறார்கள். மீட்புக் குழுவினரின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அந்தக் குழுவினரில் தொண்ணூறு சதவீதம் பேர் தன்னார்வத்தில் சேவை செய்ய வந்தவர்கள். அரசு அதிகாரிகள் எங்கே போனார்கள் என்று மக்கள் கேட்பார்களா இல்லையா?
அரசின் கீழ்மட்ட ஊழியர்களைக் குறை சொல்ல முடியாது. மின்வாரியத்தில் லைன்மேனாக வேலை செய்பவர் என்ன செய்ய முடியும்? காவல்துறையின் கான்ஸ்டபிள் என்ன செய்வார்? மேல் மட்ட அதிகாரிகளுக்கு அறிவு வேண்டும். அதிகாரிகளை வழிநடத்த அமைச்சர்களுக்குத் தெரிய வேண்டும். அமைச்சர்களை முதலமைச்சர் கண்காணிக்க வேண்டும். எந்த இடம் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து அந்த இடத்திற்கு ஆர்வலர்களை அனுப்பி வைத்திருக்க வேண்டும். பிரச்சினை மிகுந்த இடங்களில் மீட்பர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்திருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு ஐம்பது பேர் கொண்ட குழுவை அமைத்த புரட்சித்தலைவி ஏன் வாயைத் திறக்கவில்லை? பேரிடரைச் சமாளிப்பதற்காக முப்பது அமைச்சர்கள் தலைமையில் முப்பது குழுக்கள். அதில் கவுன்சிலர்களையும் கார்போரேஷன் அதிகாரிகளையும் உள்ளூர்வாசிகளையும் நியமித்து ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பகுதியைப் பிரித்துக் கொடுத்திருக்க முடியாதா? இடைத்தேர்தலில் தனக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் வாக்கு குறைந்தால் அம்மா தம்மை டம்மியாக்கிவிடுவார் என்று மண்ணைக் கவ்விக் கொண்டு பணி செய்த அமைச்சர்களுக்கு அதே போன்ற எச்சரிக்கையை வழங்கியிருக்க முடியாதா என்ன?
அமைச்சர்கள் வேண்டாம். மேயர் எங்கே போனார்? யார் மைக்கை நீட்டினாலும் பதறியடித்துக் கொண்டு ஓடுகிறார். குறைந்தபட்சம் பேசுங்கள். பிரச்சினை இருக்கிறது. நிலைமையைச் சீராக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று நம்பிக்கையாவது ஊட்டுங்கள். அதைக் கூட ஏன் பேசுவதில்லை? எது உங்களைத் தடுக்கிறது? சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதியிடம் நியூஸ் 7 செய்தியாளர் ஒலிவாங்கியை நீட்டினால் எட்டிக் குதித்து ஓடுகிறார். மேடைகளில் எதிர்கட்சிகளைப் பந்தாடத் தெரிந்தவருக்கு டிவி சானலின் மைக் மீது ஏன் அவ்வளவு பயம்? யாருமே பேசக் கூடாது என்கிற தடையுத்தரவு அமலில் இருக்கும் போலிருக்கிறது.
தகவல்கள் வெளிப்படையாக இருந்தாலே பாதிப் பிரச்சினை குறைந்துவிடும். ஆனால் எதுவுமே வெளிப்படையாக இல்லை. ‘நிலைமை சீராக இருக்கிறது’ என்று கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம ஜெயாவில் செய்தி வாசிக்கிறார்கள். மழைக்கே பொறுக்கவில்லை. நிலையத்திற்குள் புகுந்து காலி செய்துவிட்டது. ஒருபக்கம் நிலைமை சரியாக இருக்கிறது புருடாவிட்டால் மற்றொரு சானலில் சென்னையைக் காணவில்லை என்று அடித்துவிடுகிறார்கள். சென்னையைத் தாண்டியிருக்கும் மக்கள் பரிதவித்துப் போய்விட்டார்கள். இன்னமும் சென்னையில் இருக்கும் தங்களின் உறவுகளைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவமனைகளில் நேற்றுக் காலையிலும் முந்தினநாட்களிலும் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகளின் நிலைமையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. மருத்துவர்கள் அவரவர் வீடுகளில் சிக்கியிருப்பார்கள். உணவுப்பொருட்கள் தீர்ந்துவிட்டன. மருந்து வாங்கக் கூட வெளியே செல்ல முடியாத நிலைமை. நோயாளியுடன் இருப்பவர்களுக்கு கையும் ஓடியிருக்காது காலும் ஓடியிருக்காது. கணவன் ஒரு பக்கமும் மனைவி ஒருபக்கமும் சிக்கித் தவித்தவர்கள், வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பமுடியாத பெற்றோர்கள்- வீட்டில் தனியாகத் தவிக்கும் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பால் வாங்கக் கூட வழியில்லாமல் குழந்தையை வைத்துக் கொண்டு தவித்தவர்கள், உணவுக்கு வழியில்லாமல் வீடுகளில் சிக்கிக் கொண்ட முதியவர்கள், மாத்திரை தீர்ந்து போன நோயாளிகள்- யோசித்துப் பார்த்தால் எவ்வளவு கொடுமை?
கடந்த முறை மழை பெய்து எச்சரிக்கை செய்திருந்தது. அப்பொழுதாவது தமிழக அரசு விழித்திருக்க வேண்டாமா? நனையாமல் வேனில் அமர்ந்து ஒரு வலம் வந்து சென்றால் போதுமா? வண்டிக்குக் கூட குடைபிடித்தார்கள். குடைபிடித்தால் தொலைகிறது. அப்பொழுதே அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். குறைந்தபட்சம் எந்த இடங்களில் அடைப்பு இருக்கிறது என்பதையாவது கவனித்திருக்கலாம். மெட்ரோ பாலம் கட்டுமிடத்தில் இருந்த அடைப்பு அண்ணாசாலையை மூழ்கடித்திருக்கிறது. சென்னை முழுவதையும் ஒரு வாரத்தில் சரி செய்திருக்க முடியாது. ஆனால் முடிந்த அளவு வேலையைச் செய்திருக்கலாம். சில இடங்களிலாவது பிரச்சினைகளைக் குறைத்திருக்க முடியாதா?
குறைந்தபட்சம் ஏரிகளைத் திறந்துவிட்டு கொஞ்சம் கட்டுக்குள் வைத்திருக்கலாம். கடந்த ஒரு வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாகத் திறந்துவிட்டிருக்கலாம். மேலே வானம் கொட்டிக் கொண்டிருக்கிற நேரத்தில் பல்லாயிரம் கன அடி நீரைத் திறந்துவிட்டால் அது எங்கே போகும்? தமிழ்நாட்டில் முக்கால்வாசிப்பேருக்குத் தெரியாத பவானிசாகர் அணையைத் திறக்கும் போது கூட ‘நான் உத்தரவிட்டேன்’ என்று சுயபுராணம் பாடுகிற முதலமைச்சர் சென்னையின் ஏரிகளைத் திறந்துவிடுவது குறித்து ஏன் வாயே திறக்கவில்லை?
வெள்ளநீருக்கு சரியான வடிகால் சரியாக இல்லை என்பதெல்லாம் நீண்டகாலப் பிரச்சினை. இவர்கள் அவர்கள் மீதும் அவர்கள் இவர்கள் மீதும் குற்றம் சுமத்துவார்கள். தொலையட்டும். தற்காலிகமாகவேனும் ஏன் பெரும்பாலான அமைச்சர்களும் அதிகாரிகளும் களத்திற்கு வரவில்லை என்பதுதான் கேள்வி. பயம். மக்கள் சட்டையைப் பிடித்தால் தேர்தல் சமயத்தில் பெயர் நாறி விடும் என்கிற பயம். இல்லையா?
பெரிய மழைதான். யார் இல்லையென்று சொன்னார்கள். ஆனால் ஏன் இவ்வளவு சோப்பலாங்கித்தனமாக ஓர் அரசு இயங்குகிறது என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.
பணி நீட்டிப்புக் கொடுத்து வைத்திருக்கும் ரமணன் இன்னமும் ஒரே பல்லவியைத்தான் பாடிக் கொண்டிருக்கிறார். ‘தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யக் கூடும். சில இடங்களில் லேசானது முதல் மித மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது’. பல இடங்கள் என்றால் எவை? தூத்துக்குடியும் ஒரு இடம்தான். தாம்பரமும் ஒரு இடம்தான். சரி போகட்டும். அடுத்த நான்கைந்து நாட்களுக்கு மழை பெய்யும் என்று அவர் சொல்வதை நம்பி அரசு பாதுகாப்பான இடங்கள் எவை என்பதையாவது அடையாளம் கண்டு வைத்திருக்க வேண்டுமல்லவா? கூவத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிற நேரம் வரைக்கும் அதன் கரைகளில் வாழும் குடிசைவாசிகளுக்கு எந்த பாதுகாப்பும் வழங்கப்பட்டிருக்கவில்லை. மழை கடுமையாக இருக்கப் போகிறது என்கிற எச்சரிக்கையைக் கொடுத்திருந்தால் பாதிப் பேர் தங்களது மனைவி குழந்தைகளையாவது அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்திருப்பார்கள்.
அரசு மிக மெத்தனமாக செயல்படுகிறது என்பதுதான் உண்மை.
இவையெல்லாம் நேரடி பாதிப்புகள். நிறுவனங்கள் இயங்கவில்லை. தலைமைச் செயலகம் இயங்கவில்லை. பல நிறுவனங்களில் தண்ணீர் புகுந்து பல கோடிக்கணக்கான எந்திரங்கள் பழுதடைந்திருக்கின்றன. அரசு அலுவலகங்கள் மூடிக் கிடக்கிறன. வங்கிகள் செயல்படவில்லை. இனி புதுப் புது வைரஸ்களும் பாக்டீரியாக்களும் உருவாக்கவிருக்கும் நோய்கள், குடிநீரில் கலந்திருக்கும் சாக்கடைத் தண்ணீர், துண்டிக்கப்பட்ட மின்சாரக் கம்பிகள், தொலைபேசி இணைப்புகள், வாகனப்பழுதுகள், வீடுகளில் உண்டாகியிருக்கும் பாதிப்புகள் என பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வீணாகப் போயிருக்கிறது. இதற்கெல்லாம் யார் பொறுப்பு? யார் பதில் சொல்லப் போகிறார்கள்? தலைநகருக்கு வந்தால் அரைக்காசும் கால்காசும் சம்பாதித்துவிடலாம் என்று சொந்தங்களையும் ஊரையும் விட்டுவிட்டு வந்தவர்களுக்கு இயற்கை ஒரு அடியைக் கொடுத்திருக்கிறது என்றால் அடி விழுந்தவர்களின் மீது பெரும் பாறாங்கல்லைச் சுமந்து இந்த சோப்பலாங்கி அரசு வைத்திருக்கிறது.