நாபா பிறந்த நாள்….. வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் நடந்த நாள் ? நவம்பர் 19 !

வரலாற்றில் நல்ல மனிதர்களும் நல்ல நிகழ்வுகளும் நடந்த தினங்கள் எம் நினைவில் எப்போதும் இருக்கும். அந்த வகையில் எனக்கு தெரிந்த ஒரு விடயமும், நான் அறிந்த இரண்டு விடயங்களும் என்றும் என் நினைவில் இருக்கும். எனக்கு தெரிந்த விடயம் 1988 நவம்பர் 19ல் நடந்த வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல். அறிந்த விடயங்களில் ஒன்று நாபா பிறந்த தினம் மற்றது அன்னை இந்திரா காந்தி பிறந்த தினம். ஈழ விடுதலை போராட்டத்தில் மறக்க முடியாத நாபா பிறந்த நவம்பர் 19ம் நாளை, மனிதம் பிறந்த நாள் என்பேன்.

சகிப்புத்தன்மை இல்லாத தலைமைகளை அதுவரை கண்ட எனக்கு நாபாவின் நட்பு தோழமை தலைமை, ஒரு வித்தியாசமான அரசியல் கலாச்சார அனுபவத்தை தந்தது. அரசியல் என்றால் எதிர்த்தரப்பை தூற்றல் என்ற நிலையை மாற்றி எதிரி போல் செயல்ப்பட்டவர்களுடனும் தான் கொண்ட கொள்கைக்காய் கைகோர்த்து, சேரன் சோழன் பாண்டியன் முகத்தில் கரி பூசும் செயல் செய்தவர் நாபா. ஆனால் சோரம் போனவர் பிரபாகரனுடன் கூட்டு சேர்ந்து நாபாவை அழித்ததன் மூலம், அப்பாவி மக்கள் பலர் முள்ளிவாய்க்காலில் புதைந்து போனார்கள்.

நாபா என்ற மனித நேயனை கொன்றிராவிட்டால் முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்திராது என்பது என் திடமான முடிவு. உதாரணம் இந்திய அமைதிப்படையுடன் பிரபாகரன் மோதிய போது நாபா எடுத்த முன் முயற்சிகள். பாரிய ஆயுதங்கள் பாவிக்கப் படவில்லை, மக்களுக்கு பாதிப்பில்லை, அமைதிப்படை குறைந்தளவு தாக்குதல் நடவடிக்கை மட்டுமே செய்கிறது என சென்னையில் இருந்து அமிர்தலிங்கம் சொன்னதை நாபா நம்பவில்லை. உண்மை நிலை என்ன என யாழ் சென்று அறிந்து வரும்படி என்னைப் பணித்தார்.

கொழும்பில் இருந்து பயணித் நான் யாழ் சென்ற விதம், அங்கு சந்தித்த மனிதர்கள், நேரில் பார்த்த சம்பவங்கள், அழிவுகள் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். அதனை மீண்டும் எழுதுவதை தவிர்த்து நாபா எடுத்த நடவடிக்கைக்கு வருகிறேன். நான் கூறிய விடயங்களை கேட்ட நாபாவின் கண் கலங்கியது. மக்களை உண்மையாக நேசிப்பவனுக்கு மட்டுமே அவர்கள் படும் துன்பம் அறிந்ததும் மனம் பதைத்து கண் கலங்கும். அதை நாபாவிடம் நேரடியாக கண்டவன் நான்.

ஒரு நிமிட மௌனத்தின் பின் டெல்லி போய் றோ அதிகாரி சந்திரனை சந்தித்து நடந்ததை சொல்லுங்கள் என்றார். டெல்லியில் கேதீஸ் என்னை றோ சந்திரனை சந்திக்க வைத்தார். எல்லாவற்றையும் கேட்ட அவரிடம் நாபாவின் மனவருத்ததையும் தெரிவித்தேன். நாபாவை நன்கு புரிந்து வைத்திருந்த அவர் நாபாவிடம் சொல்லுங்கள் நிலைமைகள் மாறும் என்று சொன்னவர் அதன்படி செய்தார். சி ஆர் பி பெண்கள் சோதனை சாவடியில் கடமையில் ஈடுபட்டனர்.

தோழர்கள் பொது மக்களை காக்க, அமைதிப் படையுடன் இணைந்து செயல்பட்டனர். அதனால் பல அப்பாவிகள் காப்பாற்றப் பட்டார்கள். துரோகி என்ற பட்டத்தை தாங்குவது தன் இனத்தை காக்க உதவும் என்றால் அதையிட்டு கவலைப்படாத முதல் மனிதன் நாபா. மக்களை பலிக்கடாக்கள் ஆக்கி மண்ணை மீட்க அவர் போராட்டத்தில் இணையவில்லை. தன் தோழர்களை இணைக்கவும் இல்லை. வழி நடத்தவும் இல்லை.

மக்களுக்காகவே போராட்டம்.. மக்கள் இல்லா மண்ணுக்காக அல்ல என எப்போதும் சொல்லும் தலைவன் மனித நேயன் நாபா. அவர் பலி கொடுக்கப்பட்டிரா விட்டால், . விடுதலை என்ற பெயரில் நந்திக்கடல் வரை நடந்த துன்பியல் நிகழ்வுகள் நடந்திராது. எம் மக்களும் இன்றும் அகதி முகாங்களில் அல்லல்படும் நிலைமையும் ஏற்பட்டிராது.

எப்பவோ முடிந்த காரியம் என யோகர் சுவாமிகள் சொன்னது போல் சகோதரப் படுகொலை ஆரம்பித்த 1986ல் எமது ஈழக் கனவும் கலைந்து போனது. சமாதான ஒப்பந்தம் தந்த இணைந்த மாகாணத்தில் எம் மக்கள் நிம்மதியாக வாழும் வாழ்வைக் கூட பிரபாகரன் அனுமதிக்கவில்லை. அமைதிப் படையுடன் மோதலை ஆரம்பித்து அதுவரை கண்டிராத அழிவை எம் மண்ணில் பரவலாக ஆரம்பித்து வைத்தார்.

மக்களைத்தான் நான் நேசிக்கிறேன் மக்கள் இல்லா மண்ணை அல்ல என்ற மனித நேயன் நாபா நிலைமைகளை புரிந்து கொண்டு எடுத்த முடிவில் உருவானது தான் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை. மாகாண சபை தேர்தலை நவம்பர் 19 ல் நடத்தும்படி வரதன் சிபார்சு செய்த போது அதன் முக்கியத்துவம் எனக்கு தெரியவில்லை.

பின்பு வரதன் தேர்தல்கள் ஆணையாளர் சந்திரானந்த டி சில்வாவிடம் தான் ஏன் அந்த தினத்தை தெரிவு செய்தேன் என் கூறிய போது தான் தெரிந்தது அது நாபாவின் பிறந்த தினம் மட்டுமல்ல, அன்னை இந்திரா காந்தி அவர்களும் பிறந்த தினம் என்று. ஆரம்ப முதலே நாபாவுடன் அரசியலில் இணைந்திருந்த நீண்ட நாள் நட்பு தான் வரதனின் அந்த செயல்.

மாகாண சபை தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி பங்கேற்க மறுத்ததால் தான் ஏனைய சக போராளி இயக்கங்களுடன் இணைந்து போட்டியிட நாபா முடிவெடுத்தார். கிளிநொச்சி மான்னார் முல்லைத்தீவு வேட்பாளர்களை அங்கு செயல்ப்பட்ட டெலோ ஈ.என்.டி.எல்.எப் உடன் பகிர்ந்து கொள்ளவே நாபா முன் மொழிந்தார். டெலோ கடைசி நேரத்தில் எதோ காரணத்தால் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வரவில்லை.

இருந்தபோதும் தனது கட்சிக்கு கிடைத்த ஆசனங்களை டெலோ வுடன் பகிரவிரும்பி அவர்களை அழைத்தபோது மாகாணசபை பேரவை தலைவர் பதவி தந்தால் மட்டுமே நாம் இணைவோம் என அப்போதைய டெலோ பேச்சாளர் சட்டத்தரணி சிறிகாந்தா அவர்கள் திட்டவட்டமாக கூறியதால் ஏற்பட்ட முரண்பாட்டால் டெலோ வடக்கு கிழக்கு மாகாண சபையில் இடம்பெறவில்லை.

ஒற்றுமையின் விடாகண்டனான நாபா 1989ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி தலைமையின் கீழ் போட்டியிட முடிவெடுத்து அதில் ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.என்.டி.எல்.எப் மட்டுமல்ல டெலோ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியையும் இணைத்து ஒற்றுமை பேணினார். அதனால் யாழில் கம்யுனிஸ்ட் கட்சி நவரத்தினம் மட்டக்களப்பில் டெலோ ஜனா அம்பாறையில் டெலோ திவ்வியநாதன் பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர்.

தம்மால் எதையும் சாதிக்க முடியாமல் போன ஆதங்கத்தால் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு அதை சரியாக பயன்படுத்தவில்லை என கூறுபவர்கள், அன்று இருந்த சூழ்நிலையை மறைத்து வீண் பழி சுமத்துகின்றனர். அன்று அந்த சபையை உருவாக்க நாபா துணிந்து முடிவெடுத்து வரதனை முதல்வராக்க, அவர் செயலாளர்கள் ஆலோசனைப்படி செயல்பட்டதால் தான் இன்று எதிர்க் கட்சியிலாவது அமர வட மாகாண சபை இருக்கிறது என்ற உண்மையையும் அவர்கள் ஏற்கவேண்டும்.

பிரபாகரனுக்கு பயந்து அமிர்தலிங்கம் ஒதுங்கினார். மகிந்தவை மீற முடியாது இவர்கள் பிரிப்பின் போது மௌனம் காத்தனர். மக்கள் நலனுக்காய் துணிந்து செயல்ப்பட்ட நாபா மக்களை பலிகொடுக்க கூடாது என்று தான் தன் தோழர்களை களம் இறக்கி அவர்களின் காப்பரணாய் செயல்ப்பட்டார். பிரேமதாசாவிடம் ஆயுதம் வாங்கிய பிரபாகரன் அவரிடம் வைத்த கோரிக்கை வடக்கு கிழக்கு மாகாண சபையை கலைக்க வேண்டும் என்பதே.

தனது இருப்புக்கு ஆபத்து என்பதால் தான் பிரபாகரன் அதனைக் கலைக்க சொன்னார். பிரமதாசாவின் அனுசரணையில் அரசியல் ஆரம்பித்தவர்களால் ஒரு இடைக்கால நிர்வாக சபையை கூட அமைக்க முடியவில்லை. 25 வருடங்கள் இணைந்திருந்த மாகாண காப்பாற்ற முடியாமல், அது துண்டாடப்படுவதை தடுக்க முடியாமல் தாமும் இருந்ததை மறந்து, இன்று புரளி பேசுபவர்கள் அறியமாட்டார் அதை உருவாக்கும் போது ஏற்பட்ட வலி.

மக்களின் உயிர்ப்பலி சொத்து அழிப்புகளை தடுப்பதற்காக தம்மை களப்பலி ஆக்கி, துரோகிகள் என்ற பழி சுமந்து இரவு பகலாய் ஊருக்குள் பிரபாகரன் ஊடுருவாமல் இருக்க காவல் காத்து அமைத்த சபையை கொச்சையாய் பேசும் இவர்கள் தாமும் முயன்று பார்த்து இயலாமல் தோற்றுப் போனவர்கள் தான். அடுத்தவரை பழிக்கும் முன் புதிதாய் தாம் உருவாக்கிய ஒன்றையாவது அடையாளம் காட்ட முடியாத இவர்கள் காக்கையின் கூட்டில் முட்டையிடும் குயில்கள்.

கசப்பானது என்றாலும் நோய் எதிர்ப்பு மருந்தை பருகியே ஆகவேண்டும். எமக்கு உவப்பானதாக இல்லாவிட்டலும் எம் மக்களுக்கு கிடைக்க கூடிய நன்மைகளை படிப்படியாக கிடைக்க செய்ய கூடிய ஆரம்ப படியாகவே, குறைப்பிரசவ குழந்தையை கூட காப்பாற்ற முனையும் வைத்தியர் போல செயல்ப்பட வரதனை நாபா முதல்வர் ஆக்கினார்.

செயலாளர்களின் ஆலோசனையில் குழந்தை ஆரோக்கியமாக வளர தொடங்கும் போது தானே பிரபாகரன் பிரேமதாசா மூலம் குழந்தையின் பாலில் நஞ்சைக் கலந்தார்.

பஞ்சதந்திரிகளான அந்த பத்து செயலாளரும் பல இடர்களுக்கும் முகம் கொடுத்து கருமமே கண்ணாய் செய்த சேவை பிரபாகரனின் இருப்புக்கு ஊறு விளைவித்தது என்பதால் தான், அவர்கள் எவரையும் மாகாண சேவையில் பிரபாகரன் தொடரவிடவில்லை. அதுவரை அரசியல்வாதிகளின் சொல்ப்படி நடந்த செயலாளர்கள் முதல் முறையாக முதல்வரின் கீழ் சுதந்திரமாக செயல்பட்டது, நாபாவின் மனிதத் தன்மையால் கிடைத்த பலன்.

தலைவன் என்றால் சலாம் எதிர்பார்ப்பவர் மத்தியில் மக்களுக்கு நல்லது செய்ய யாருக்கும் தலைகுனிய தேவையில்லை என்பதை, அதிகாரிகளுக்கு தன் செயல்பாட்டால் நிரூபித்தவர் நாபா. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மாகாண நிர்வாகத்தில் தலையிடாது,, நிர்வாகிகளை தம் வேலைகளை சுதந்திரமாக செய்ய வழி சமைத்தவர் நாபா. ஒரு புதிய நிர்வாக கலாச்சாரத்தை அறிமுகம் செய்த தலைவனாக நாபாவை தவிர வேறு எவரையும், நான் இன்றுவரை காணவில்லை.

அமைதிப்படை வெளியேற்றத்தின் போது, பின் நடக்கும் விபரீதத்தை முன் கூட்டியே அனுமானித்து மூன்று கப்பல்களில் ஆயிரக் கணக்கானவர்களை உயிர் வாழ இந்தியா ஏற்றி சென்றதும் நாபாவின் மனிதனேய செயல்பாடே. அவர் மட்டும் துரோகத்தால் பலி கொடுக்கப்படாமல் இருந்திருந்தால் 2009ல் நடந்த பேரழிவு தடுக்கப்பட்டிருக்கும் என்பதற்கு அது ஒரு முன்னுதாரணம்.

அன்று ஆயிரக் கணக்கானவரை பிரபாகரனிடம் இருந்து காப்பாற்றியவர் லட்சக்கணக்கான மக்களை இறுதிப் போரில் சிக்காமல் தவிர்க்கும் மார்கத்துக்கு நிச்சயம் முயன்றிருப்பார். இந்திய மத்திய அரசிடம்மும், றோ அதிகாரிகளிடமும் இருந்த அவர் மீதான மதிப்பும், அவர் பற்றிய அவர்களின் கணிப்பும் அவரை அந்த செயலை சாதிக்க உதவி இருக்கும்.

இந்தியாவின் கரிசனை மற்றும் அனுசரணை இன்றி எம் மக்களின் பிரச்சனை தீராது என்பது நாபவுக்கு தெரியும். அதே வேளை இந்தியா தனது பூகோள அரசியலை மையப் படுத்தியே எம் பிரச்னையை கையாள்கின்றது என்பதும் அவருக்கு புரியும். அதனால் தான் அவர் இறுதி வரை டெல்லியில் தங்கி முயற்சியை தொடர முயல, சதிகாரர் அவரை சென்னைக்கு அழைத்து பிரபாகரனுக்கு பலி கொடுத்தனர்.

ஒன்றை மட்டும் உறுதியாக சொல்வேன் அன்று அந்த சபையை ஐந்து வருடங்கள் தொடர்ந்து செயல்ப்பட அனுமதித்திருந்தால் இன்று ஐநா வரை அலறி அபயக்கரம் நீட்ட வேண்டிய நிலை ஏற்பட்டிராது. முழுமை பெற இருந்த சபையை குழப்பி பகிரப்பட்டிருந்த அதிகாரங்களையும் பறிகொடுத்து இணைந்த சபையை இரண்டாக்கி அடைந்த பலன் என்ன என பிரபாகரனிடம் கேட்க அவர் உயிரோடு இல்லை.

ஏனையவர்களை கேட்பதில் ஒரு பயனும் இல்லை. ஏனென்றால் குயில்களுக்கு முட்டையிட மட்டும் தான் தெரியும். கூடு கட்டி அடைகாக்க தெரியாது. அதனால் ஒன்றையும் முழுமையாக செய்ய முடியாததால், காகங்களின் கூடுகள் மாறும் போது அந்த கூட்டை தேடி தாமும் செல்வதே இயல்பாய் போகும். கலைப்போ பிரிப்போ தங்கள் இருப்பை மட்டும் பார்துக்கொள்ளும். அப்படி என்றால் அன்று அவர்கள் கூறிய மக்கள் விடுதலைப் போராட்டம்? அது எப்பவோ முடிந்த காரியம்.

தமிழர் விடுதலை கூட்டணி கோலோச்சிய காலத்தில் அதற்கு சமபலம் கொண்ட மே தின கூட்டத்தை யாழ் முற்றவெளியில் நடத்தியது நாபாவின் தலைமை. போராட்ட இயக்கத்தை அரசியல் கட்சியாய் முதலில் பதிவு செய்தது நாபாவின் தலைமை. இயக்கங்களை ஒரு அணியில் இணைக்க முன் முயற்சி எடுத்தது நாபாவின் தலைமை. இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை அமைத்ததும் நாபாவின் தலைமையே.

ஈழத் தமிழர் வரலாற்றில் எத்தனையோ கறை படிந்த நிகழ்வுகள் நடந்துள்ளன. அவற்றில் படு மோசமானது நம்பிக்கெட்ட நாபாவின் கொலை. மகா கவி பாரதி, மனித நேயன் நாபா இருவரும் இந்த உலகில் வாழ்ந்தது 39 ஆண்டுகள் மட்டுமே. நல்லதோர் வீணை செய்ய முற்பட்டவர்களை எம்மவரே அவர்களின் அருமை தெரியாமல் தொலைத்து விட்டனர்.
1978ல் மலர்ந்த 1990ல் இழந்த எம் 12 வருட உறவில் நாபாவின் நட்பை தோழமையை தலைமையை மறக்க முடியவில்லை. என்றும் என் நினைவில் நவம்பர் 19 மனிதம் பிறந்த நாள். ஜூன் 19 மனிதம் பலி கொடுக்கப்பட்ட நாள். மனிதம் பிறந்த நாள் மக்களுக்கும், மனிதம் பலி கொடுக்கப்பட்ட நாள் மரணித்த அனைத்து விடுதலைப் போராளிகளுக்கும் சமர்ப்பணமாகட்டும்.

நண்பா! தோழர்கள் நிறைந்த உன் தோப்பில் நான் என்றும் ஒற்றைப் பனை மரமாகவே நின்றேன், உன்னை சந்தித்து நண்பனாய்! தோழனாய்! தலைவனாய்! உன்னுடன் உறவு கொண்ட அந்த இனிய நாட்களின் நினைவுகளுடன் இன்றும் வாழ்கிறேன். உன் மரணம் எதிரிகளால் அல்ல துரோகிகளால் நிகழ்ந்தது என்பது றோ அதிகாரி சொல்லும் வரை எனக்கு தெரியாது.

உன் இறப்புக்கு முன் இடம் மாற்றப்பட்ட நான்கு AK 47 இயந்திர துப்பாக்கிகள் அறியும் பணம் தின்னிகள் உன்னை பிணமாக்கி பார்க்கத்தான் தம்மை இடம் மாற்றினார்கள் என்பதை. ஸ்டாலின் அண்ணாவால் கூட முடியவில்லை துரோகிகளை அம்பலப்படுத்த. மௌனமாய் என் முன்னால் அவரால் அழ மட்டுமே முடிந்தது. பணம் உன்னை பலி கொண்ட நாள், தோழமையும் குழி தோண்டி புதைக்கப்பட்ட நாள் என்பேன்.

குறிஞ்சி மலர் போல் பூத்த உன் உறவு மீண்டும் பூக்காது என்ற நினைப்பே என் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்துகிறது. என்னை ஏன் சந்தித்தாய்? என்னோடு ஏன் பழகினாய்? என்னை விட்டு ஏன் பிரிந்தாய்? என எண்ணும் போதெல்லாம் இதயத் துடிப்பு என் காதில் கேட்கிறது. தனி நபர் வழிபாடு எனக்கு என்றுமே பிடிக்காத ஒன்று. இருந்தும் உன்னைப் போற்றுகிறேன் மனிதத்தை நீ நேசித்ததால்.

நன்றி மறவா நாய்களும், தந்திர நரிகளும், பிணம் தின்னும் கழுகுகளும், கூலிக்கு மாரடிக்கும் கூட்டமும் நிறைந்த சமூகத்தில் மாற்றத்தை வேண்டி மனிதம் போற்றி போராடும் நல்லவனாய் நீ இருந்திருக்கா விட்டால், இன்றும் மனிதத்தை பலி கொடுத்து அதன் மூலம் பணவசதி பின் பதவி பெற்றவர் போல் நீயும் உயிரோடு இருந்திருப்பாய்.

சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்து வரும் பீனிக்ஸ் பறவை போல் நீயும் வராதது எனக்கு மன ஆறுதல். காரணம் தம்மை நம்பி வந்தவர்களை கூட தமது இருப்புக்காக, பதவிக்காக பலி கொடுக்கும் துரியோதனரும், சகுனிகளும் நடத்தும் குருசேத்திர யுத்தத்தில் ஒற்றுமைக்காய் சிலுவை சுமக்க நீ சம்மதிப்பாய். ஆனால் விளைவுகளை பார்க்கும் திராணி எனக்கு இல்லை. அதனால் நீ சென்ற இடத்திலேயே இருந்து விடு. உனக்கு என்றும்

என் இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா ! தோழா ! தலைவா !

-ராம்-