2002 பேச்சுவார்த்தைக்குப் பின் புலிகள் இயக்கத்தில் சலசலப்பு வந்தது.
ஆனையிறவின் மகத்தான வெற்றிக்குப் பின்னும் புலிகள் யுத்தத்தை தொடரவில்லை. காரணம் பற்றாக்குறை.
யாழ்ப்பாணத்தார் வசதியானவர்கள் என்பதால் புலிகளுக்கு கப்பம் கட்டிவிட்டு ஐரோப்பா , கனடா என தப்ப, புலிகளின் ஆள்திரட்டல் குறி வறுமையான கிழக்குப் பக்கம் பதிந்தது.
இந்நிலையில் நார்வே வேறு பேசிக்கொண்டிருந்தது, இம்முறை புலிகள் முடிவிற்கு வந்தே தீரவேண்டும் என கட்டளை இட்டன மேற்குலக நாடுகள்.
பிரபாகரனோ நார்வேக்கு போக்கு காட்டிவிட்டு ஆட்களை திரட்டி யுத்தம் செய்ய முயன்றார், நார்வேயினை விரட்டிவிட்டு இந்தியா சமரசம் பேசவரவேண்டும் என்றார்.
இனி புலிகள் யுத்தம் தொடர்வார்கள் என்றால் மிக கேவலமான தோல்வியினை சந்திர்ப்பார்கள் என்ற இலங்கைக்கான அமெரிக்க தூதர் எச்சரித்தும் புலிகள் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில்தான் நார்வேயில் நடந்த பேச்சுவார்த்தையில் சமாதானத்தை பரிசீலிப்போம், நல்ல தீர்வு ஏற்பட்டால் ஆயுதம் தொடமாட்டோம் என முடிவு சொல்லி வந்தனர் பாலசிங்கமும், கருணாவும்.
உலகம் புரியாத பிரபாகரனுக்கு இது பொறுக்கவில்லை, போராட்டத்தை விற்றுவிட்டார்கள் என குதித்த அவர் பாலசிங்கத்தையே விரட்டினார், நார்வே தூதர் எரிக் சோல்கிம்மிடம் எதையும் புரியும் மனநிலையில் பிரபாகரன் இல்லை, இனி லட்சகணக்கான மக்கள் சாகும் என சொல்லிவிட்டு விடைபெற்றார்.
கருணாவின் நிலை சிக்கல், காரணம் கிழக்கு மாகாணம் அவன் கட்டுப்பாட்டில் இருந்தது. கருணா அமைதிப்படை காலத்தில் பிரபாகரனை காத்தது முதல், ஆனையிறவு வரை அபாரமாக சண்டையிட்டவன்.
பிரபாகரனின் வலதுகை என்ற முறையில் அவன் தைரியமாக சொன்னான், “இனி யுத்தம் தொடர்வது சாத்தியமில்லை, இந்தியா வரவே வராது. இலங்கைக்கு உலகமே உதவுகின்றது, நமக்கோ யாருமில்லை. தொடர்ந்து சண்டையிட்டால் அழிவே தவிர வேறு ஒன்றுமில்லை”.
அவ்வளவுதான் பிரபாகரனின் பதில் சீறியது, “மாத்தையா மாதிரியே நீயும் பேசுகின்றாயா?”,
யோசிப்போம் என சொன்னேன் என பதிலளித்த கருணா அதன் பின் சென்றுவிட்டான்.
ஆனால் அந்த பிரபாகரனின் வார்த்தை அவனை உறங்கவிடவில்லை, மாத்தையா போல என்றால் என்ன அர்த்தம்?
மாத்தையா கருணா போல பிரபாகரன் வலதுகை, சுத்தமான வீரன். ஆனால் அமைதிப்படை காலத்திற்குப் பின், ராஜிவ் கொலைக்கு பின் அவன் போரை தொடர விரும்பவில்லை, சமாதனமாய் செல்ல ஆசைப்பட்டான்.
இது இந்திய ராவுடன் மாத்தையா தொடர்பு என திரிக்கப்பட்டு, பிரபாகரனை கொல்ல மாத்தையா சதி என சொல்லப்பட்டு மாத்தையா பிரபாகரனால் கொல்லப்பட்டான்.
மாத்தையா பிரிவு போராளிகள் 700 பேர் புலிகளால் கொல்லப்பட்டனர்.
இதனை நேரில் இருந்து பார்த்தவன் கருணா என்பதால் பிரபாகரன் சொன்னதற்கு என்ன அர்த்தம் என்பது அவனுக்குப் புரிந்தது.
கீழ்மட்ட தலமைகளுக்கு உறுதியாக சொன்னான், யாழ்ப்பாணத்தான் எல்லாம் ஐரோப்பா சென்று வாழ, கிழக்குமாவட்ட நாங்கள் மட்டும் போரில் சாகவேண்டுமா? ஆள் எல்லாம் திரட்டமுடியாது, ஆனதை பாருங்கள்.
இங்கோ பிரபாகரனுக்கு சிக்கல். அவன் தான் ஒழிந்தான், அந்த படைகள் முக்கியம். கிழக்கு அணி உடனே வரவேண்டும் என கட்டளையிட்டார்.
அவர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம், பலர் எங்கோ சென்றார்கள், உண்மையான போராளிகள் குழம்பி நின்றார்கள்.
பிரபாகரனின் உத்தரவு எல்லோரும் கிளம்புங்கள் என கட்டளை இட்டனர். ஆனால் போராளிகள் கருணா உத்தரவும் வேண்டும் என்றனர். உடனே புலிகள் முடிவு செய்தனர் நீங்கள் எல்லாம் துரோகிகள், கருணா விசுவாசிகள்.
ஆம் மாத்தையாவோடு கிட்டதட்ட 700 பேர் கொல்லபட்ட கொடூரம் மறுபடியும் அரங்கேறியது.
வெறுகல் என்பது கிழக்கில் ஓடும் ஆறு, அங்கே கருணா தரப்பு போராளிகளுக்கும் புலிகளுக்கும் மோதியது. சிங்களனை எதிர்க்க கிளம்பியவர்கள் தங்களுக்குள் மோதினர்.
புலிகளுக்கோ மாத்தையா விசுவாசிகள் போல இவர்கள் கருணா விசுவாசிகள் , போதும் இவர்கள் சாகட்டும் என முடிவெடுத்தனர்.
தண்டனை எனும் பெயரில் அந்த வெறுகல் படுகொலை அரங்கேறிற்று. கிட்டதட்ட 500 போராளிகள் கொல்லபட்டனர்.
“அண்ணா, நாங்களும் போராட வந்தவர்கள், சகோதர தமிழர்கள் எங்களை கொல்லாதீர்கள்..” என கண்ணீரோடு நின்ற அவர்களை பிரபாகரன் உத்தரவின் பேரில் கொடூரமாக கொன்றவர்கள் புலிகள்.
தன் படைப்பிரிவு தன் கண்முன்னாலே கொல்லப்படுவதை கண்ட கருணாவிற்கு வேறுவழி இல்லை, மாத்தையா போல என்பதன் அர்த்தம் அவன் கண்முன் தெரிய ஆரம்பித்தது.
என் படைபிரிவினை கலைக்கின்றேன். இனி நான் போராளி அல்ல என சொல்லிவிட்டு தன் உயிரை பாதுகாக்கத் தப்பினான். இந்தியா அவனை சந்தேக கண்ணோடு நோக்கிவிட்டு நீ திருந்தியது உண்மை என்றால் சிங்களன் பக்கம் போ என சொல்லிவிட்டு நகர்ந்தது.
கோத்தபாயா அவனை அரவணைத்து கொண்டான்.
மாத்தையா சொல்லி கேட்காமல் அவனை 700 போராளிகளோடு விசாரணை என சொல்லி கொன்ற பிரபாகரனுக்கு கருணாவினை அப்படி கொல்லமுடியவில்லை.
மாத்தையாவினை கொன்ற பாவம் பின்னாளில் கருணா மூலம் பிரபாகரனை பழிவாங்கிற்று.
அடுத்து நடந்த யுத்தத்தில் கிழக்கு மாகாண போராளிகள் இல்லை, கருணா இல்லை. விளைவு படு மோசமான வீழ்ச்சியினை சந்தித்து புலிகள் இயக்கம் அழிந்தும் போயிற்று.
ஜப்பான் முதல் அமெரிக்கா வரை பரந்த இவ்வுலகில் புலிகளுக்கு ஆதரவாக ஒரு நாடும் வரவில்லை என்றால் காரணம் இம்மாதிரி விஷயங்கள்தான்.
இதையெல்லாம் இங்கு பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள் சொல்லமாட்டார்கள், அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போல் கம்மென்று இருப்பார்கள்.
மிகக் கொடுமையான நாள் அந்த ஏப்ரல் 10.
ஈழம் அமைவதை யார் கெடுத்தார் என்றால் சாட்சாத் புலிகள்தான், ஒருவேளை அது அமைந்தால் கூட சிரியா போல் ஆகியிருக்குமே அன்றி அமைதி வந்தே இருக்காது.
புலிகளின் தலமை எவ்வளவு கொடூரமான ரத்தவெறி பிடித்தது என்பது டெலோ ஒழிப்பு, பத்மநாபா படுகொலை, மாத்தையா கொலை, அமிர்ந்தலிங்கம் கொலை என வரலாறு எங்கும் காணக் கிடக்கின்றது.
இதெல்லாம் புலிகள் தமிழரை கொன்ற கணக்கு, ராஜிவ் கொலை, அமைதிபடை பலி, சிங்கள பலி எல்லாம் தனிக் கணக்கு.
இப்படி கொல்வது மட்டுமே கொள்கை என செயல்படுத்திய இயக்கம் எப்படி உருப்படும் ?
அந்த புலிகளிடம் சிக்கிய கிழக்கு மாகாண போராளிகள் 500 பேர் வெறுகல் ஆற்றுக் கரையில் கொடூரமாக கொல்லபட்ட நாள் இன்று.
இதே ஏப்ரல் 10ம் தேதி, 2004ல் அக்கொடுமை நடந்தது.
இப்படி எல்லோரையும் கொன்று தங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்து இறுதியில் அழிந்தே போனது புலிகள் இயக்கம்.
ஆனால் இங்கிருப்பவன் கலைஞர் கெடுத்தார், காங்கிரஸ் கெடுத்தது என சொல்லிகொண்டே இருப்பான்.
அந்த வெறுகல் ஆற்றங்கரையில் புலிகளால் கொல்லபட்ட அந்த தமிழ்போராளிகளுக்கு வீரவணக்கம் !
Stanley Rajan