ஈழத்தமிழர்களின் எதிர்கால இலட்சியங்கள் என்று பட்டியல்படுத்தப்பட்ட தொழில்களில் இன்று முதலிடத்திலிருப்பது அரசியல்வாதியாவதுதான். நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் அதற்கு மிகப்பெரிய சாட்சி. அதற்கு அடுத்த இடத்திலிருப்பது கவிஞராகுவது. அவசரப்பட்டு மேசையை குத்திக்கொண்டு எழும்பிவிடாதீர்கள். உட்காருங்கள். எனக்கும் அதே சந்தேகம்தான். கடந்த உள்ளுராட்சி தேர்தல் வரைக்கும் நானும்கூட கவித்தொழில்தான் முதலிடத்திலிருந்தது என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால், வேட்பாளர்கள் அனைவரும் இணைந்து புலவர்களை வென்றுவிட்டார்கள் என்பது தற்போதைய நிலைவரம்.
இவ்வாறு இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள கவிதையை மீண்டும் முதலாம் இடத்துக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் உலகளாவிய ரீதியில் வகை தொகையின்றி மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்பது நீங்கள் யாவரும் அறிந்ததே! சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆயிரம் கவிஞர்களின் நூல் வெளியீடெல்லாம் இந்த முயற்சியின் பாதையில் எங்கள் வீரத்தோழர்கள் தொடை தட்டி களமாடிய முக்கியமான வரலாற்று நிகழ்வுதான்.
இப்படியான கவிதை நிகழ்வொன்று ஆஸ்திரேலியாவிலும் வந்து கதவை தட்டி எழுப்பும் என்று நாங்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், முருகபூபதி ஐயா தொலைபேசியில் அழைத்தார். ஆஸ்திரேலிய கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் “கவிதா மண்டலம்” – நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்றார்.
“என்ன மண்டலம்” என்று திரும்பவும் கேட்டேன்.
அவர் “கவிதா” – என்றார்.
இதைவிட எமக்கொரு அழைப்பு தேவையா என்ன?
அடுத்த கேள்வியாக – “நிகழ்வில் நீங்களும் ஒரு கவிதை படிக்கவேண்டும்” – என்று பூபதி ஐயா கேட்டார். அந்த வசனத்தை கேட்ட மாத்திரத்திலேயே சிரித்துக்கொண்டு மீசையை முறுக்கினேன். அடுத்த செக்கனே, “மரணத்துள் வாழ்வோம் தொகுதியிலிருந்து செழியன் எழுதிய கவிதையை நீங்கள் படியுங்கள்” – என்றார். மீசையை முறுக்கிய விரல்கள் அப்படியே இறங்கி தாடியை தடவிக்கொண்டன.
கடந்த சனிக்கிழமை மூன்று மணிக்கு மெல்பேர்னில் நடைபெற்ற இந்த நிகழ்வு மண்டபத்துக்கு வழக்கம்போல 3.30 மணிக்கு போயிருந்தேன். உள்ளே கேட்ட சத்தத்தினால் கொஞ்சம் பதற்றமடைந்து “நாம் தமிழர்” கட்சியின் மெல்பேர்ன் கிளை கூட்டத்துக்கு வந்துவிட்டோமா என்ற சந்தேகத்தடன் மண்டபத்தின் கதவை 30 பாகையில் திறந்து, தலையை மாத்திரம் உள்ளே நுழைத்து பார்த்தேன். சகலதும் தெரிந்த முகங்கள். கௌரி சங்கர் அண்ணன் அரங்கின் முன்நின்றுகொண்டு சபையோரை பார்த்து கேளாத கேள்வியெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்.
“குட்டி நாட்டில் வாழப்பயந்து முட்டைக்குள் ஓடி ஒழித்தேன்.
முருகா! முட்டைக்குள்ளும் முன்னூறு இயக்கங்கள்” –
– என்று முன் வரிசையிலிருந்து யாரையோ பார்த்து முழுசிக்கொண்டு நடந்துபோனார். பிறகு பின்னுக்கு போனார். பிறகு வலப்பக்கம் – இடப்பக்கம் என்று கைகளை ஆட்டி ஆட்டி கலவரம் செய்துகொண்டே தனது கவிதையை படிக்கிறார்.
சபையின் ஓரமாக நுனிக்காலில் நடந்து சென்று ஒரு கதிரையை பிடித்து உட்காரும்போது –
“அட ராமா, என தலையலடித்தேன்
உடைந்தது முட்டை மட்டுமல்ல
எமது முப்பாட்டன் கால கனவும்தான்” – என்று உச்ச குரலில் ஒரு போடு போட்டார். பயத்தில் தொப்பென்று கதிரையில் இருந்துவிட்டேன்.
கவிதை வாசிப்பு தொடர்ந்தது.
அடுத்து வந்த திருமதி கலாதேவி பாலஷண்முகன் அவர்கள் ஈழத்தின் மூத்த கவிஞர்கள் மஹாகவி உருத்திரமூர்த்தி சு. வில்வரத்தினம் ஆகியோரின் கவிதைகளையும் இளங்கோ அவர்கள் தளையசிங்கத்தின் கவிதை அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டு ஒரளவுக்கு ஈழத்தமிழ் கவியுலகின் நிலைபேறுகளை போற்றியமர்ந்தார்கள். குவின்ஸ்லாந்து மாநிலத்தில் சில வருடங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்ட கவிஞர் சண்முகநாதன் வாசுதேவனின் கவிதையை லெ. முருகபூபதியும் தமிழ்நாட்டில் மறைந்த கவிஞர் வடிவேல் ஹோசிமின்னின் கவிதையை கருப்பையா ராஜாவும் சமர்ப்பித்தனர்.
“வல்லினம்” இதழ் ஆசிரியர் திரு. அறவேந்தன், மெல்பேர்ன் வள்ளுவர் அறக்கட்டளை மற்றும் தமிழ்ப்பாடசாலைகளின் ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன், திருமதி விஜி இராமச்சந்திரன், திரு. செல்வபாண்டியன், செல்வி லக்ஷிஹா கண்ணன், கவிஞர்கள் திரு. கல்லோடைக்கரன், மணியன் சங்கரன் ஆகியோரும் அடுத்தடுத்து கவிதைகளை சமர்ப்பித்து கலந்துரையாடினர்.
நிகழ்வுக்கு போகும் முன்னர் இருந்த அவநம்பிக்கைகள் நிகழ்வின் இறுதியில் சற்று இழகியிருந்தன. நடைபெற்று முடிந்த அமர்வு, கவிதைகள் தொடர்பாக மெல்பேர்னில் ஒரு ஆரோக்கியமான சூழலுக்கு இடமிருக்கிறது என்ற குண்டுமணியளவு பலத்தை கொடுத்திருந்தது. புதுவையின் கவிதையை எவருமே படிக்காதது போன்ற சில வருத்தங்கள் இருந்தாலும் வருங்காலத்தில் மெல்ல மெல்ல இந்த அமர்வு நிமிரும் என்று நம்பிக்கை உதித்தது. திருமதி கலா பாலஷண்முகன், விஜி ராமச்சந்திரன் போன்றவர்களின் விடாப்பிடியான வாசிப்பு அனுபவங்களும் அறவேந்தன், கல்லோடைக்கரன் போன்றவர்களின் மரபு கவிதை மீதான தீராக்காதலும் கவிதைகள் தொடர்பான பிடிமானத்தை இந்த மண்ணும் மேற்கொண்டு சுமந்து செல்லும் என்ற உறுதிப்பாட்டை தந்தது. செல்வி லக்ஷிகாவின் கன்னி கவிதை அடுத்த தலைமுறையின் கவிதை வாசிப்பு மீதான நம்பிக்கையை அதிகரித்திருந்தது.
நிகழ்விற்கு வந்திருக்கவேண்டிய முக்கிய தளபதிகளான பாடும் மீன் சிறிஸ்கந்தராஜா, ஜெயராமசர்மா போன்றோர் அடுத்தடுத்த அமர்வுகளில் வந்து அதகளம் செய்யவேண்டும் என்பது சிப்பாய்களின் சிறிய வேண்டுகோள்.
அப்புறம், அந்த செழியனின் கவிதையை வாசித்த குழந்தைக்கு – நிகழ்வில் எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட கேசரி மற்றும் வடை போன்றவை இரண்டாம் தடவை கிடைக்கவில்லை என்பதை தவிர, மிகுதி அனைத்தும் சிறப்பாகவே நடந்து முடிந்தது.
(ப. தெய்வீகன்)