சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுகின்ற அரசியலமைப்பு பேரவை, இன்று 10ஆம் திகதி வியாழக்கிழமை கூடவுள்ளது என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றம் நியமனம் பெற்றதன் பின்னர் அரசியலமைப்பு பேரவை இன்றைய தினமே முதன்முறையாக கூடவிருக்கின்றது. புதிய நாடாளுமன்றம் கூடியிருந்தாலும் அரசியலமைப்பு பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் இதுவரையிலும் நியமிக்கப்படவில்லை. எனினும், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு அமைவாக அரசியலமைப்பு பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படாவிட்டாலும் தற்போது செயற்படுகின்ற அரசியலமைப்பு பேரவைக்கு கூடுவதற்கு அதிகாரங்கள் இருக்கின்றன. அதனடிப்படையில் சிவில் பிரதிநிகள் இன்றியே, அரசியலமைப்பு பேரவையின் இன்றைய கூட்டம் கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார். அரசியலமைப்பு பேரவையானது 10 உறுப்பினர்களை கொண்டிருக்கும். இதில், சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் அதிகார பூர்வமாக பங்கேற்பர். ஜனாதிபதி தனது பிரதிநிதியாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை நியமித்துள்ளார். அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, பிரதமரின் பிரதிநிதியாக செயற்படுவார். அமைச்சர் டப்ளியு. டி.ஜே. செனவிரத்ன, கடந்த நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.