பெண் என்றுக்கூட பார்க்காது பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பவானியை முழங்காலிட நிர்பந்தித்த ஊவா மாகாண முதல்வர், சாமர சம்பத் தசாநாயக்கவுக்கு மீண்டும் கல்வி அமைச்சு வழங்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த வடிவேல் சுரேஷ், வெளிநாடு சென்றிருக்கும் ஜனாதிபதி எதிர்வரும் 22 ஆம் திகதி நாடு திரும்பியதும் அவரை நேரில் சந்தித்தது இது தொடர்பில் எடுத்துரைப்பேன் எனவும் தெரிவித்தார்.
சாமர சம்பத் தசாநாயக்கவுக்கு மீண்டும் ஊவா மாகாண கல்வி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருப்பது தொடர்பில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் பசறை தொகுதி அமைப்பாளருமான, வடிவேல் சுரேஷ் தமிழ்மிரருக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்தமை வருமாறு,
“ஊவா மாகாண ஆளுநரிடமே கடந்த மூன்று மாதங்களாக ஊவா மாகாண கல்வி அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. அவர் தென் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், கல்வி அமைச்சானது தற்காலிகமாக ஊவா மாகாண முதலமைச்சர், சாமர சம்பத் தசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்திருக்கின்றது.
முழங்காலிட வைத்த சம்பவம் நடைபெற்று அது தொடர்பிலான விசாரணைகள் நீதிமன்றில் நடைபெற்று வருகின்ற நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்குள் அதிபர், ஆர்.பவானிக்கு பல்வேறு வழிகளில் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது.
இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாது மீண்டும் கல்வி அமைச்சு பதவி வழங்கப்பட்டிருப்பதானது மிகவும் வன்மையாக கண்டிக்கதக்கது.
நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் இவ்வாறு கல்வி அமைச்சை அவர் பொறுப்பேற்றுள்ளது, ஏற்றுக்கொள்ளவே முடியாது.இது தொடர்பில் ஜனாதிபதி நாடு திரும்பியதும் நேரடியாக சந்தித்து எடுத்துரைப்பேன்.அதிபர் ஆர்.பவானிக்கு நீதிக்கிடைக்கும் வரையில் எனது போராட்டம் தொடரும்.” என்றார்.