(Gopikrishna Kanagalingam)
இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மிர் பகுதியில், ஆசிஃபா என்ற 8 வயதேயான சிறுமியொருத்தி, சில நாட்களாக அடைத்து வைக்கப்பட்டு, வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள் என்ற செய்தி தான், இந்தியாவை இப்போது ஆக்கிரமித்திருக்கின்ற முக்கியமான செய்தியாக இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகள், பெண்களுக்குப் பாதுகாப்புக் குறைவான நாடுகளுள் ஒன்றாக இன்னமும் கருதப்படுவதோடு, தினசரி ஏராளமான வன்புணர்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவின் தேசிய தரவுகளின்படி, 2016ஆம் ஆண்டில், வன்புணர்வு தொடர்பாக சுமார் 40,000 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஆனால் இதில் முக்கியமாக, வன்புணர்வுகள் தொடர்பாகவும் பெண்களின் “புனிதம்” தொடர்பாகவும் காணப்படும் பண்பாட்டு ரீதியிலான காரணங்களால், இந்தியாவில் நிகழும் பெரும்பான்மையான வன்புணர்வுகள் தொடர்பில், முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்பது, பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கருத்தாக இருக்கிறது.
தேசிய தரவுகள் கூறும் தகவல்களையே உறுதியான தரவாக எடுத்துக் கொண்டாலும், ஆண்டுதோறும் 40,000 வன்புணர்வுகள் நிகழும் இந்தியாவில், ஒவ்வொரு வன்புணர்வும், தேசிய ரீதியிலான எதிர்ப்பையோ கவனத்தையோ பெறுவதில்லை. இந்தியாவின் தலைநகர் டெல்லியில், 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்புணர்வின் பின்னர், இந்தளவுக்கு தேசிய கவனத்தை ஈர்த்த சம்பவமாக, ஆசிஃபாவின் வன்புணர்வும் கொலையும் அமைந்துள்ளன.
சில சம்பவங்கள் மாத்திரம் தான் தேசிய கவனத்தை ஈர்ப்பதற்கான காரணங்கள் என்னவென்பது, இன்னமும் தெளிவில்லாத ஒன்றாகவே இருக்கிறது. டெல்லியின் கூட்டு வன்புணர்வு வெளிப்படுத்தப்பட்ட போது, “மேல்தட்டு வர்க்கத்தினரின் இடத்தில் இடம்பெற்றது என்பதற்காகத் தான், இவ்வளவு கவனம்” என்ற விமர்சனம், ஒருசில தரப்பினரால் முன்வைக்கப்பட்டிருந்தது. அதன் உண்மை, பொய்களைத் தாண்டி, தேசிய கவனத்தை ஈர்க்கும் காரணங்கள் தொடர்பில், ஓர் ஒற்றுமையைக் காண முடியவில்லை என்பது தான் உண்மையானது.
ஆனால், ஆசிஃபாவின் வன்புணர்வும் கொலையும், தேசிய கவனத்தை ஏன் ஈர்த்தன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. காஷ்மிர் என்ற கலவர பூமியில், இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படும் பகுதி; பாதிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சிறுமி, ஒரு முஸ்லிம்; சிறுமிக்கு வயது 8; கூட்டு வன்புணர்வு அல்லது சங்கிலித் தொடர்ச்சியான வன்புணர்வுகள் போன்ற காரணங்கள், இலகுவாகவே கோபத்தை ஏற்படுத்தக் கூடியன.
அதைத் தாண்டி, கோவிலில் அடைக்கப்பட்டுத் தான், அவள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள். சில நாட்கள், அங்கே அடைக்கப்பட்டிருந்தாள் என, தடயவியல் ஆதாரங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன.
இச்சம்பவம், இவ்வாண்டு ஜனவரியில் இடம்பெற்றிருந்தாலும், மார்ச் மாத முடிவில் தான், இது தொடர்பான தேசிய/சர்வதேச கவனம் ஏற்பட்டிருந்தது. இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ள எண்மரில், நால்வர், பொலிஸார். தடயங்களை அழிக்க முயன்றனர் என்ற குற்றச்சாட்டு, அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது, அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகள் அதிகமாக இடம்பெறுவது வழக்கமாகும். குறித்த சம்பவம் ஏன் இடம்பெற்றது, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளோரின் நோக்கங்கள் என்ன போன்றன, ஊடகங்களால் அதிகமாக அலசப்படும். ஆனால் ஒவ்வொரு முறையும், இந்த மாபெரும் பிரச்சினைக்கான, ஒட்டுமொத்தத் தீர்வு குறித்து, போதுமான கவனம் காணப்படுவதில்லை.
உதாரணமாக, ஆசிஃபாவின் வன்புணர்வு, கொலை ஆகியன, திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டன என்பது தான், விசாரணைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள முக்கியமான விடயமாக இருக்கிறது. 8 வயதுச் சிறுமி மீது, பாலியல் ரீதியான கவர்ச்சி ஏற்பட முடியுமா? (சிறுவர் மீதான பாலியல் இச்சை கொண்டோர் இருக்கின்றனர். ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளோர், அவ்வாறானவர்கள் என்ற கருத்து வெளியாகியிருக்கவில்லை) அவ்வாறாயின், அச்சிறுமி மீது திட்டமிட்டு, வன்முறையைப் பிரயோகிக்க எதிர்பார்த்தமைக்கான காரணம் என்ன?
இந்தக் கேள்விகளுக்கான விடையென்பது முக்கியமானது. ஏனென்றால், வளர்ந்த பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் ஏன் இடம்பெறுகின்றன என்பதற்கும், மேற்படி கேள்விகள் தான் பதில் கூறக் கூடியன.
இதுவரை வெளியாகியுள்ள அநேகமான ஆராய்ச்சிகளின் அடிப்படையில், வன்புணர்வுகளுக்கும் பாலியல் வன்முறைகளுக்குமான பிரதான/முதன்மைக் காரணமாக, ஆண்களின் உரித்துணர்வு என்பது தான் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, பெண்கள், தமக்குரியவர்கள் என்ற உணர்வு. அந்த ஆதிக்க உணர்வு தான், வன்புணர்வு, கொலை வரை கொண்டு செல்கிறது.
சிலர் இதை மறுக்கக் கூடும். ஆனால், ஆய்வுகளின்படி, 90 சதவீதத்துக்கும் அதிகமான பாலியல் வன்முறைச் சம்பவங்கள், பாதிக்கப்படும் பெண்களுக்குத் தெரிந்தவர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவைப் பற்றியே இப்பத்தி அமைவதால், இந்தியாவின் தேசிய தரவுகளின்படி, 95 சதவீதத்துக்கும் அதிகமான வன்புணர்வுகள், பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தெரிந்தவர்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன. இது தான், ஆண்களின் உரித்துணர்வுக்கான தெளிவான உதாரணமாக இருக்கிறது.
“பெண்கள், எங்களுடைய சொத்து” என்று, ஆண்களின் ஓர் அங்கமாகக் கருதப்படுவதால் தான், ஏனைய காரணங்களால் ஏற்படும் வன்புணர்வுகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக, ஆணொருவரை அல்லது குடும்பமொன்றைப் பழிவாங்க வேண்டுமானால், அக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியை வன்புணர்ந்து விட்டால், அந்த ஆணோ அல்லது குடும்பமோ “கறைபட்டு விடும்” அல்லது “அவமானப்படும்” என்ற உணர்வு காணப்படுகிறது.
எந்தவோர் ஆணும், “இந்த ஆண் மீது எனக்குப் பிரச்சினை இருக்கிறது. அதனால், இவ்வாணின் மகனை வன்புணர்ந்து விட்டால், அக்குடும்பத்துக்கே அவமானம் வந்துவிடும்” என எண்ணுவதில்லை. அவ்வாறு எண்ணினால், அது சரியாகிவிடாது. ஆனால், அவ்வாறு நடப்பதில்லை. அதற்கான காரணம், பெண்களைத் தங்கள் உடமைகளாக எண்ணும் ஆண்களின் எண்ணம் தான்.
எனவே தான், “ஆசிஃபாவுக்கு நீதி” என்ற பெயரில், இவ்விடயத்தை நிறுத்திக் கொள்ளாமல், பரந்த நோக்கில் ஆராய வேண்டிய தேவையிருக்கிறது. 8 வயதுச் சிறுமியொருத்தி, வன்புணரப்பட்டுக் கொல்லப்பட்ட பின்னர், அவளுக்கான நீதியென்று எதை வழங்க முடியும்? அவள், உயிருடன் இல்லை. அவளுக்கென நீதி எதுவும் இல்லை.
நீதிமன்றம் மூலம் வழங்கப்படக் கூடியது, குற்றத்தைப் புரிந்தவர்களுக்கான தண்டனை மாத்திரம் தான். அது, ஒருபோதுமே, பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியாக அமையாது.
ஆனால், அவ்வாறான குற்றங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத அளவுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது வேண்டுமானால், ஏதாவதொரு வகையில், உலகத்திலிருக்கும் ஏனைய பெண்களுக்கு வழங்குகின்ற நீதியாக இருக்கலாம். இதை, சட்டத்தால் மாத்திரம் வழங்கிவிட முடியாது என்பது தான் உண்மையானது.
இவ்விடயத்தில் உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டுமாயின், ஆண் சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். நாம் ஏற்றுக் கொண்டாலென்ன, ஏற்காவிட்டாலென்ன, உலகில் ஆதிக்கம் செலுத்தும் சமூகமாக, ஆண் சமூகம் தான் இருக்கிறது. இலகுவான உதாரணத்தைச் சொல்ல வேண்டுமாயின், இலங்கையின் சனத்தொகையில் சுமார் 51 சதவீதமானவர்கள் பெண்களாக இருக்கும் நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில், வெறுமனே 6 சதவீதத்தினர் தான் பெண்களாக இருக்கின்றனர்.
எனவே தான், ஆதிக்கம் செலுத்தும் குழு என்ற அடிப்படையில், பொறுப்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு, ஆண் சமூகத்துக்குப் பொறுப்புள்ளது. ஏனென்றால், ஒடுக்கும் பிரிவைச் சேர்ந்தவர்களாக நீங்கள் இருக்கும் போது, ஒடுக்குதலில் நேரடியாக நீங்கள் ஈடுபடாவிட்டாலும், உங்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஒடுக்கும் போது, உங்களுக்கு நன்மைகள் கிடைக்கின்றன. இதனால் தான், ஒடுக்கும் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கும் போது, ஒடுக்குவதில் ஈடுபடாமலிருப்பது தான், உயர்ந்த பண்பு என எண்ணிவிடலாகாது. மாறாக, ஒடுக்குதலுக்கு எதிராகப் போராடுவது தான், உயர்ந்த பண்பாக அமைய முடியும்.
எனவே தான், வன்புணர்வுகளை நிறுத்துவதற்காக, ஆண் சமூகம் என்ன செய்யப் போகிறது என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய தேவையிருக்கிறது. ஆண்களும் பெண்களும் சமமாகக் காணப்படும் சமூகத்தில், வன்புணர்வுகளின் எண்ணிக்கை, இந்தளவுக்கு மோசமாக இருப்பதில்லை என்ற அடிப்படையில், இரு பிரதான பாலினங்களும் (அத்தோடு, ஏனைய பாலினங்களும்) சமமாக வாழ்கின்ற ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதில், ஆதிக்கம் செலுத்தும் சமூகங்கள் பாடுபட வேண்டும். செய்வதற்குத் தயாராக இருக்கிறதா ஆண் சமூகம்?