வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிப்பதில் மாகாண பதில் முதலமைச்சர் க.சர்வேஸ்வரனுக்கும் மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேவுக்கும் இடையே இன்று (19) காலை முரண்பாடு ஏற்பட்டது. வடக்கு மாகாண செயலாளர்கள் நியமனம் தொடர்பில் மாகாண ஆளுநரும் பதில் முதலமைச்சரும் இன்று (19) காலை சந்திப்பை மேற்கொண்டனர்.
இதன்போது, மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மோகனதாஸ் மாற்றப்படுவதுடன், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக பயிற்சி முகாமைத்துவத்துக்கு பொறுப்பாகவிருக்கும் சிவபாதசுந்தரம் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராகவும், பயிற்சி முகாமைத்துவத்துக்கு பொறுப்பாக தெய்வேந்திரனும் நியமிக்கப்படுவார் என்று ஆளுநரால் பதில் முதலமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நியமனத்தை ஏற்க மறுத்த பதில் முதலமைச்சர், தம்மால் பரிந்துரைக்கப்படுபவர்களை மட்டுமே செயலாளர்களாக நியமிக்க முடியும் என தெரிவித்தார்.
அத்துடன், இந்தியாவில் இருக்கும் முதலமைச்சருடன் தொடர்பு கொண்டு இந்த நியமனங்கள் தொடர்பில் சர்வேஸ்வரன் பேசினார்.
கல்வி அமைச்சின் செயலாளராக தெய்வேந்திரன் நியமிக்கப்படாவிடின், அனைத்து நியமனங்களையும் உடன் நிறுத்துமாறு முதலமைச்சர் தொலைபேசியிலேயே கேட்டுக்கொண்டார்.
அதனையடுத்து ஆளுநரால் இன்று வழங்கப்படவிருந்த செயலாளர் மாற்றலை நிறுத்தி வைக்குமாறு பதில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
அதனால் மாற்றல்கள் ஆளுநரால் பிற்போடப்பட்டது.